தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. டி20 தொடரில் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி 1-1 என தொடரை சமன் செய்த நிலையில், இரண்டு அணிகளுக்குமான ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்குகிறது.
கேஎல்ராகுல் தலைமையிலான இந்திய அணி பெரிய சவாலை எதிர்நோக்கி களமிறங்குகிறது. நடந்து முடிந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெறும் இந்த ஒருநாள் தொடரானது அதிகப்படியான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்தான் ஒருநாள் தொடரிலிருந்து தீபக் சாஹர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் முதலிய வீரர்கள் விலகுவது குறித்த புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. அதேபோல டெஸ்ட் தொடரிலிருந்து நட்சத்திர வீரர் முகமது ஷமியும் விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
2023 ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்ட முகமது ஷமி, கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவருடைய உடற்தகுதியை பொறுத்தே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா இல்லையா என்பது தெரியும். மேலும் மருத்துவக்குழு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் தகுதியை ஷமி எட்டிவிட்டார் என்று சொன்னால் மட்டுமே மற்ற எந்த முடிவையும் எடுக்கமுடியும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இன்னும் ஷமி முழுமையான உடற்தகுதியை எட்டாதநிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் ஷமிக்கான மாற்றுவீரரை பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் பங்கேற்றிருந்த தீபக் சாஹர், திடீரென தொடரிலிருந்து விலகுவதாக BCCI இடம் கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. அவருடைய குடும்பாத்தாரின் மருத்துவ அவசரநிலை காரணமாக தீபக் சாஹர் பங்கேற்கவில்லை என விளக்கப்பட்டுள்ளது. அவருக்கு மாற்று வீரராக ஆகாஸ் தீப் இடம்பிடித்துள்ளார்.
அதேபோல காயத்திலிருந்து மீண்டு சமீபத்தில் அணியில் இடம்பிடித்த ஸ்ரேயாஸ் ஐயரும், முதல் ஒருநாள் போட்டியில் மட்டுமே பங்கேற்பார் எனக் கூறப்பட்டுள்ளது. அவர் நேராக டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்பார், மாறாக 2-ம் மற்றும் 3-ம் ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டார் எனவும் கூறப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியானது நாளை ஜோகன்னஸ்பர்க்கில் 1.30 மணிக்கு தொடங்குகிறது.