BAN vs NZ File image
கிரிக்கெட்

NZ vs BAN | உலகக் கோப்பை: வில்லியம்சன் ரெடி... ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கும் நியூசிலாந்து!

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்ற வங்கதேச அணி, இங்கிலாந்துக்கு எதிராக சரண்டர் ஆனது. இருந்தாலும், போட்டி நடக்கும் சேப்பாக்கம் மைதானத்தைப் பயன்படுத்தி ஏதேனும் மேஜிக் நிகழ்த்த அந்த அணி ஆசைப்படும்.

Viyan

போட்டி 11: வங்கதேசம் vs நியூசிலாந்து

மைதானம்: எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியம், சேப்பாக்கம், சென்னை

போட்டி தொடங்கும் நேரம்: அக்டோபர் 13, மதியம் 2 மணி

2023 உலகக் கோப்பையில் இதுவரை:

வங்கதேசம்

போட்டிகள் - 2,

வெற்றி - 1,

தோல்வி - 1,

முடிவு இல்லை - 0,

புள்ளிகள் - 2

முதல் போட்டி: vs ஆப்கானிஸ்தான் - 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி (92 பந்துகள் மீதம்)

இரண்டாவது போட்டி: vs இங்கிலாந்து - 137 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

புள்ளிப் பட்டியலில் இடம்: ஆறாவது

நியூசிலாந்து

போட்டிகள் - 2,

வெற்றி - 2,

தோல்வி - 0,

முடிவு இல்லை - 0,

புள்ளிகள் - 4

முதல் போட்டி: vs இங்கிலாந்து - 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி (82 பந்துகள் மீதம்)

இரண்டாவது போட்டி: vs நெதர்லாந்து - 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

புள்ளிப் பட்டியலில் இடம்: இரண்டாவது

மைதானம் எப்படி?

சேப்பாக்கம் மைதானத்தைப் பற்றிச் சொல்லவா வேண்டும்! சுழன்று சுழன்று அடிக்கும் ஸ்பின்னர்களுக்கு எப்போதும்போல் சாதகமாக இருக்கும்.

வில்லியம்சன்

களம் காண்கிறார் கேப்டன் வில்லியம்சன்!

நியூசிலாந்து அணி தொடர்ந்து இரண்டு வெற்றிகளோடு உலகக் கோப்பையை அபாரமாகத் தொடங்கியிருக்கிறது. இத்தனைக்கும் தங்கள் கேப்டன் வில்லியம்சன் இல்லாமலேயே உலக சாம்பியன் இங்கிலாந்தையும் கூடப் பந்தாடியது அந்த அணி. இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டிருக்கும் வில்லியம்சன், இந்தப் போட்டியில் களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பயிற்சிப் போட்டியில் விளையாடியிருந்தாலும், 50 ஓவர்கள் ஃபீல்டிங் செய்யும் அளவுக்கு ஃபிட்டாக இல்லாததால், அவர் முதலிரு உலகக் கோப்பை போட்டிகளில் அவர் களம் காணவில்லை. 2019 உலகக் கோப்பையின் தொடர் நாயகன் இப்போது களம் காண்பது நியூசிலாந்து அணியை இன்னும் பலப்படுத்தும். வில்லியம்சன் மட்டுமல்லாது, மற்றொரு சீனியர் வீரர் டிம் சௌத்தியும் ஓரளவு ஃபிட்டாக இருக்கிறார் என்று தெரிகிறது.

ஏற்கெனவே விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்களெல்லாம் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். இப்போது இரு பெரும் ஜாம்பவான்கள் அணிக்குத் திரும்புவது நிர்வாகத்துக்கு கொஞ்சம் இனிமையான தலைவலியாகத்தான் இருக்கும். போதாதற்கு போட்டி சென்னையில் நடைபெறுவதால், கடந்த போட்டியில் களமிறக்கப்படாத ஈஷ் சோதியை அவர்கள் பரிசோதிக்க நினைக்கலாம். ஆக, இல்லாத ஓட்டையை அடைக்க 3 பெரும் பெயர்கள் அங்கு காத்திருக்கின்றன!

ரவீந்திராவின் செயல்பாடும் மைதானத்தின் தன்மையும் அவருக்கு சாதகமாக இருக்குமென்பதால், மார்க் சேப்மேனின் இடம் பறிக்கப்படலாம். இந்த ஆடுகளத்தின் தன்மை கருதி சௌத்தி இன்னொரு போட்டியில் ஓய்வு எடுக்கலாம். ஒருவேளை ஈஷ் சோதியை களமிறக்க நினைத்தால், கடந்த போட்டியில் களமிறக்கப்பட்ட லாக்கி ஃபெர்குசன் வெளியே அமரவேண்டும்.

லாக்கி ஃபெர்குசன்

சேப்பாக்கத்தை பயன்படுத்திக்கொள்ளுமா வங்கதேசம்?

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்ற வங்கதேச அணி, இங்கிலாந்துக்கு எதிராக சரண்டர் ஆனது. இருந்தாலும், போட்டி நடக்கும் சேப்பாக்கம் மைதானத்தைப் பயன்படுத்தி ஏதேனும் மேஜிக் நிகழ்த்த அந்த அணி ஆசைப்படும். ஷகிப் அல் ஹசன், மெஹதி ஹசன் மிராஜ், மஹதி ஹசன் என விக்கெட் எடுக்கக் கூடிய ஸ்பின்னர்கள் அணிவகுத்து நிற்பதால் நிச்சயம் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சவால் கொடுக்க முடியும் என்று அந்த அணி நம்பும். அதே சமயம் பேட்ஸ்மேன்கள் ஓரளவு நல்ல தொடக்கம் கொடுக்கவேண்டும். நியூசிலாந்து ஸ்பின்னர்கள் ஆட்டத்துக்குள் வருவதற்குள் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தினால் அது வங்கதேசத்துக்கு சாதகமாக அமையலாம்.

கவனிக்கவேண்டிய வீரர்கள்!

வங்கதேசம் - ஷகிப் அல் ஹசன்:

அவருக்கு ஏற்ற ஆடுகளமாக சேப்பாக்கம் இருக்கும். பந்துவீச்சில் வழக்கம்போல் அவர் தன் சிறப்பான செயல்பாட்டைக் கொடுத்துவிடுவார். அதேசமயம் நியூசிலாந்து ஸ்பின்னர்களை எதிர்கொள்ள இவரது அனுபவம் வங்கதேசத்துக்கு கைகொடுக்கும். பேட்ஸ்மேன் ஷகிப்பின் மிக முக்கிய இன்னிங்ஸாக இந்தப் போட்டி இருக்கும்.

ஷகிப் அல் ஹசன்

நியூசிலாந்து - கேன் வில்லியம்சன்:

அவர் எத்தனை ரன் எடுக்கிறார் என்பது முக்கியமில்லை. எந்த அளவுக்கு ஃபிட்டாக, எந்த அளவுக்கு வில்லியம்சனாக கம்பேக் கொடுக்கிறார் என்பதைப் பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருப்பார்கள்.

வெற்றி வாய்ப்பு யாருக்கு?

முதல் போட்டியில் 152 அடித்த டெவன் கான்வே, அடுத்த போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய மிட்செல் சான்ட்னர் இருவரும் சேப்பாக்கம் திரும்புகிறார்கள். யாருக்கு வெற்றி வாய்ப்பு என்று இதற்கு மேலும் சொல்லவேண்டுமா!