Kusal Mendis PTI
கிரிக்கெட்

AUSvSL | ஆஸ்திரேலியா பத்தாவது... இலங்கை எட்டாவது... லக்னோவில் வாழ்வா சாவா ஆட்டம்..!

தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சொதப்பியிருந்தாலும், தன் ஒரு இன்னிங்ஸால் மொத்த மேட்சையும் புரட்டிப்போடக்கூடியவர் மிட்செல் மார்ஷ்.

Viyan
போட்டி 14: ஆஸ்திரேலியா vs இலங்கை
மைதானம்: ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ
போட்டி தொடங்கும் நேரம்: அக்டோபர் 15, மதியம் 2 மணி

2023 உலகக் கோப்பையில் இதுவரை:

ஆஸ்திரேலியா
முதல் போட்டி vs இந்தியா: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி
இரண்டாவது போட்டி vs தென்னாப்பிரிக்கா: 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
புள்ளிப் பட்டியலில் இடம்: பத்தாவது

இலங்கை
முதல் போட்டி vs தென்னாப்பிரிக்கா: 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
இரண்டாவது போட்டி vs பாகிஸ்தான்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி
புள்ளிப் பட்டியலில் இடம்: எட்டாவது

கடைசி இடத்தில் ஆஸ்திரேலியா? பழைய அணி மீண்டு வருமா?

ஒரு உலகக் கோப்பை புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி கடைசி இடத்தில் இருக்கிறது என்பதை யாராலும் நம்ப முடியாது. ஆனால் இந்த உலகக் கோப்பையில் அதுதான் நடந்திருக்கிறது. பேட்டிங், பௌலிங் என இரண்டு ஏரியாவிலுமே பலவீனமாகத் தெரிகிறது அந்த அணி. அணியின் ஸ்டார் வீரர்கள் இன்னும் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். கம்மின்ஸின் கேப்டன்சி அனுபவம், ஒரேயொரு முழுநேர ஸ்பின்னர் மட்டும் இருப்பது, ஓப்பனர் மார்ஷின் ஃபார்ம் என அந்த அணிக்கு முன் இருக்கும் பிரச்சனைகள் பெரிய பட்டியலாக நீண்டுகொண்டிருக்கிறது. தொடர்ந்து போட்டிகளில் விளையாடியது அந்த அணியின் ஃபிட்னஸில் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் இந்தப் போட்டியில் ஏதேனும் மாற்றத்தை நாம் பார்த்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

என்னதான் தடுமாறிக்கொண்டிருந்தாலும் ஆஸ்திரேலிய அணி ஒருசில விஷயங்களால் கொஞ்சம் ஆசுவாசப்படலாம். அவர்கள் தோற்ற இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும் அணிகளாகத் தெரிகின்றன. ஆஸ்திரேலியாவுக்கு சவால் கொடுக்கும் என்று கருதப்படும் இங்கிலாந்து, நியூசிலாந்துக்கு அடுத்து இப்போது ஆப்கானிஸ்தானிடமும் தோற்றிருக்கிறது. இது நிச்சயம் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பை கொஞ்சம் அதிகரித்திருக்கிறது. அதனால் அதீத நெருக்கடி இல்லாமல் இந்தப் போட்டியை அவர்கள் எதிர்கொள்ளலாம்.

கேப்டன் ஷனகா இல்லை. எழுச்சி பெறுமா இலங்கை!

தொடர்ந்து 2 தோல்விகளை சந்தித்திருக்கும் மற்றொரு அணியான இலங்கைக்கு இன்னொரு அதிர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது. தொடர் தொடங்குவதற்கு முன்பிருந்தே ஃபிட்னஸ் பிரச்சனையால் அவதிப்பட்டுவந்த கேப்டன் தசுன் ஷனகா, இப்போது உலகக் கோப்பை தொடரில் இருந்தே விலகியிருக்கிறார். அவருக்குப் பதிலாக சமிகா கருணரத்னே அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஷனகாவைப் போல் அவரும் பேட்டிங், பௌலிங் இரண்டிலும் கைகொடுக்கக்கூடியவர் என்பதால், அவர் பிளேயிங் லெவனிலும் இடம்பெறலாம். ஷனகாவுக்குப் பதில் குசல் மெண்டிஸ் அணிக்குத் தலைமை தாங்குவார். அதுமட்டுமல்லாமல் தோள்பட்டை காயத்தால் அவதிப்படும் வேகப்பந்துவீச்சாளர் மதிஷா பதிரானா விளையாடுவதும் சந்தேகம் என்று கூறப்படுகிறது.

மைதானம் எப்படி?

Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium lucknow

ஐபிஎல் தொடரில் சந்தித்த விமர்சனங்களுக்குப் பிறகு மாற்றப்பட்ட லக்னோ ஆடுகளம் முந்தைய போட்டியிலும் ஒரு புரியாத புதிராகவே இருந்தது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங்குக்கு நன்கு ஒத்துழைத்த ஆடுகளம், இரண்டாவது இன்னிங்ஸில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு கைகொடுக்கத் தொடங்கியது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியை ஆஸ்திரேலிய அணி இங்குதான் விளையாடியது என்பதால், அந்த அனுபவம் கொஞ்சமேனும் தங்களுக்குக் கைகொடுக்கும் என்று அந்த அணி நம்பும்.

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்:

ஆஸ்திரேலியா - மிட்செல் மார்ஷ்: தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சொதப்பியிருந்தாலும், தன் ஒரு இன்னிங்ஸால் மொத்த மேட்சையும் புரட்டிப்போடக்கூடியவர் மிட்செல் மார்ஷ். இந்திய ஆடுகளங்களை விரும்பும் அவர், எப்போதுமே ஒரு சொதப்பலுக்குப் பிறகு ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடியிருக்கிறார். பலவீனமாக இருக்கும் இலங்கையின் பந்துவீச்சு, அவர் தன் ஃபார்மை மீட்பதற்கான சரியான வாய்ப்பாக இருக்கும்.

இலங்கை - குசல் மெண்டிஸ்: இரண்டு போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரைசதம் விளாசியிருக்கும் ஒரு வீரரைத் தாண்டி கண்கள் யார் மீது செல்லும். இலங்கை அணியின் பெரிய நம்பிக்கையாக, சொல்லப்போனால் ஒரே நம்பிக்கையாக இப்போது இருப்பது குசல் மெண்டிஸ் தான். பேட்டிங் எதிர்பார்ப்பைத் தாண்டி இப்போது அணியையும் வழிநடத்தப்போகிறார் அவர்!