ஆஸ்திரேலியா அறிவித்திருக்கும் உலகக்கோப்பைக்கான அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன் மார்னஸ் லாபுஷான் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் ஸ்பின்னர் தன்வீர் சங்காவுக்கு இந்த அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடக்கிறது. இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட ஸ்குவாடை அறிவிப்பதற்கு செப்டம்பர் 28 கடைசி நாள் என்று அறிவித்திருக்கிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். ஒவ்வொரு அணிகளும் உலகக் கோப்பைக்கான சரியான அணியைக் கண்டுகொண்டிருக்கும் நிலையில், 18 பேர் கொண்ட முதல் கட்ட அணியை சமீபத்தில் அறிவித்திருக்கிறது ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் போர்டான கிரிக்கெட் ஆஸ்திரேலியா. முன்னாள் கேப்டன் ஜார்ஜ் பெய்லி தலைமையிலான தேர்வுக் குழு பல அதிரடி முடிவுகளை எடுத்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் முதல் கட்ட உலகக் கோப்பை அணி:
பேட்ஸ்மேன்கள்: டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர்
ஆல் ரவுண்டர்கள்: கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ்
விக்கெட் கீப்பர்கள்: அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்லிஸ்
வேகப்பந்துவீச்சாளர்கள்: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஷான் அபாட், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க்
ஸ்பின்னர்கள்: ஆஷ்டன் அகர், தன்வீர் சங்கா, ஆடம் ஜாம்பா
இந்த ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டபோது அதில் மார்னஸ் லாபுஷான் இல்லாதது பலருக்கும் ஆச்சர்யமளிப்பதாக இருந்தது. ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கடந்த சில ஆண்டுகளாக விளங்கி வரும் அவர், டெஸ்ட் அரங்கில் மிகச் சிறந்த வீரர்களுள் ஒருவராகத் திகழ்கிறார். ஆனால், ஒருநாள் அணியைப் பொறுத்தவரை அவர் இடம்பெறாதது பெரிய ஆச்சர்யம் என்று சொல்ல முடியாது.
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை இந்தியாவைப் போல் அல்லாமல், அந்த அணியில் ஆல் ரவுண்டர்கள் நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே மிகச் சிறந்த ஃபார்மிலும் இருக்கிறார்கள். கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகிய நால்வருமே நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம்பெறவேண்டியவர்கள். இவர்கள் போக ஒரு விக்கெட் கீப்பர் இடம்பெற்றாகவேண்டும்.
ஸ்டீவ் ஸ்மித் கட்டாயம் இடம்பெறுவார். மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும் டிராவிஸ் ஹெட்டுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைப்பது கேள்விக்குறிதான். காரணம் டேவிட் வார்னர் வேறு இந்த ஸ்குவாடில் இருக்கிறார். ஆக, 7 இடங்களுக்கு ஏற்கெனவே 8 டாப் வீரர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்கள் போக பேக் அப் விக்கெட் கீப்பர் ஸ்லாட்டுக்கு ஜோஷ் இங்லிஸ் வேறு! அதனால் மார்னஸ் லாபுஷான் நிச்சயம் உலகக் கோப்பைக்கான திட்டங்களில் இருக்க வாய்ப்பில்லை.
சொல்லப்போனால், இது ஆஸ்திரேலிய அணி என்பதால் உலகக் கோப்பைக்கான இறுதி ஸ்குவாடில் டேவிட் வார்னரே இடம்பெறாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. வார்னரின் சமீபத்திய ஃபார்ம் அவ்வளவு சிறப்பாக இல்லை. கடைசியாக நடந்த முடிந்த ஆஷஸ் தொடரில் தடுமாறியிருக்கிறார். இருந்தாலும் ஒருநாள் ஃபார்மட்டில் ஓரளவு சிறப்பாக ஆடியிருக்கிறார் என்பதால் அவரை அவ்வளவு சீக்கிரம் தவிர்த்துவிடவும் முடியாது. அதனால் 15 பேர் கொண்ட இறுதி அணியை அறிவிக்கும்போது நிச்சயம் பெரிய அதிர்ச்சிகள் காத்திருக்கிறது.
எதிர்பார்த்த ஒரு வீரர் இல்லாததுபோல், எதிர்பாராத இரண்டு வீரர்களும் இந்த அணியில் இடம்பிடித்திருக்கிறார்கள். 24 வயது ஆல் ரவுண்டரான ஆரோன் ஹார்டிக்கு இந்த அணியில் இடம் கிடைத்திருக்கிறது. நிறைய ஆல் ரவுண்டர்கள் அணியில் இடம்பெற்றிருக்கும் நிலையில் இன்னொரு ஆல் ரவுண்டரை ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் தேர்வு செய்திருப்பது புருவங்களை உயர்த்தியிருக்கிறது.
அதேபோல் இளம் ஸ்பின்னர் தன்வீர் சங்காவுக்கு இந்த அணியில் இடம் கிடைத்திருக்கிறது. 21 வயதேயான சங்கா லெக் ஸ்பின்னர். இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், ஆடம் ஜாம்பா மற்றும் ஆஷ்டன் அகர் ஆகியோருடன் சங்காவும் இடம்பெற்றிருக்கிறார். சிட்னியில் பிறந்தவரான சங்கா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். ஜலந்தரைச் சேர்ந்தவரான அவருடைய தந்தை 1997ல் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்தார்.
ஹார்டி, சங்கா இருவரும் இதற்கு முன் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியதில்லை. ஒருமுறை சங்கா ஸ்குவாடில் இடம்பெற்றிருந்தாலும் அவருக்கு ஆஸ்திரேலிய அறிமுகம் கிடைக்கவில்லை. இருந்தாலும் உலகக் கோப்பைக்கு முன்பான தென்னாப்பிரிக்க தொடரிலும், இந்திய தொடரிலும் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறைய ஆல்ரவுண்டர்கள் இருப்பதால் ஹார்டிக்கு இடம் கிடைப்பது கடினம் தான். ஆனால் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் சங்கா உலகக் கோப்பை அணியில் இடம்பெறக்கூடும்!