இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இந்தியா ஏ அணிகளுக்கு இடையிலான நான்கு நாள் டெஸ்ட் போட்டி, அதிகாரபூர்வற்ற போட்டியாக அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா ஏ அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிவருகிறது. இந்திய அணியில் சாய் சுதர்சன், ரஜத் பட்டிதார், சப்ராஸ்கான், கேஎஸ் பரத் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த லயன்ஸ் அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய கீட்டன் ஜென்னிங்ஸ் மற்றும் அலெக்ஸ் லீஸ் இருவரும் அபாரமான தொடக்கத்தை அமைத்தனர்.
இந்திய பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்தின் தொடக்க ஜோடியை பிரிக்க முடியாமல் தடுமாறினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் அரைசதம் அடித்து அசத்த, 20 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசிய ஜென்னிங்ஸ் சதமடித்து அசத்தினார். அலெக்ஸ் 73 ரன்னிலும், ஜென்னிங்ஸ் 154 ரன்கள் அடித்தும் வெளியேற, தொடர்ந்து களத்திற்கு வந்த கேப்டன் போஹன்னன் 182 பந்துகளில் 124 ரன்கள் விளாசி வலுவாக டோட்டலுக்கு வழிவகுத்தார்.
மிடில் ஆர்டர் வீரர்களாக களமிறங்கிய மவுஸ்லி 68, மேத்யூ போட்ஸ் 44 மற்றும் கார்சன் 53 ரன்கள் அடிக்க, 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 553 ரன்கள் குவித்த லயன்ஸ் அணி டிக்ளர் செய்தது. இந்திய அணி தரப்பில் மனவ் சுதர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
ஒரு பெரிய மலை ரன்களை லயன் குவிக்க, தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை தொடங்கியது இந்திய அணி. லயன்ஸ் அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என எதிர்ப்பார்த்த நிலையில் விக்கெட் வேட்டையாடிய பிரைடன் ஃபிஷர் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். சாய் சுதர்சன் 0 ரன்னிலும், கேப்டன் அபிமன்யூ 4 ரன்னிலும், சர்ஃபாராஸ் கான் 4 மற்றும் ரஞ்சன் பவுல் 0 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேற 50 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது.
ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய பட்டிதார், ஒரு கட்டத்திற்கு மேல் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 132 பந்துகளில் 18 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என விளாசிய அவர் 140 ரன்கள் குவித்து ஆடிவருகிறார்.
என்னதான் பட்டிதார் ரன்களை எடுத்துவந்தாலும், மறுமுனையில் இருந்த வீரர்களை வெளியேற்றிய லயன்ஸ் அணி இரண்டாவது நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது. 215/8 என்ற நிலையில் இருக்கும் இந்திய அணியை தனியொரு ஆளாய் மீட்டுவர பட்டிதார் போராடிவருகிறார். நாளைய ஆட்டத்தில் எந்தளவு இந்தியாவை எடுத்துச்செல்லவிருக்கிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி தற்போது நடைபெற்றுவருகிறது. தொடருக்கு முன் நடந்த டூர் மேட்ச்சில் இந்திய ஏ அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.