ரசீத் - ரத்தன் டாடா Twitter
கிரிக்கெட்

இந்திய கொடியை ஏந்தி வலம் வந்தாரா ரஷீத் கான்..அபராதம் விதிக்கப்பட்டதா? 10கோடி வழங்கினாரா ரத்தன் டாடா?

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றதை அடுத்து, ஆப்கானிஸ்தான் வீரர் ரசீத் கான் இந்திய கொடியை ஏந்தி ஊர்வலம் வந்ததாக ஒரு புகைப்படம் வைரலாக பரவியது.

Rishan Vengai

நடப்பு உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆப்கானிஸ்தான் அணி நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து மற்றும் முன்னாள் உலகசாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை போன்ற சாம்பியன் அணிகளை வீழ்த்தி சம்பவம் செய்துவருகிறது. சிறப்பாக செயல்பட்டு வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்தியாவில் அதிகப்படியான ஆதரவும் வரவேற்பும் வழங்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றதையடுத்து முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் மற்றும ஆப்கானிஸ்தான் நட்சத்திரவீரர் ரசீத் கான் இருவரும் மைதானத்திலேயே நடனம் ஆடியது எல்லோராலும் ஈர்க்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் இர்ஃபான் பதான் மற்றும் ரசீத் கான் இருவரும் உள்ளடக்கிய பிரத்யேக புகைப்படத்தை அதிகம் விரும்பும் புகைப்படமாக சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்தனர்.

பாகிஸ்தான் போட்டியில் இந்திய கொடியை ஏந்திய ரசீத்கானுக்கு அபராதம்!

ஒருபுறம் இர்ஃபான் பதான் மற்றும் ரசீத் கான் இருவரும் ஆடிய நடனம் வைரலான நிலையில், இன்னொரு புறம் பாகிஸ்தானுடனான வெற்றியின் போது ரசீத்கான் இந்திய கொடியை ஏந்தி வலம் வந்ததாக ஒரு புகைப்படம் வைரலாகியது. அதைத்தொடர்ந்து ஐசிசி ரசீத்கானுக்கு 55 லட்சம் அபாரதம் விதித்ததாகவும், அதனால் இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா ரசீத்கானுக்கு 10 கோடி ரூபாய் வழங்கவிருப்பதாகவும் பொய் செய்திகள் அதிகமாக வலம்வர தொடங்கின.

rashid khan

ரசீத் கான் கையில் இந்திய கொடியை ஏந்தியவாறு இருக்கும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது மட்டுமல்லாமல், ரத்தன் டாடா உண்மையிலேயே ரசீத் கானுக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்போகிறார் என்ற பொய் தகவலும் காற்றுத்தீயாக பரவியது. இந்நிலையில் இந்த பொய் தகவலை மறுத்துள்ள ரத்தன் டாடா, தங்களுடைய அதிகாரப்பூர்வ பக்கங்களில் வராத எந்த செய்தியையும் நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை! - ரத்தன் டாடா

தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ரத்தன் டாடா, “எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் அபராதம் வழங்குவது அல்லது சன்மானம் வழங்குவது தொடர்பாக எந்த ஐ.சி.சி அல்லது கிரிக்கெட் அதிகாரிகளுக்கும் எந்த பரிந்துரையும் நான் செய்யவில்லை. எனக்கும் கிரிக்கெட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வாட்ஸ்அப்பில் பகிரப்படும் போலியான செய்திகள் மற்றும் வீடியோக்களை யாரும் நம்பவேண்டாம்.

எங்களது அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து வராத வரை, எதையும் யாரும் தயவுசெய்து நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.