2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. 13வது உலகக் கோப்பைத் தொடரான இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுவரை நடந்த உலகக் கோப்பைகளின் சிறந்த தருணங்களை சற்று அசைபோடுவோம். இந்த எபிசோடில் நாம் பார்க்கப்போவது 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியாவுக்கு எதிராக பான்டிங் ஆடிய இன்னிங்ஸ் பற்றி...
2003 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டி தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னெஸ்பெர்க் நகரில் மார்ச் 23ம் தேதி நடந்தது. அந்தத் தொடரின் ஒவ்வொரு போட்டியையும் வென்ற ஆஸ்திரேலியா தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. ஆஸ்திரேலியாவிடம் மட்டும் தோற்றிருந்த இந்திய அணி மற்ற அணிகளையெல்லாம் பந்தாடி 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
1983ல் உலகக் கோப்பையை வென்றிருந்த இந்தியா அதன்பிறகு இந்தத் தொடரில் தான் ஃபைனலுக்குத் தகுதி பெற்றது. அதனால் இந்திய ரசிகர்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இருந்தாலும் எதிர்த்து ஆடப்போவது ஆஸ்திரேலியா என்பதால் சிறு பயம் இருக்கவே செய்தது. ஏனெனில் மற்ற அணிகளுக்கு எதிராகவெல்லாம் மிகவும் சிறப்பாக ஆடியிருந்த அந்த இளம் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும் தடுமாறியிருந்தது. அந்த அணியுடனான லீக் போட்டியில் வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது. அதனால் இந்திய ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் சௌரவ் கங்குலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அந்த இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு அதுவே முதல் அடியாக அமைந்தது. அந்தத் தொடரில் 18 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் டாப் ஸ்கோரராக விளங்கிய வேகப்பந்துவீச்சாளர் ஜாஹிர் கான் முதல் ஓவரை வீசத் தயாராக இருந்தார். முதல் ஓவரிலேயே நோ பாலும் வைடுமாக வீசி இந்தியாவுக்கு அடுத்த அடியை அவரே வைத்தார். அதன்பிறகு அடுத்த அடியை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் வைத்தனர். அடுத்தடுத்து இடைவிடாமல் வைத்தனர்.
அதிரடியாக ஆடிய ஆடம் கில்கிறிஸ்ட், 48 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய ஹெய்டன் 54 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவர் மட்டும்தான் இந்த இன்னிங்ஸில் நிதானமாக ஆடினார். மூன்றாவது வீரராகக் களமிறங்கிய ரிக்கி பான்டிங் இந்திய ரசிகர்களின் இதயத்தை ஒட்டுமொத்தமாக நொறுக்கினார். ஆரம்பத்தில் பொறுமையாக ஆடிய பான்டிங், தன் முதல் 50 பந்துகளில் 32 ரன்கள் தான் அடித்திருந்தார். அதில் ஒரேயொரு பௌண்டரி மட்டுமே அடித்திருந்தார் . சொல்லப்போனால் தன் முதல் 74 பந்துகளில் ஒரேயொரு பௌண்டரி தான் அடித்திருந்தார் அவர். டேமியன் மார்டின் தான் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தார். ஆனால் 39வது ஓவரில் அனைத்தும் மாறியது.
ஹர்பஜன் வீசிய அந்த ஓவரில் அரைசதம் கடந்த ரிக்கி பான்டிங், அதன்பின் விஸ்வரூபம் எடுத்தார். அந்த ஓவரிலேயே அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் விளாசினார். அதன்பின் சிக்ஸர்களால் தான் ஆட்டத்தை டீல் செய்தார் அவர். ஆஷிஷ் நெஹ்ரா, தினேஷ் மோங்கியா, ஜவகல் ஶ்ரீநாத் என பந்துவீசிய அனைவரது ஓவரிலும் சிக்ஸர்கள் பறந்தன. அதுவும் நெஹ்ரா பந்துவீச்சில் ஒற்றைக் கையில் லெக் சைடில் சிக்ஸர் பறக்கவிட்டார் அவர். 103 பந்துகளில் சதம் கடந்த பான்டிங், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 121 பந்துகளில் 140 ரன்கள் குவித்தார்.
50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 359 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய இந்திய அணியோ 39.2 ஓவர்களில் 234 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா.
பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த இந்திய ரசிகர்களால் பான்டிங்கின் அந்த இன்னிங்ஸையும், அதனால் ஏற்பட்ட தோல்வியையும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவர் பேட்டில் பட்ட பந்துகளெல்லாம் எல்லைக்குப் பறந்த காரணத்தால், 'பான்டிங் ஸ்பிரிங் பேட் வைத்து விளையாடினார்' என்றெல்லாம் நம்மவர்கள் பேசத் தொடங்கினார்கள். அது நடந்தே 20 ஆண்டுகள் ஆகிவிட்டது, அதன்பின் இந்தியா ஒரு உலகக் கோப்பையையும் கூட வென்றுவிட்டது, இருந்தாலும் இந்திய ரசிகர்களால் இன்னும் அந்த அடியை மறந்திருக்க முடியாது!