பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் இளம் வீராங்கனை ஆயிஷா நசீம். 18 வயதான இவர் இதுவரை 4 ஒருநாள் போட்டி மற்றும் 30 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். குறிப்பாக, ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக ஆயிஷா நஷீம் தொடர்ந்து அபாரமாக விளையாடியிருக்கிறார்.
ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக 20 பந்துகளில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரிகளுடன் 44 ரன்களை குவித்திருந்திருக்கிறார். இதன் காரணமாக ஆயிஷா நீஷம், எதிர்கால பாகிஸ்தான் மகளிர் அணியின் நட்சத்திரமாக திகழ்வார் என முன்னாள் வீரர்களால் வர்ணிக்கப்பட்டார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று அறிவித்து உள்ளார் ஆயிஷா நசீம். தனது முடிவை அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மகளிர் அணியானது அடுத்த மாதம் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாடவுள்ள வேளையில் தற்போது அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு தனது ஓய்வு முடிவை கடிதம் மூலமாக அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ''நான் இஸ்லாம் மத வாழ்க்கை முறையை பின்பற்றி நடக்க விரும்புகிறேன். இதன் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவும் முடிவு செய்துள்ளேன். என்னுடைய இந்த கடிதத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த திடீர் முடிவு அந்நாட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.