ஃபின் அலென், ஹரிஷ் ரவூப் ட்விட்டர்
கிரிக்கெட்

NZ Vs PAK T20: ஒரே போட்டியில் சாதித்த நியூசி. வீரர்... மோசமான சாதனை பட்டியலில் இணைந்த பாகி. பவுலர்!

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டி20 போட்டியிலும் நியூசிலாந்து அணியே வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து வீரர் சிறப்பான சாதனையையும் பாகிஸ்தான் பவுலர் மோசமான சாதனையையும் செய்துள்ளனர்.

Prakash J

நியூசிலாந்தில் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்தது.

இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது. அவ்வணியில், தொடக்க வீரர் ஃபின் அலென் 62 பந்துகளில் 5 பவுண்டரி, 16 சிக்ஸர்களுடன் 137 ரன்கள் குவித்தார்.

ஒரே போட்டியில் ஒருசில சாதனை படைத்த நியூசி. வீரர்!

இதன்மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்குமுன் 2012-ல் வங்கதேசத்திற்கு எதிராக முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் 123 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. மேலும் டி20 போட்டி ஒன்றில், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற ஆப்கானிஸ்தானின் ஹசரத்துல்லா சாஸாய்யின் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். இருவரும் தலா 16 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்து, 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தத் தொடரில் 3 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.

தொடர்ந்து 3 அரைசதம் எடுத்த பாபர் அசாம்

இந்தத் தொடரில், பாபர் அசாம் 3 டி20 போட்டிகளிலும் தொடர்ந்து அரைசதம் 57, 66, 58 கண்டு அசத்தியுள்ளார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட தொடரில் தோல்வியை சந்தித்த 3 போட்டிகளில் தொடர்ச்சியாக 3 அரைசதங்கள் அடித்த முதல் ஆசிய வீரர் என்ற சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார்.

டி20யில் நியூசி. எதிராக அதிக ரன்களை வழங்கிய பாகி. பவுலர்!

மேலும், சமீபகாலங்களாகவே தடுமாறி வரும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹரிஷ் ரவூப், இன்றைய போட்டியில் 6-வது ஓவரை வீசினார். அதில் ஃபின் ஆலன் 6, 4, 4 என அடுத்தடுத்து பவுண்டரிகளை பறக்கவிட்டதால் பதறிய ரவூப், 4-வது பந்தில் வைடு போட்டார். அதற்காக மீண்டும் வீசப்பட்ட பந்தில் சிக்ஸர் விளாசிய ஆலன், 5-வது பந்திலும் சிக்ஸர் அடித்து கடைசிப் பந்தில் சிங்கிள் ரன் எடுத்தார். இந்த ஒரே ஓவரில் மட்டும் அவர் (6, 4, 4, ஒய்ட், 6, 6, 1) 28 ரன்களை வாரி வழங்கினார். தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட அடுத்த ஓவரிலும் (12-வது ஓவர்) 23 ரன்கள் கொடுத்தார். அந்த வகையில் இப்போட்டியில் மொத்தம் 2 விக்கெட்டை எடுத்த அவர், அதற்கு நிகராக 4 ஓவரில் 60 ரன்களை வழங்கி மோசமான சாதனை படைத்தார். இதன்மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்களை வழங்கிய பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இதற்கு முன்பு, 2018-ல் பாஹீம் அஸ்ரப் நியூசிலாந்துக்கு எதிராக 55/1 ரன்கள் கொடுத்ததே சாதனையாக இருந்தது.