Sourav Ganguly & Virat Kohli File Image
கிரிக்கெட்

“டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஏன் என்பதை விராட் கோலி மட்டுமே சொல்ல முடியும்” - கங்குலி

'டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஏன் என்பதை விராட் கோலியால் மட்டுமே விளக்க முடியும்' என்று தெரிவித்துள்ளார் சவுரவ் கங்குலி.

Justindurai S

கடந்த ஆண்டு ஜனவரியில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகினார். அவரின் இந்த திடீர் முடிவு ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கேப்டன் பதவியிலிருந்து விலகியது தொடர்பாக விராட் கோலிக்கும், அப்போதைய பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் இடையே பல்வேறு கருத்து மோதல்கள் இருந்துவந்தன. சொல்லாததை சொன்னதாக இருவரும் மாறி மாறி கூறிவந்தனர். இது பிசிசிஐ நிர்வாகத்திற்கும் விராட் கோலிக்கும் இடையே மோதல் நிலவுவதாக கிளம்பிய யூகங்களுக்கு இன்னும் வலுசேர்த்தது. விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதும் ரோகித் சர்மா இந்திய அணியின் முழு நேர கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

Sourav Ganguly & Virat Kohli

இந்நிலையில் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலியிடம், டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகியது குறித்தான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ''விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியதை பிசிசிஐ எதிர்பார்க்கவில்லை. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஏன் என்பதை விராட் கோலி மட்டுமே விளக்க முடியும். ஆனால், அதைப் பற்றி இப்போது பேசுவதில் அர்த்தமில்லை. கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு அந்த இடத்திற்கு ரோகித் சர்மா தான் சரியான நபராக எங்களுக்கு தோன்றினார்'' என்று கூறினார்.

கடந்த 2021 டிசம்பரில் தென் ஆப்பிரி்க்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அங்கு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக விராட் கோலியே இருந்தார். ஆனால், ஒருநாள் தொடருக்கு கேப்டனாக கோலி நீக்கப்பட்டு, ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். ஒருநாள் அணிக் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டது அவரின் ரசிகர்களுக்கும், கிரிக்கெட் விமர்சர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

Virat Kohli

அதன்பின்னர் ஒருநாள் கேப்டன் பதவி பறிப்புப் பற்றி விராட் கோலி பேசுகையில், இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து முன்னறிவிப்பின்றி நீக்கிவிட்டார்கள் என்றும் நீக்குவதற்கு சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கு முன்புதான் நீக்கிய தகவல் தனக்கே தெரியும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.