ஒருவழியாக உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய லீக் போட்டி வெற்றிகரமாக முடிந்திருந்தாலும், அதைச் சுற்றிய விமர்சனங்களும், சர்ச்சைகளும் நின்றபாடில்லை. கடந்த அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் அந்த அணியிடம் தோற்றதில்லை என்ற பெருமையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பாகிஸ்தான் வீரர்களுக்கு மாட்டிறைச்சி உணவு அனுமதிக்கப்படாதது, அந்நாட்டு ரசிகர்களுக்கு விசா வழங்கப்படாதது, சர்ச்சையைக் கிளப்பிய மேக் மை ட்ரிப் (Make My Trip) நிறுவனம் வெளியிட்ட விளம்பரம், இந்தியா - பாகிஸ்தான் போட்டியின்போது கலைநிகழ்சிகளுக்கு சிறப்பு ஏற்பாடு, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு இந்திய வீரர் விராட் கோலி ஜெர்சி வழங்கியது, போட்டியன்று மைதான DJ ஜெய்ஶ்ரீ ராம் பாட்டு போட்டது முதல் அந்நாட்டு வீரர்களை நோக்கி அதே வாசகத்தை (ஜெய்ஶ்ரீ ராம்) ரசிகர்கள் கோஷமிட்டது வரை எல்லாம் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
இந்த நிலையில், மகாராஷ்டிராவில் நாளை (அக்.19) நடைபெற உள்ள போட்டியில் இந்தியாவை தோற்கடித்தால் வங்கதேச வீரர்கள் தன்னுடன் அமர்ந்து சாப்பிடலாம் என பாகிஸ்தான் நடிகை சேகர் ஷின்வாரி தன்னுடைய எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது, இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர், ’வங்கதேச அணி இந்தியாவை வென்றால், அவர்களுடன் இணைந்து டாக்காவில் மீன் குழம்பு உணவைச் சாப்பிட ஏற்பாடு செய்வேன்’ என அதில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் வங்கதேச கிரிக்கெட் அணி நாளை நடக்கும் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய அணி, ஏற்கெனவே தாம் சந்தித்த 3 லீக் போட்டிகளிலும் (ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்) வெற்றிபெற்று, புள்ளிப் பட்டியலிலும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேநேரத்தில் பாகிஸ்தான் தாம் சந்தித்த 3 போட்டிகளில் (நெதர்லாந்து, இலங்கை, இந்தியா) 2இல் வெற்றிபெற்று 4வது இடத்தில் உள்ளது. இதில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்திருந்தது. இதைவைத்துத்தான் வங்கதேசம், இந்தியாவை தோற்கடிக்கும் என நடிகை சேகர் ஷின்வாரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டு (2022) நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின்போது, இவர்தான் “இந்தியா தோல்வியடைய வேண்டும்’ என ட்வீட் செய்திருந்ததுடன், ’ஜிம்பாப்வே அணி இந்தியாவை தோற்கடித்தால், 'ஜிம்பாப்வே பையனை' திருமணம் செய்துகொள்வேன்” எனத் தெரிவித்திருந்தார். ஆனால், அந்தப் போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வேவை வீழ்த்தியிருந்தது.