Tnpl Final - LKK Twitter
கிரிக்கெட்

TNPL Final : 104 ரன்கள் வித்தியாசம்.. நெல்லையை பந்தாடி கோப்பையை தட்டித் தூக்கியது கோவை கிங்ஸ் அணி!

சாருக் கான் தலைமயிலான லைகா கோவை கிங்ஸ் அணி தமிழ்நாடு பிரீமியர் லீக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

Rishan Vengai

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 7வது சீசனானது கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவந்தது. இந்த சீசனானது எப்போதும் இல்லாத வகையில் அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்தது. அனைத்து அணிகளும் தங்களுடைய வெற்றிக்காக போராடிய நிலையில் சிறப்பாக விளையாடிய நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டியை எட்டின.

TNPL FINAL

கோப்பைக்கான கடைசிப்போட்டி இன்று நெல்லையில் நடைபெற்றது. நல்ல டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சொந்த மண்ணில் டாஸ்ஸை இழந்தாலும், சிறப்பாக பந்துவீசிய நெல்லை பந்துவீச்சாளர்கள் பவர்பிளேவிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் பிறகு கைக்கோர்த்த, விக்கெட் கீப்பர் சுரேஷ் குமார் மற்றும் முகிலேஷ் இருவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ஒருபுறம் முகிலேஷ் பவுண்டரிகளாக விரட்ட, சுரேஷ் குமார் சிக்சர்களாக பறக்கவிட்டு ரன்களை எடுத்துவந்தார். அடுத்தடுத்து இருவரும் அரைசதம் அடிக்க அணியின் ஸ்கோரானது 11 ஓவரிலேயே 100 ரன்களை எட்டியது.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு சுரேஷ் குமாரை 57 ரன்னில் வெளியேற்றியது நெல்லை அணி. பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் சாருக்கான் சொதப்பினாலும், அடுத்து வந்த அதீக் உர் ரஹ்மான் அபாரமான ஆட்டத்தை ஆடினார். முகிலேஷ் மற்றும் ரஹ்மான் இருவரின் அற்புதமான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 205 ரன்களை எட்டியது கோவை அணி.

206 என்ற கடினமான இலக்கை துரத்திய நெல்லை அணியை, எழவே விடாமல் முதல் ஓவரிலிருந்தே விக்கெட்டை பறித்த கோவை கிங்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. வீசிய அனைத்து பவுலர்களும் விக்கெட்டுகளை கைப்பற்ற, சிறப்பாக பந்துவீசிய ஜதாவெத் சுப்ரமணியன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை விரைவாகவே முடித்துவைத்தார். 101 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நெல்லை அணி கோப்பையை தவறவிட்டது.

கடந்த முறை மழையால் விட்ட கோப்பையை இந்தமுறை தூக்கிய கோவை!

கடந்த 2022 சீசனில் சென்னை மற்றும் கோவை அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியில், சென்னைக்கு எதிராக 14 ரன்களில் 2 விக்கெட்டை வீழ்த்திய போதும் கோவை அணி கோப்பையை தவறவிட்டது. மழை குறுக்கிட்டு போட்டி கைவிடப்பட்டதால் இரண்டு அணிகளுக்கும் கோப்பை பகிரப்பட்டது.

இந்நிலையில் தற்போது விட்ட கோப்பையை தட்டித்தூக்கியுள்ளது சாருக் கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணி.