இன்று அதிகாலையில் இருந்தே X-ல் உலாவிய கிரிக்கெட் ரசிகர்கள் "Shame On Star Sports", ”STAR SPORTS DIVIDING ICT” போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் ஆவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஸ்டார் ஸ்போர்ட்ஸை மென்ஷன் செய்து ”இந்திய அணியை பிளவு படுத்தாதீர்கள்” என மக்கள் தங்கள் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஏன்? என்ன நடந்தது? எங்கிருந்து துவங்கியது இதெல்லாம்? பார்ப்போம்...
#ShameOnStarSports என்ற ஹேஷ்டேக் X-ல் மீண்டும் ஒரு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ரசிகர்களின் மோதலை கிளப்பியுள்ளது. இந்த மோதலும் சலசலப்பும், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டிக்கான ப்ரீவியூ காணொளியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டதில் இருந்துதொடங்கியது.
வீடியோவின் ப்ரீவியூ போஸ்டரில் அந்தந்த அணிகளின் கேப்டன்களுக்கான இடத்தில் கேன் வில்லியம்சன் உடன் விராட் கோலியின் புகைப்படம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோகித் சர்மா இடத்தில் விராட் கோலியின் படம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் இருக்கும் ப்ரீவியூ போஸ்டரை ஷேர் செய்துவரும் இந்திய ரசிகர்கள், ‘இந்திய அணியின் வெற்றியின் போது ரோகித் சர்மாவின் புகைப்படத்தை போடாத ஸ்டார் ஸ்போர்ட்ஸ், இந்திய அணி தோல்வியை சந்திக்கும் போது மட்டும் ரோகித் சர்மாவை குற்றம் சாட்டுகிறது’ என்று விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர். நடப்பு உலகக்கோப்பையில் ஒரு கேப்டனாக மட்டுமில்லாமல் ஒரு பேட்ஸ்மேனாகவும் 503 ரன்களை குவித்து வரும் ரோகித் சர்மா இந்திய அணியை இரண்டு தூண்களாக (கேப்டன்சியிலும், பேட்ஸ்மேனாகவும்) நின்று எடுத்துச்சென்று வருகிறார்.
மேலும் உலகக் கோப்பையில் இந்தியாவை 9 தொடர் வெற்றிகளுக்கு அழைத்துச்சென்ற கேப்டன் ரோகித்தை பெருமைப்படுத்த தவறியதற்கும், மீண்டும் கோலி மற்றும் ரோகித் ரசிகர்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதற்கும், “Shame On Star Sports", “STAR SPORTS DIVIDING ICT” போன்ற ஹேஷ்டேக்களை பதிவிட்டு இந்திய ரசிகர்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
ரோகித்தின் புகைப்படம் இடம்பெறாத நிலையில் “கோலி, வில்லியம்சன், ரூட், பாபர் அசாமை விட ரோகித் ஒப்பற்றவர்” என சமீபத்தில் பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் கூறியதை ரோகித் ரசிகர்கள் அதிகமாக பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறியதாக ஒரு பதிவையும் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த பதிவில், “ நான் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் இருந்த போது, அவர்கள் என்னிடம் விராட் கோலியைப் பற்றி மட்டுமே பேசுங்கள், அது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆட்டமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரை பாராட்டுங்கள் என கூறினார்கள்” என தெரிவித்ததாக ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
ரசிகர்களின் தொடர் பதிவுகளுக்கு பிறகு தற்போது ரோகித் சர்மா மற்றும் கேன் வில்லியம்சன் இருக்கும் ப்ரீவியூ போஸ்டரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அப்டேட் செய்துவிட்டதாகவும் ரசிகர்கள் பதிவிட்டுவருகின்றனர்.