இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டியில், இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், நடுவர்களுக்கு எதிராக நடந்துகொண்ட விதம் பற்றி பல்வேறு தரப்பிலும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்தச் செயலுக்கு ஹர்மன்ப்ரீத் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் தொடர்ந்து அவருக்கு எதிராக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்திய கேப்டன் டயானா எடுல்ஜி, மிகக் கடுமையாகவே விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடியும் கவுருக்கு எதிரான விமர்சனத்தைத் தொடுத்துள்ளார். இதுகுறித்து அவர், “இது இந்தியாவுக்கு மட்டுமல்ல. கடந்த காலங்களிலும் கிரிக்கெட்டில் நாம் இவற்றைப் பார்த்திருக்கிறோம். இருப்பினும், பெண்கள் கிரிக்கெட்டில் இதை நாம் பார்த்திருக்க முடியாது. களத்தில் அவரது (ஹர்மன்ப்ரீத்) செயல்பாடு அதிகமாகவே இருந்தது. நீங்கள் எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். அவ்வாறு இருக்கையில் உங்கள் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது. கிரிக்கெட்டில் நீங்கள் ஆக்ரோஷமாக செயல்படலாம். ஆனால், அந்த ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய மகளிர் அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியின்போது, இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங் செய்தார். அவர், 14 ரன்கள் எடுத்திருந்தபோது நஹிதா அக்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஸ்லிப்பில் நின்றிருந்த ஃபஹிமா கதூன் கேட்சுக்காக அப்பீல் செய்ய நடுவர் அவுட் கொடுத்தார். அதனால் மிகவும் கோபமடைந்த இந்திய கேப்டன் ஹர்மன், ஸ்டம்புகளை பேட்டால் அடித்துவிட்டு வெளியேறினார். மேலும், இந்தத் தொடரில் நடுவர்களின் செயல்பாடு மிகவும் சுமாராக இருந்தது என கடுமையாக விமர்சித்து பேட்டியும் அளித்திருந்தார். ஹர்மன்ப்ரீத் இப்படிச் செயல்பட்ட விதம்தான் தற்போது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
இந்த விவகாரத்தில், ஐசிசி ஹர்மன்ப்ரீத் கவுருக்கு 2 போட்டிகளில் விளையாட தடை விதித்ததுடன், ஸ்டம்புகளைத் தாக்கியதற்கு போட்டி ஊதியத்திலிருந்து 50 சதவிகிதம் அபராதமும், பொதுவெளியில் நடுவர்கள் பற்றி அவதூறாகப் பேசியதற்காக மேலும் 25 சதவிகிதம் அபராதமும் விதித்தது.