லாக்கி ஃபெர்குசன் R Senthil Kumar
கிரிக்கெட்

NZvBAN | தேவையான நேரத்தில் தேவையான பெர்ஃபாமன்ஸ்... ஃபெர்குசன் அசத்தல்..!

அதிர்ஷ்டவசமாக இந்தியா முழுவதும் பயணித்து விளையாடும் வாய்ப்பு பெற்றிருக்கிறேன். இந்த மைதானத்தில் நான் அதிகம் விளையாடியதில்லை. ஆனால் எனக்கு சாதகமாக இருந்த ஒரு ஆடுகளத்தில் ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது.

Viyan
போட்டி 12: வங்கதேசம் vs நியூசிலாந்து
போட்டி முடிவு: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி (வங்கதேசம் - 245/9; நியூசிலாந்து - 248/2, 42.5 ஓவர்கள்)
ஆட்ட நாயகன்: லாக்கி ஃபெர்குசன் (நியூசிலாந்து)
பௌலிங்: 10-0-49-3

லாக்கி ஃபெர்குசனின் இந்த சூப்பர் செயல்பாட்டின் முக்கியத்துவத்தை இந்தப் போட்டியின் சூழ்நிலையை விட, நியூசிலாந்து ஸ்குவாடின் சூழ்நிலையின் மூலமாகவே முழுமையாக விளக்கிட முடியும். நியூசிலாந்து அணி டிம் சௌத்தி, டிரென்ட் போல்ட், லாக்கி ஃபெர்குசன், மேட் ஹென்றி என 4 வேகப்பந்துவீச்சாளர்களை தங்கள் ஸ்குவாடில் கொண்டிருக்கிறது. அதுபோக ஜேம்ஸ் நீஷம், டேரில் மிட்செல் என ஃபாஸ்ட் பௌலிங் ஆல் ரவுண்டர்களும் இருக்கிறார்கள். அதனால், எந்தெந்த வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும் என்ற பெரும் கேள்வி எழுந்தது.

எப்படியும் டிரென்ட் போல்ட் விளையாடவேண்டும். தி 100 போன்ற தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அட்டகாச ஃபார்மில் வந்தார் ஹென்றி. சௌத்தி, ஃபெர்குசன் போன்ற சீனியர் வீரர்கள் காயமடைந்திருந்தால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் அவர்கள் விளையாடவில்லை. காயத்திலிருந்து மீண்டு வந்த லாக்கி ஃபெர்குசன் இரண்டாவது போட்டியில் நீஷமுக்குப் பதில் விளையாடினார். மூன்றாவது போட்டிக்கு முன்பாக சௌத்தியும் ஓரளவு ஃபிட்டாகிவிட்டார் என்ற செய்தி வந்தது. ஹென்றி முதலிரு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு மொத்தம் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதால், அவ்வளவு எளிதாக அவரை வெளியே அமரவைக்க முடியாது. போதாக்குறைக்கு ஸ்பின்னுக்கு சாதகமான ஆடுகளங்களுக்கு ஈஷ் சோதியும் போட்டிக்கு வருவார். இப்படிப்பட்ட நிலையில் லாக்கி ஃபெர்குசனின் இடம்தான் எளிதில் இழக்கக்கூடியதாக இருந்தது. அப்படிப்பட்ட நிலையில் தான் வங்கதேசத்துக்கு எதிராக சூப்பர் செயல்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார் ஃபெர்குசன்.

எட்டாவது ஓவரில் 144 kmph அதிவேக பந்தால் தன்சித் ஹசனை வெளியேற்றிய அவர், நல்ல ஃபார்மில் இருக்கும் மெஹதி ஹசன் மிராஜை 12வது ஓவரில் அவுட்டாக்கினார். 30வது ஓவரில் இந்தப் போட்டியின் மிகப் பெரிய விக்கெட்டையும் தனதாக்கினார் ஃபெர்குசன். அவர் வீசிய பௌன்சரை சரியாக ஆட முடியாமல் எட்ஜாகி கீப்பரிடம் கேட்சானார் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன். மிடில் ஓவர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வங்கதேச அணியின் ரன்ரேட்டுக்குப் பெரும் முட்டுக்கட்டை போட்டார். அதனால்தான் வில்லியம்சன், டேரில் மிட்செல் போன்றவர்கள் பெரிய இன்னிங்ஸ் ஆடியும் ஆட்ட நாயகன் விருது ஃபெர்குசனுக்குக் கொடுக்கப்பட்டது. இனி சௌத்தியே வந்தாலும், அவரை ஆடவைக்க நியூசிலாந்து அணி உறுதியாக இருந்தாலும், ஃபெர்குசனின் இடம் கொஞ்சம் அசைக்க முடியாதது தான். ஏனெனில், ஃபெர்குசன் இந்தப் போட்டியைப் போலவே மிடில் ஓவர்களில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்.

ஆட்ட நாயகன் என்ன சொன்னார்?

"இது நியூசிலாந்து அணியின் வழக்கமான ஒரு கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. எல்லோருமே சிறப்பாகப் பந்துவீசி போட்டு மொத்தமும் நெருக்கடியை ஏற்படுத்தினர். அதனால் நான் வந்து என்னுடைய வேலையை எளிதாக சிறப்பாக செய்ய முடிந்தது. ஹைதராபாத்தில் நாங்கள் ஆடிய ஆடுகளத்தை ஒப்பிட்டால், இந்த பிட்சில் பௌன்ஸ் கொஞ்சம் கூடுதலாகக் கிடைத்தது. ஆரம்பத்திலேயே தேர்வு செய்து பார்த்துவிட்டு, அது ஒத்துவந்தால் தொடர்ந்து செயல்படுத்தலாம் என்று முடிவு செய்திருந்தேன். பௌன்சர்கள் மூலம் அவர்களைப் பின்தங்கவைத்து திடீரென்று ஒரு ஃபுல் லென்த் பால் வீசி அவர்களுக்கு சவால் கொடுத்தேன். இது இத்தொடரின் தொடக்கம் தான். ஆனால் தொடர்ந்து 3 வெற்றிகள் பெற்றிருப்பது மிகவும் நல்ல விஷயம். நாங்கள் எல்லோரும் இந்தத் தொடரை நன்றாக அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். எல்லோரும் ஒரு அணியாக சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறோம். அடுத்த போட்டியையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். அதிர்ஷ்டவசமாக இந்தியா முழுவதும் பயணித்து விளையாடும் வாய்ப்பு பெற்றிருக்கிறேன். இந்த மைதானத்தில் நான் அதிகம் விளையாடியதில்லை. ஆனால் எனக்கு சாதகமாக இருந்த ஒரு ஆடுகளத்தில் ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்து இதே மைதானத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடப்போகிறோம். அந்தப் போட்டிக்கும் இதே ஆடுகளம் அமையும் என்று எதிர்பார்க்கிறேன்"
லாக்கி ஃபெர்குசன்.