SA vs SL Twitter
கிரிக்கெட்

74 பவுண்டரிகள், 31 சிக்சர்கள், 754 ரன்கள்! ஒரே போட்டியில் தெ.ஆப்பிரிக்கா படைத்த 7 உலக சாதனை!

இலங்கைக்கு எதிரானப் போட்டியில் 428 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்கா அணி பல சாதனைகளை படைத்துள்ளது.

Rishan Vengai

தென்னாப்பிரிக்காவும் உலகக்கோப்பையும் என தனி புத்தகமே எழுதலாம், அதில் அதிக ரன்கள் அடித்த அணி, அதிக சதங்கள் அடித்த அணி, அதிவேக சதம் அடித்த வீரர் என பல சாதனைகளை வாரிக்குவித்திருக்கும் தென்னாப்பிரிக்கா. ஆனால் அவர்களுக்கு முடிவு என்னவோ காதல் முறிவு தான். உலகக்கோப்பை மீதான அவர்களின் காதல் என்பது எப்போதும் கண்ணீர் கதைகளாகவே அமைந்துள்ளன. 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் பேட்டிங்-பவுலிங் என முழுபலத்துடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியே உலகக்கோப்பையை வெல்லும் என எல்லோராலும் சொல்லப்பட்டது.

SA vs NZ Semi Final

அரையிறுதி வரை முன்னேறிய அந்த அணி நியூசிலாந்துடன் தோல்வியை தழுவிய போது, அனைத்து தென்னாப்பிரிக்க வீரர்களும் மைதானத்திலேயே கண்ணீர் சிந்தியது ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனின் நினைவிலும் அப்படியே தான் இருந்துவருகிறது. தங்களுடைய சொந்த அணி கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை, தென்னாப்பிரிக்கா வெல்லட்டும் என சொல்லக்கூடிய கிரிக்கெட் ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில் தங்களுடைய கோப்பை கனவை நினைவாக்கும் எண்ணத்தில் ஒரு குழுவாக களம்கண்டுள்ளது தென்னாப்பிரிக்கா.

3 வீரர்கள் 3 சதம்!

இன்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்திலேயே கேப்டன் பவுமாவை 8 ரன்களில் வெளியேற்றிய இலங்கை அணி நன்றாகவே ஆரம்பித்தது. ஆனால் அதற்கு பிறகு கைக்கோர்த்த டி-காக் மற்றும் டஸ்ஸென் இருவரும் வேறு எண்ணத்தில் விளையாட ஆரம்பித்தனர். எதிர்கொண்ட முதல் 2 பந்திலேயே பவுண்டரிகளை பறக்கவிட்ட டஸ்ஸென், ஒரு பெரிய போட்டிக்கான தீப்பொறியை பற்றவைத்தார். அவ்வளவு தான் அதை பிடித்துக்கொண்ட டி-காக் ஒரு தீப்பிழம்பையே உருவாக்கினார். பவுண்டரிகள், சிக்சர்கள் என அனல்பறந்த போட்டியில் எந்த இலங்கை பந்துவீச்சாளர்களாலும் தண்ணீரை ஊற்ற முடியவில்லை. ஒரு ஓவருக்கு 2 சிச்கர்கள், 2 பவுண்டரிகள் என தொடங்கிய ஆட்டம் 3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என வேகமெடுத்தது. கிரவுண்டின் நாலாபுறமும் வானவேடிக்கை காட்டிய இந்த ஜோடி அடுத்தடுத்து சதங்களை பதிவு செய்து அசத்தியது.

SA vs SL

200 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடியை 12 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசி 100 ரன்கள் அடித்த டி-காக்கை வெளியேற்றி முடிவுக்கு கொண்டுவந்தார் பதிரானா. ஆனால் ஏன் அந்த விக்கெட்டை எடுத்தார் என்பது போல் போட்டியே மாறியது. ஏனென்றால் அடுத்து களத்திற்கு வந்த எய்டன் மார்க்ரம் ருத்ர-தாண்டவமே ஆட ஆரம்பித்தார். மார்க்ரம் அடித்த ஒவ்வொரு பந்தும் எல்லைக்கோட்டிற்கு வெளியே தான் சென்று விழுந்தது. “இலங்கைக்கும் அவருக்கும் எதும் முன்விரோதமா-னு தெரியல” ஒவ்வொரு இலங்கை பவுலர்களையும் வெளுத்துவாங்கிய மார்க்ரம் 14 பவுண்டரிகள், 3 சிக்சர்களை பறக்கவிட்டு 49 பந்துகளில் சதத்தை எடுத்துவந்தார். இந்த சதம் தான் உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட சதமாக மாறியது. உடன் க்ளாசனும், மில்லரும் போட்டிப்போட்டுக்கொண்டு சிக்சர்களை பறக்கவிட, 50 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்கா 428 ரன்களை குவித்தது.

10 ஓவரில் 8 சிக்சர்கள்! மிரட்டிய குசால் மெண்டீஸ்!

429 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு, பதும் நிசாங்காவை 0 ரன்னிலும், குசால் பெரேராவை 7 ரன்னிலும் போல்டாக்கி வெளியேற்றிய மார்க்கோ ஜான்சன் அடிக்கு மேல் அடிகொடுத்தார். ஆனால் “நீங்க மட்டும் தான் அடிப்பிங்களா நாங்க அடிக்க மாட்டோமா” என்பது போல் கெத்து காட்டிய குஷால் மெண்டீஸ், தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மைதானத்தை சுற்றிக்காட்டினார். “இவருக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் எதும் முன்விரோதம் இருந்திருக்கும் போல” முதல் 10 ஓவரிலேயே 8 சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்சியை ஏற்படுத்தினார் மெண்டீஸ். அவ்வளவு எளிதாய் விட்டுக்கொடுத்திடாத குஷால் மெண்டிஸை 76 ரன்னில் வெளியேற்றி நிம்மதி பெருமூச்சு விடவைத்தார் ரபாடா. உடன் சதீராவும் நடையை கட்ட 111 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இலங்கை அணி.

குஷால் மெண்டீஸ்

அவ்வளவு தான் ஆட்டம் முடிஞ்சது என நினைத்த போது தான், மெண்டீஸ் விட்ட இடத்திலிருந்து அசலங்கா வெளுத்து வாங்க ஆரம்பித்தார். 8 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய இவரை 79 ரன்களில் இங்கிடி வெளியேற்றினார். அடுத்து வந்த தனன்ஜெயாவும் நடையை கட்ட கேப்டன் ஷனகா மட்டும் இறுதிவரை விட்டுக்கொடுக்காமல் களத்தில் நின்றார். 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என விரட்டிய இவர் 68 ரன்கள் இருந்த போது போல்டாகி வெளியேறினார். இனி விரைவில் ஆல் அவுட் செய்துவிடலாம் என்று நினைத்த தென்னாப்பிரிக்கா அணிக்கு, கடைசியில் வந்த ரஜிதா ஷாக் கொடுத்தார். ஒருத்தர் போனா இன்னொருத்தர் என போட்டியை கடைசிவரை விட்டுக்கொடுக்காமல் மல்லுக்கட்டிய இலங்கை அணி 44.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 326 ரன்கள் மட்டுமே எடுத்தது. முடிவில் தென்னாப்பிரிக்கா 102 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு பெரிய வெற்றியை பதிவுசெய்தது.

7 உலக சாதனைகள் படைத்த தென்னாப்பிரிக்கா!

1. 428 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்கா, 48 வருட உலகக்கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ரன்களை பதிவுசெய்தது.

2. 49 பந்துகளில் சதமடித்த மார்க்ரம் உலகக்கோப்பை வரலாற்றில் குறைவான பந்தில் சதம் விளாசிய வீரராக மாறினார். முன்னதாக இங்கிலாந்துக்கு எதிராக கெவின் ஓபிரைன் அடித்த 50 பந்துகளில் சதம் என்பதே அதிவேக சதமாக இருந்தது.

மார்க்ரம்

3. உலகக்கோப்பையின் ஒரு இன்னிங்ஸில் 3 வீரர்கள் சதமடிப்பது இதுவே முதல்முறை. இச்சாதனையை டி-காக், டஸ்ஸென் மற்றும் மார்க்ரம் சேர்ந்து படைத்துள்ளனர்.

4. ஒரு உலகக்கோப்பை போட்டியில் இரண்டு அணிகள் சேர்ந்து அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களை தென்னாப்பிரிக்கா-இலங்கை பதிவுசெய்துள்ளன. இந்த போட்டியில் இரண்டு அணியும் சேர்ந்து 754 ரன்களை பதிவுசெய்துள்ளது.

அசலங்கா

5. இந்த போட்டியில் 400 ரன்கள் அடித்ததன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் 3 முறை 400 ரன்களை கடந்த அணியாக தென்னாப்பிரிக்கா முத்திரை பதித்துள்ளது.

6. 74 பவுண்டரிகள், 31 சிக்சர்கள் என சேர்த்து தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் அதிகபட்சமாக 105 பவுண்டரிகளை பதிவு செய்துள்ளன.

வான் டர் டஸ்ஸென்

7. 3 முறை ஒரே இன்னிங்ஸில் 3 தென்னாப்பிரிக்க வீரர்கள் சதமடித்து சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன் 2015-ல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 3 தென்னாப்பிரிக்க வீரர்கள் சதமடித்து அசத்தியுள்ளனர்.

8. அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 8 முறை 400 ரன்களை பதிவுசெய்து அதிக முறை 400 ரன்கள் அடித்த அணியாக தென்னாப்பிரிக்கா முத்திரை பதித்துள்ளது.