சச்சின் - விராட் கோலி Twitter
கிரிக்கெட்

“49 - 50.. எனக்கு 365 நாட்கள் ஆனது” - 50வது சதமடிக்க விராட் கோலிக்கு சிறப்பு வாழ்த்து சொன்ன சச்சின்!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் தனது 49வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்து, சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார் விராட் கோலி.

Rishan Vengai

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 8வது உலகக்கோப்பை லீக் போட்டியில் விளையாடிவருகிறது இந்திய அணி. 7 வெற்றிகளுடன் முதலிடத்திலும், 6 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்திலும் இருக்கும் இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டி என்பதால் அதிக எதிர்ப்பார்ப்புடன் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா, சேஸிங்கில் சொதப்பி வரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

சச்சினின் 49 சதங்கள் சாதனையை சமன்செய்த கோலி!

முதலில் விளையாடிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடியான தொடக்கம், ஸ்ரேயாஸ் மற்றும் விராட் கோலியின் அபாரமான பார்ட்னர்ஷிப் காரணமாக வலுவான அடித்தளத்தை அமைத்தது இந்திய அணி. சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்னில் வெளியேறினாலும், கடைசி வரை நிலைத்து நின்ற கிங் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 49வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். விராட் கோலி சதம், கடைசி நேர சூர்யா மற்றும் ஜடேஜா அதிரடி காரணமாக 50 ஓவரில் 326 ரன்களை குவித்தது இந்திய அணி.

virat kohli - sachin

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்கள் அடித்த ஒரே வீரராக இருந்த சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை சமன்செய்த விராட் கோலிக்கு கிரிக்கெட் உலகம் வாழ்த்து தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கிரிக்கெட்டின் கடவுள் என புகழப்படும் சச்சின் டெண்டுல்கரும் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

“எனக்கு 365 நாட்கள் தேவைப்பட்டது”-சச்சின் வாழ்த்து

49 ஒருநாள் கிரிக்கெட் சதங்கள் என்ற இமாலய சாதனை சமன்செய்யப்பட்டாலும், அதை முறியடித்தது ஒரு இந்திய வீரர் தான் என்றவிதத்தில் சச்சின் டெண்டுல்கர் மிகுந்த மகிழ்ச்சியுடனே இருக்கிறார். இந்நிலையில் விராட் கோலிக்கு தன்னுடைய வாழ்த்தை தெரிவித்திருக்கும் சச்சின் டெண்டுல்கர், அடுத்த 50வது சதத்தை விரைவில் எடுத்துவருமாறு கூறியுள்ளார்.

சச்சின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்திருக்கும் வாழ்த்தில், “சிறப்பாக விளையாடினீர்கள் விராட். 49-ல் இருந்து 50 ஆக (வயது) மாற எனக்கு இந்தவருடம் 365 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால் நீங்கள் அடுத்த சில நாட்களில் 50ஆவது சதத்தை விளாசி எனது ரெக்கார்டை முறியடிப்பீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துகள்!” என பதிவிட்டுள்ளார்.