Pujara & Gavaskar File Image
கிரிக்கெட்

'மில்லியன் ஃபாலோவர்ஸ் இல்லாததால் புஜாராவை நீக்கிவிட்டீர்களா..?' - கவாஸ்கர் சரமாரி கேள்வி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரஹானே தவிர்த்து அனைவருமே பேட்டிங்கில் சொதப்பிய நிலையில், புஜாராவை மட்டும் தேர்வுக் குழுவினர் ஏன் நீக்கியுள்ளனர் எனக் கேள்வியெழுப்பியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

Justindurai S

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாத தொடக்கத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள், ஐந்து டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது. 16 பேர் கொண்ட டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக தொடர்கிறார். துணை கேப்டனாக அஜிங்க்ய ரஹானே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Pujara / WTC

இளம் பேட்ஸ்மேன்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் சீனியர் பேட்டரான புஜாரா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். புஜாரா ரன்கள் சோ்க்க முடியாமல் தடுமாறி வரும் நிலையில் அவருக்கான வாய்ப்பு பறிபோயுள்ளது.

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரஹானே தவிர்த்து அனைவருமே பேட்டிங்கில் சொதப்பிய நிலையில் புஜாராவை மட்டும் தேர்வுக் குழுவினர் ஏன் நீக்கியுள்ளனர் என சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். அவர் இது பற்றி சமீபத்திய அளித்த பேட்டியில், ''வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து புஜாரா ஏன் நீக்கப்பட்டார்? நம்முடைய பேட்டிங் தோல்விக்காக அவர் ஏன் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்? அவர் இந்திய கிரிக்கெட்டின் நம்பகத்தன்மையான வீரர். ஆனால் சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கான ரசிகர்களை கொண்டிருக்காத காரணத்தால் அவரை நீங்கள் எளிதாக நீக்கியுள்ளீர்கள். இதை என்னால் இப்படித்தான் புரிந்துகொள்ள முடிகிறது.

Pujara & Gavaskar

அதே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சொதப்பிய மற்றவர்கள் மீண்டும் வாய்ப்பு பெற்றதற்கும் இவர் நீக்கப்பட்டதற்குமான அளவுகோல் என்ன? இது போன்ற தேர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் இப்போதெல்லாம் தேர்வுக் குழுவினர் ஊடகங்களிடம் நேரடியாக பேசுவதில்லை. கவுன்டி தொடரில் விளையாடும் அவர் நிறைய உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இப்போதுள்ள வீரர்கள் 30 – 40 வயது முதல் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் தொடர்ந்து விளையாடலாம். ஏனெனில் வயது என்பது வெறும் நம்பராக நான் பார்க்கிறேன். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரஹானே தவிர்த்து அனைவருமே பேட்டிங்கில் சொதப்பினர். அப்படிப்பட்ட நிலையில் புஜாராவை மட்டும் தேர்வுக் குழுவினர் ஏன் நீக்கியிருக்கின்றனர் என்பதை விளக்க வேண்டும்” என கூறினார்.