sachin and virat file image
கிரிக்கெட்

குருவை மிஞ்சிய சிஷ்யன்.. சச்சின் சாதனைகளை முறியடித்த விராட்.. விராட்டும் சாதனைகளும்

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வரும் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி கிங் கோலி, சச்சினின் 3 சாதனைகளை முறியடித்துள்ளார்.

யுவபுருஷ்

டி20 உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக 13,000 ரன்கள், 50 ஓவர், 20 ஓவர் உலகக்கோப்பை மற்றும் ஐசிசி தொடர்களில் அதிக முறை ஆட்ட நாயகன் விருதுகள் என்று இந்தியாவின் சாதனை மகனாக நிற்கிறார் ரன் மெஷின் விராட் கோலி.

இந்த நேரத்தில் குரு சச்சினின் சாதனைகளை விராட் கோலி முறியடித்த விவரங்களை பார்க்கலாம்.

சச்சினின் சாதனைகளை முறியடித்த விராட் கோலி!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிகப்படியாக 49 சதங்களை அடித்து சாதனையை சச்சின் தன்வசம் வைத்திருந்த நிலையில், இன்றைய போட்டியில் 50வது சதமடித்து சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார் விராட். 49 சதங்களை அடிக்க சச்சின் டெண்டுல்கர் 493 போட்டிகளை எடுத்துக்கொண்ட நிலையில், வெறும் 291வது போட்டியிலேயே அந்த சாதனையை முறியடித்துள்ளார் விராட் கோலி.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் 8வது முறையாக அரைசதத்தை கடந்த விராட் கோலி, சச்சினின் மற்றொரு சாதனையையும் முறியடித்துள்ளார். அதாவது, கடந்த 2003ம் ஆண்டு, நடந்த உலககோப்பை தொடரில் அதிகப்படியாக 7 அரை சதங்களை விளாசியிருந்தார் சச்சின். இந்த சாதனையையும் தற்போது விராட் முறியடித்துள்ளார்.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் மட்டும் இதுவரை 711 ரன்களை கடந்து சச்சினின் மற்றொரு சாதனையையும் தகர்த்துள்ளார். அதாவது, ஒரே தொடரில் அதிக ரன்களாக, 673 ரன்களை 2003ல் நடந்த தொடரில் பெற்றிருந்தார் சச்சின். தற்போது, இந்த சாதனையையும் தூக்கி சாப்பிட்டுள்ளார் விராட்.

தகர்க்க இருக்கும் சாதனைகள்!

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக 50+ ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்குடன் 2வது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார் விராட் கோலி. இருவரும் தலா 217 முறை அரை சதங்களை எடுத்துள்ளனர். ஆனால், 264 முறை எடுத்துள்ள சச்சின் முதல் இடத்தில் உள்ளார். இந்த சாதனையையும் கோலி விரைவில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (13,705) குவித்த வீரர்களின் பட்டியலிலும் விராட் கோலி, 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ள நிலையில், தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், கோலி இதையும் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.