சூர்யகுமார் யாதவ் Cricinfo
கிரிக்கெட்

சர்வதேச டி20 வரலாற்றில் அதிக சதங்கள்! ஒரே போட்டியில் 2 உலக சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!

சர்வதேச டி20 போட்டிகளில் 4 சதங்கள் அடித்து ரோகித் சர்மாவின் உலக சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார் சூர்யகுமார் யாதவ்.

Rishan Vengai

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களை மட்டுமே கொண்ட இந்திய அணி, தொடரை சமன் செய்ய போராடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இந்நிலையில் 3வது மற்றும் கடைசி டி20 போட்டியானது ஜோகன்னர்ஸ்பெர்க்கில் உள்ள மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களை குவித்துள்ளது.

கலக்கிய ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யகுமார் யாதவ்!

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது போட்டியை போன்றே முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் அவுட்டாகாத பந்தில் ரிவ்யூ கேட்காமல் 12 ரன்னில் LBW-ல் வெளியேற, அடுத்து களத்திற்கு வந்த திலக் வர்மா கோல்டன் டக்கில் முதல் பந்திலேயே வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்தடுத்து 2 பந்துகளில் 2 விக்கெட்டுகள் விழுந்தாலும், களத்திலிருந்த ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யகுமார் யாதவ் அதிரடியான பேட்டிங்கையே வெளிப்படுத்தினர்.

suryakumar

அதிரடியை நிறுத்தாத இந்த ஜோடி சிக்சர், பவுண்டரிகள் என பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டியது. ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யகுமார் இருவரும் அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்து அசத்த, 3வது விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்தது இந்த ஜோடி. 6 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் என விளாசி 60 ரன்கள் அடித்திருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலை வெளியேற்றினார் ஷம்சி. பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேற, கடைசிவரை களத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ் சிக்சர்களாக பறக்கவிட்டு மிரட்சியை ஏற்படுத்தினார். 7 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் என துவம்சம் செய்த சூர்யகுமார் யாதவ் 56 பந்துகளில் சதத்தை பதிவுசெய்து வெளியேறினார். 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களை குவித்தது இந்திய அணி.

உலக சாதனையை சமன்செய்த சூர்யா!

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த முதல் வீரராக 4 சதங்கள் அடித்து ரோகித் சர்மா சாதனை படைத்திருந்த நிலையில், அதனை சமன்செய்து அசத்தியுள்ளார் சூர்யகுமார் யாதவ். ரோகித் 140 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்திய நிலையில், வெறும் 57 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கும் சூர்யகுமார் 4 டி20 சதங்களை பதிவுசெய்து மிரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.

suryakumar

அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 4, க்ளென் மேக்ஸ்வெல் 4, சூர்யகுமார் 4, பாபர் அசாம் 3, காலின் முன்ரோ 3 என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

3வது பேட்டருக்கு கீழாக இறங்கி 4 சதங்கள்!

சர்வதேச டி20 போட்டிகளில் தொடக்க வீரர்கள் அல்லாமல் 3வது வீரராகவோ அல்லது அதற்கு கீழாகவே களமிறங்கி அதிக சதங்கள் அடித்த வீரர்களில், க்ளென் மேக்ஸ்வெல்லை பின்னுக்கு தள்ளி புதிய சாதனையை படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

suryakumar

மேக்ஸ்வெல் தன்னுடைய 4 சதங்களில் 3 சதங்களை மிடில் ஆர்டரில் இறங்கி அடித்திருந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் 4 சதங்களையும் மிடில் ஆர்டரில் இறங்கி அடித்துள்ளார்.

202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் தென்னாப்ரிக்க அணி 6.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்தனர்.