மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய கோப்பைகளை கைப்பற்றி உள்ளது. எப்போதும் மைதானத்தில் அமைதியாக இருந்து வீரர்களை வழிநடத்துவதால், அவரை 'கூல் கேப்டன்' என்று ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்களும் அன்போடு அழைத்து வந்தனர். இந்நிலையில் தோனியின் இன்னொரு பக்கத்தை பற்றி அவரது தலைமையின் கீழ் பல போட்டிகளில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ள சில கருத்துக்கள் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
TRS Clips யூடியூப் சேனலில் பேசிய இஷாந்த் சர்மா, “மஹி பாய்க்கு பல்வேறு திறமைகள் (Strengths) உள்ளன. ஆனால் அமைதியும், கூலாக இருப்பதும் அவற்றில் ஒன்றல்ல. அவர் களத்தில் அடிக்கடி தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவார். அதை நான் நேரில் கேட்டிருக்கிறேன்.
ஐ.பி.எல் போட்டியாக இருந்தாலும் சரி, இந்திய அணியின் போட்டியாக இருந்தாலும் சரி, வீரர்கள் எப்போதும் அவரைச் சுற்றி இருப்பார்கள். மஹி பாயுடன் யாரேனும் ஒருவர் அமர்ந்திருப்பதை நீங்கள் காண்பீர்கள். இது நமது கிராமத்தில் மரங்களைச் சுற்றி அமர்ந்து இருப்பது போன்ற உணர்வு தான்.
ஒருமுறை நான் பந்துவீசி முடித்த பிறகு, மஹி பாய் என்னிடம், ‘நீங்கள் சோர்வாக இருக்கிறீர்களா?’ என்று கேட்டார். நான், ‘ஆம் நிறைய’ என்று பதிலளித்தேன். அதற்கு அவர், ‘உனக்கு வயதாகிறது, வெளியேறி விடு’ என்றார்.
பந்தை அவர் எறிந்து, அதை பிடிக்காமல் தவறவிடும் விடும் நேரத்தை தவிர பிற நேரங்களில் தோனி கோபப்பட்டு நான் பார்த்ததில்லை. அவர் முதல் முறை பந்தை எறிந்த போது, நான் அதை பார்த்தேன். இரண்டாவது முறை அவர் பந்து எறிந்தபோது, அது இன்னும் அழுத்தமாக இருந்தது” என்று அவர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2007-ம் ஆண்டில் அறிமுகமான இஷாந்த் சர்மா, டெஸ்டில் 105 ஆட்டங்களில் ஆடி 32.4 சராசரியில் 311 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.