நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 23வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதிவருகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
ஒரு அற்புதமான லெவன்ஸ் உடன் களமிறங்கியிருக்கும் தென்னாப்பிரிக்க அணி, இந்த உலகக்கோப்பையில் கலக்கிவருகிறது. எந்த அணியை எதிர்த்து விளையாடினாலும் பேட்டிங்கில் மிரட்டும் தென்னாப்பிரிக்க டாப் ஆர்டர் வீரர்கள், ஒவ்வொரு போட்டியிலும் 300 ரன்களுக்கு மேல் குவித்துவருகின்றனர். இந்நிலையில் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியில், டாப் ஆர்டர் வீரர்கள் ஹென்ரிக்ஸ் மற்றும் வான் டர் டஸ்ஸென் இருவரும் சொற்ப ரன்களிலேயே வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். 36 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா தடுமாற, மறுமுனையில் நிலைத்து நின்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயிண்டன் டி-காக் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
3வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் போட்ட கேப்டன் எய்டன் மார்க்ரம் மற்றும் டி-காக் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளாக விரட்டி ரன்களை எடுத்துவந்தனர். இரண்டு வீரர்களும் அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்து அசத்த, பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த டி-காக் சிக்சர்களாக பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார். 7 பவுண்டரிகள் விரட்டி 60 ரன்கள் அடித்திருந்த போது மார்க்ரம் வெளியேற, தொடர்ந்து அதிரடி காட்டிய டி-காக் சதமடித்து அசத்தினார். 101 பந்துகளுக்கு 100 ரன்களை எட்டிய டி-காக் அடுத்த 39 பந்துகளில் 74 ரன்கள் குவித்து மிரட்டிவிட்டார். 15 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் என விரட்டிய டி-காக் 140 பந்துகளில் 174 ரன்கள் குவித்து வெளியேறினார்.
என்னதான் டி-காக் வெளியேறினாலும் அடுத்து கைக்கோர்த்த க்ளாசன் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 8 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என துவம்சம் செய்த க்ளாசன் 90 ரன்களும், 1 பவுண்டரி 4 சிக்சர்கள் விளாசிய டேவிட் மில்லர் 34 ரன்களும் அடிக்க 50 ஓவர் முடிவில் 382 ரன்களை குவித்தது தென்னாப்பிரிக்கா அணி.
இதன் மூலம் உலகக்கோப்பைகளில் அதிக முறை 350 ரன்களுக்கு மேல் அடித்த அணியாக உலக சாதனை படைத்துள்ளது தென்னாப்பிரிக்கா அணி. இந்த பட்டியலில் 7 முறை 350 ரன்களை பதிவுசெய்திருந்த ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி 8வது முறையாக 350 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது தென்னாப்பிரிக்கா. இந்த வரிசையில் 4 முறை 350 ரன்களுடன் இந்திய அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்து 300 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்துள்ளது தென்னாப்பிரிக்கா.
174 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் டி-காக், உலகக்கோப்பையில் அதிகபட்ச ரன்களை பதிவுசெய்த விக்கெட் கீப்பராக மாறி சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் 2007ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆடம் கில்கிறிஸ்ட் அடித்த 149 ரன்கள் என்ற ரெக்கார்டை உடைத்துள்ளார்.