ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 344 ரன்கள் குவித்தது.அதிரடியாக விளையாடி குஷால் மெண்டீஸ், சமரவிக்ரமா இணை, ஹாரிஸ் ராஃப், ஷாகீன் அஃப்ரிடி ஆகிய பாகிஸ்தானின் முக்கிய பந்து வீச்சாளர்களின் ஓவர்களையும் பவுண்ட்ரி எல்லைக்கு பறக்கவிட்டனர். இருவரின் சதத்தால் ரன்ரேட் உயர்ந்தபோதும், கடைசி நேரத்தில் சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்ததால் ரன்ரேட்டை சரிந்தது.
பின்னர் 345 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் இமாம் உல் ஹக், கேப்டன் பாபர் அசாம் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், தோல்வி உறுதி என்ற நிலை ஏற்பட்டது. எனினும் முகமது ரிஸ்வான், அப்துல்லா ஷபிக் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஷபிக் 113 ரன்களில் ஆட்டமிழந்தபோதும், ரிஸ்வான் 131 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்று வெற்றிக்கு வித்திட்டார். இலங்கை அணி பேட்டிங்கில் கடைசி பத்து ஓவர்களில் 61 ரன்களை மட்டும் சேர்த்ததோடு, பந்துவீச்சில் உதிரிகளாக 26 ரன்களை விட்டுக்கொடுத்ததும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அணியின் பந்துவீச்சும் கவலைக்குறிய வகையில் தொடர்கிறது. இதனிடையே உலகக்கோப்பையில் அதிக ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்து புதிய சாதனையை பாகிஸ்தான் அணி படைத்துள்ளது.