ஆஸ்திரேலியாவில் நேற்று நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான கிழக்காசிய பசிபிக் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதிச் சுற்றுப் போட்டியில் நியூசிலாந்து அணியும் வனுவாட்டு அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 431 ரன்கள் குவித்தது. வனுவாட்டு அணியினரின் பவுலிங்கை பிரித்து மேய்ந்த போதிலும் எந்த பேட்ஸ்மேனும் சதம் அடிக்கவில்லை.
நியூசிலாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேன் டாம் ஜோன்ஸ் டார்வின் 81 பந்துகளில் 92 ரன்கள் (9 பவுண்டரி) எடுத்து ரன் அவுட் ஆனார். சினேகித் ரெட்டி 77 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். இதில் 12 பவுண்டரிகள் அடங்கும். ஆஸ்கார் ஜாக்சன் 53 ரன்களும், ஒல்லி தெவதியா 55 ரன்களும் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, 432 ரன்கள் எடுத்தால் வெற்றி என இமாலய இலக்குடன் களமிறங்கிய வனுவாட்டு அணி பேட்ஸ்மேன்கள் களத்திற்கு வருவதும் போவதுமாக இருந்தனர். அந்த அணியில் ஒரேயொரு பேட்ஸ்மேனை தவிர மற்ற அனைவரும் ஒற்றை படை இலக்க ரன்னில் நடையைக் கட்டினர். அதிகபட்சமாக அந்த அணியின் வீரர் ரேமண்டோ லேகாய் 11 ரன்கள் எடுத்திருந்தார். 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வனுவாட்டு அணி வெறும் 35 ரன்களுக்குள் சுருண்டது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 396 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் ரியான் சோர்காஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
தொடரின் முதலாவது ஆட்டத்தில் ஜப்பானை 162 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நியூசிலாந்து, இரண்டாவது போட்டியில் வனுவாட்டு அணியை 396 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வீறுநடை போட்டு வருகிறது.