ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 6 அணிகள் பங்கு பெற்றுள்ள 16வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று (ஆகஸ்ட் 30) பாகிஸ்தானில் தொடங்கியது. இதன் முதல் போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த நேபாளத்தை 238 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி.
இந்த நிலையில், பி பிரிவில் இடம்பெற்றிருந்த இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையே இன்று 2வது போட்டி நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த வங்கதேசம் முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. எனினும், இலங்கை அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 42.4 ஓவர்களில் 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
அவ்வணியில் சாண்டோ மட்டும் அதிகபட்சமாக 122 பந்துகளைச் சந்தித்து 89 ரன்களை எடுத்தார். சாண்டோ எடுத்த 89 ரன்கள், ஆசியக் கோப்பை தொடரின் ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக வங்கதேச வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்கள் பட்டியலில் 2வது இடம்பிடித்தது. இதற்கு முன்பு கடந்த 2010ஆம் ஆண்டு ஜூனாத் சித்திக், பாகிஸ்தானுக்கு எதிராக 97 ரன்கள் எடுத்ததே முதல் இடத்தில் உள்ளது. தவிர, ஒருநாள் போட்டியில் ஆசியக் கோப்பையில் வங்கதேச வீரர் எடுத்த அதிகபட்ச ரன் பட்டியலிலும் ஜூனாத் சித்திக் 3வது இடத்தில் உள்ளார்.
இந்தப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய இலங்கை வீரர் மதீஷா பத்திரனா 4 விக்கெட்களை வீழ்த்தினார். இலங்கையின் ‘குட்டி மலிங்கா’ என்று அழைக்கப்படும் இவர், கடந்த ஆண்டு முதல் ஐபிஎல் சீசனில் சென்னை அணியில் இடம்பிடித்திருந்ததுடன், அணி கேப்டன் தோனியாலும் பட்டை தீட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் சீசனில் இவருடைய பங்களிப்பு சிறப்பாக இருந்தது. இந்த நிலையில், இவரும் இந்தப் போட்டியில் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
இலங்கை அணியில் ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த வயதில் 4 விக்கெட்களை வீழ்த்திய இளம்பந்துவீச்சாளர் என்ற சாதனையை மதீஷா பத்திரனா, இன்றைய போட்டியில் நிகழ்த்தியுள்ளார். அவர், 20 வயது 256 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு, கடந்த 1994ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் 20 வயது 280 நாட்களில் நிகழ்த்தியிருந்தார்.
இன்றைய போட்டி குறித்து மதீஷா பத்திரனா, “கடைசியாக நான் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் விளையாடினேன். அங்கு, சில அனுபவங்களைப் பெற்றதன்மூலம் இங்கு வந்தேன். டி20 போட்டிகளுக்குப் பிறகு விரைவில் ஒருநாள் போட்டிகளுக்கு மாறுவது மிகவும் கடினம். ஆனால் நான் அதை சமாளிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.