விஜய் ஹசாரே தொடர் 2023 தற்போது நடந்து வருகிறது. அணிகள் பல்வேறு குரூப்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த சூழலில் குரூப் E பிரிவில் இடம்பெற்றிருந்த மத்திய பிரதேசம் நாகாலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது.
மும்பையில் உள்ள சரத்பவார் கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் விளையாடிய நாகாலாந்து அணி 41 ஓவர்கள் விளையாடி அனைத்து விக்கெட்களையும் இழந்து 132 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தஹ்மீத் ரஹ்மான் 34 ரன்களையும் சுமித் குமார் 33 ரன்களையும் எடுத்திருந்தனர். சிறப்பாக பந்துவீசிய மத்திய பிரதேச அணியில் குல்வந்த் 4 விக்கெட்களையும், குமார் கார்த்திகேயா 3 விக்கெட்களையும், அர்ஷத் கான் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
133 ரன்கள் என்ற எளிய இலக்கை கொண்டு களமிறங்கிய மத்திய பிரதேச அணி அதிரடியாக ஆடி 9.5 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது. ருத்ரதாண்டவம் ஆடிய ரஜத் படிதார் 27 பந்துகளில் 70 ரன்களைக் குவித்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடக்கம். அவருக்கு இணையாக ஆடிய யஷ் துபே 30 பந்துகளில் 49 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக மத்திய பிரதேச அணி 9.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 133 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
2022 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய ரஜத் படிதார் அத்தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டிருந்தார். அந்த தொடரில் பெங்களூர் அணிக்காக அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் விராட், டுப்ளசிஸ் ஆகியோரைத் தாண்டி மூன்றாவது இடத்தில் இருந்தார். அந்த தொடரில் அவர் 333 ரன்களை எடுத்திருந்தார். அதில் ஒரு சதமும் இரு அரைசதமும் அடக்கம். அனால் 2023 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக படிதார் விளையாடவில்லை.
அந்த போட்டியில் களமிறங்கிய ஷபாஸ் அகமத் 10 போட்டிகளில் விளையாடி 42 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள படிதார் தனது பாணியிலான ஆட்டத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளதால் பெங்களூர் அணிக்காக மீண்டும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாகாலந்து அணியுடனான படிதாரின் ஆட்டத்தை பெங்களூர் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.