மூன்று ஐசிசி உலகக்கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனான மகேந்திர சிங் தோனி, தன்னுடைய ஓய்விற்கு பிறகு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் கிரிக்கெட் அகாடமியை தொடங்கி நடத்திவருகிறார். இதுவரை இந்தியா, நியூசிலாந்து, லண்டன், கத்தார், யுஏஇ, கனடா முதலிய நாடுகளில் 49 கிரிக்கெட் அகாடமிகளை திறந்துள்ள எம்எஸ் தோனி, 10ஆயிரம் மாணவர்களுக்கு மேல் நேரடியாகவும், 10ஆயிரம் மாணவர்களுக்கு மேல் ஆன்லைன் வழியாகவும் கற்பித்தலை நடத்திவருகிறார்.
இந்நிலையில்தான் உலகளவில் கிரிக்கெட் அகாடமிகளை அமைப்பதற்காக எம்எஸ் தோனி கிரிக்கெட் அகாடமியுடன் ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடட் ஒப்பந்த ரீதியில் கைக்கோர்த்தது. சென்னையில்கூட எம்எஸ் தோனி தரப்பில் ஆரம்பிக்கப்பட்ட எம் எஸ் தோனி கிரிக்கெட் அகாடமியை ஆர்கா ஸ்போர்ட்ஸ் லிமிடட் நிறுவனமே அமைத்தது.
கடந்த 2020ம் ஆண்டு சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், (MS Dhoni-CSS High Performance Centre) எம்எஸ் தோனி-சிஎஸ்எஸ் உயர் செயல்திறன் மையம் தொடங்கப்பட்டது. இதற்கு தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பேட்ஸ்மேன் டேரில் கல்லினன் பயிற்சி இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இப்படி தொடர்ந்து எம்எஸ் தோனி கிரிக்கெட் அகாடமியை ஒப்பந்த அடிப்படையில் ஆர்கா ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமே நடத்திவந்தது. தோனி அகாடமியின் செயல்பாடுகளில் நேரடியாக ஈடுபடவில்லை, ஆனால் அதில் பங்கு வைத்து ஆலோசனைகளை மட்டும் வழங்கிவந்ததாக கூறப்படுகிறது. தோனி மூலம் நடத்தப்படும் பயிற்சித் திட்டத்திற்கு “The Dhoni Way” என்றும் பெயரிடப்பட்டது.
இந்நிலையில்தான் எம்எஸ் தோனி அகாடமியுடன் போடப்பட்ட ஒப்பந்தங்களை மதிக்காமல் ரூ.15 கோடியை மோசடி செய்துவிட்டதாக, ஆர்கா ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மீது தோனி தரப்பில் ராஞ்சி நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆர்கா ஸ்போர்ட்ஸ் (Aarka Sports and Management Limited) நிறுவனத்தின் மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா விஷ்வாஷ் மீது, முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி ராஞ்சி நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடர்ந்திருப்பதாக இந்தியா டுடே செய்திவெளியிட்டது.
இந்தியா டுடே செய்தியின் படி, “உலகளவில் கிரிக்கெட் அகாடமியை அமைப்பதற்காக 2017ம் ஆண்டு MSD நிறுவனத்துடன் திவாகர் ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை திவாகர் கடைபிடிக்கவில்லை எனத் தெரிகிறது. ஆர்கா ஸ்போர்ட்ஸ் ஒரு உரிமைக் கட்டணத்தைச் செலுத்தவும், ஒப்பந்த விதிமுறைகளின்படி லாபத்தைப் பகிர்ந்து கொள்ளவும் கடமைப்பட்டுள்ளது, ஆனால் அவை மதிக்கப்படவில்லை என்று தோனி தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த குற்றச்சாட்டு குறித்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஆர்கா நிறுவனம் தொடர்ந்து புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக, கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதியன்று ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரபூர்வ ஒப்பந்த கடிதத்தை தோனி தரப்பு திரும்பப் பெற்றது.
மோசடி பணத்தை திரும்ப செலுத்த பல சட்ட அறிவிப்புகளை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் ஆர்கா நிறுவனம் இதுகுறித்து எந்த பதிலையும் அளிக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து விதி அசோசியேட்ஸ் மூலம் எம்எஸ் தோனியை பிரதிநிதித்துவப்படுத்தும் தயானந்த் சிங் கூறுகையில், ஆர்கா ஸ்போர்ட் நிறுவனத்தால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகவும், இதன் விளைவாக ரூ. 15 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ரஞ்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.