நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது. அவ்வணியில், தொடக்க வீரர் ஃபின் அலென் 62 பந்துகளில் . 5 பவுண்டரி, 16 சிக்ஸர்களுடன் 137 ரன்கள் குவித்ததுடன் ஒருசில சாதனைகளையும் படைத்தார். பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்து, 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தத் தொடரில் 3 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.
முன்னதாக, பாகிஸ்தான் அணியின் தொடக்க பேட்டர் முகம்மது ரிஸ்வான், மேட் ஹென்றி வீசிய 6-வது ஓவரின் 5-வது பந்தை எதிர்கொண்டார். அந்தப் பந்தை அடித்த ரிஸ்வான், பேட்டை கீழே தவறவிட்டதுபோல விட்டுவிட்டு, வெறுங்கையுடன் சிங்கிள் ரன் எடுக்க மறுமுனைக்கு ஓடினார். அப்போது மீண்டும் 2-வது ரன் எடுக்க ஓடி வர வேண்டும் என்பதால் முழுமையாக க்ரீஸுக்குள் செல்லாமல், கீழே குனிந்து கைவிரல்களை வைத்து கிரீஸைத் தொட முயன்றார். ஆனால், அவரது விரல், கிரீஸில் படவில்லை. அவர் சரியாக கிரீஸைத் தொட்டாரா... இல்லையா என ரீப்ளே செய்து பார்த்தார். அப்போது அவர் தொடவில்லை எனத் தெரிந்ததால், இரண்டு ரன்களில் ஒரு ரன் மட்டுமே வழங்கப்பட்டது. நடுவரின் தீர்ப்பினால் மிகுந்த ஏமாற்றித்திற்குள்ளானார் ரிஸ்வான்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மறுபக்கம், அவர் 2-வது ரன்னுக்காக திரும்பி வந்தபோது, அவரை அவுட்டாக்க குறிவைத்து நியூசிலாந்து பீல்டர் பந்தை த்ரோ செய்தபோதிலும், டைவ் அடித்து எப்படியோ தப்பித்தார்.
இன்றையப் போட்டியில், முகமத் ரிஸ்வான் 24 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். வழக்கமாக ரன் எடுக்க ஓடும்போது பேட்ஸ்மேன்கள் பேட்டை கீழே தவறவிடுவது சில சமயங்களில் இயல்பாகவே ஏற்படும். இந்த சூழலில் கிரீஸை எட்டுவதற்கு எளிய வழியாக பேட்ஸ்மேன்கள் கால்களை பொதுவாக பயன்படுத்துவதுண்டு. ஆனால் இந்த விஷயத்தில் ரிஸ்வான் கையைவைத்துவிட்டுச் சென்றதை ரசிகர்கள் வேடிக்கையாகப் பதிவிட்டு வருகின்றனர்.