அயர்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் பங்கேற்கிறது. வெள்ளிக்கிமை இரவு 7.30 மணிக்கு முதல் போட்டி டுப்லினில் தொடங்குகிறது. சொல்லப்போனால் 3 போட்டிகளும் ஒரே மைதானத்தில் தான் நடக்கின்றன. பல முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவின் தலைமையில் களம் காண்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை தோற்றிருப்பதால், இந்தத் தொடரில் இந்தியா எப்படி செயல்படப்போகிறது என்பதைப் பார்க்க அனைவரும் காத்திருக்கிறார்கள். இளம் வீரர்கள் நிறைந்த இந்த இந்திய ஸ்குவாடில் நாம் கவனிக்கவேண்டிய ஐந்து வீரர்கள் இவர்கள்.
நீண்ட காலம் காயத்தால் ஓய்வில் இருந்த பும்ரா கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு தன் முதல் சர்வதேச தொடரில் பங்கேற்கப் போகிறார். அதுவும் கம்பேக் தொடரில் கேப்டனாகவும் செயல்படப்போகிறார். ஆனால் இந்தத் தொடரில் அவரது கேப்டன்சி எப்படி இருக்கிறது என்றோ, அவர் எத்தனை விக்கெட்டுகள் வீழ்த்துகிறார் என்றோ நாம் அதிகம் யோசிக்கத் தேவையில்லை. இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கு பும்ரா வேண்டும். அதற்கு அவர் ஃபிட்டாக இருக்கவேண்டும். அதனால் நாம் கவனிக்கவேண்டியதெல்லாம் அவரது ஃபிட்னஸ் தான். இந்தத் தொடரின் 3 போட்டிகளிலும் பும்ரா முழுமையாக நான்கு ஓவர்கள் வீசினாலே அது இந்திய அணிக்குக் கிடைக்கும் பெரும் வெற்றி தான். உலகக் கோப்பைக்கு முன்பு பும்ரா நிரூபிக்கவேண்டியது அந்த ஃபிட்னஸ் மட்டும்தான்.
பும்ராவைப் போல் வாஷிங்டன் சுந்தரின் ஃபிட்னஸும் அதிகம் கவனிக்கவேண்டிய விஷயம். தொடர்ந்து காயத்தால் அவர் அவதிப்படுவதால் அவரது ஃபார்மும் கேள்விக்குறியாகிவிடுகிறது. அவர் பேட்டிங்கும் செய்யக்கூடியவர் என்பதால் அது இந்திய அணிக்கு மிகவும் அவசியமாகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரிலேயே இந்திய டெய்லெண்டர்கள் பேட்டிங் செய்ய முடியாதது பெரும் விவாதங்களை உருவாக்கியது. வாஷிங்டன் அந்தக் குறையைத் தீர்ப்பார் என்பதால் அது அணிக்கு பெருமளவு பலம் சேர்க்கும்.
டி20 ஃபார்மட்டுக்கு மட்டுமல்ல ஒருநாள் அணியிலும் அதேதான். உலகக் கோப்பையில் ஹர்திக், ஜடேஜா ஆகியோர் 6,7 இடங்களில் விளையாடுவார்கள் என்பதால், அதற்கடுத்து பேட்டிங் ஆப்ஷன் தரக்கூடிய ஒரு பௌலருக்கு நிச்சயம் கிராக்கி இருக்கும். வாஷிங்டன் தன் ஃபார்மை நிரூபிக்கும் பட்சத்தில் அவரால் உலகக் கோப்பை அணியின் கதவைக் கூட திறக்க முடியும்.
சர்வதேச அரங்கில் மிகப் பெரிய எழுச்சி கண்டிருக்கிறார் திலக் வர்மா. ஐபிஎல் தொடரில் அசத்திய அவர், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக கிடைத்த தேசிய அணி வாய்ப்பையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். 173 ரன்கள் எடுத்து தன் அறிமுக தொடரிலேயே இந்தியாவின் டாப் ரன் ஸ்கோரராக உருவெடுத்தார். எவ்வித அச்சமுமின்றி மிகவும் திறம்பட விளையாடும் திலக் வர்மா, அயர்லாந்து தொடரிலும் வாய்ப்பு பெற்றிருக்கிறார்.
மிடில் ஆர்டரில் ஆடும் இடது கை பேட்ஸ்மேன் என்பதால், இவருக்கு உலகக் கோப்பை அணியில் இடம் தரவேண்டும் என்றுகூட வாதம் கிளம்பத் தொடங்கிவிட்டது. ஆஃப் ஸ்பின் பந்துவீச்சும் வீசக்கூடியவர் என்பது இன்னும் அந்த வாதத்தை பலப்படுத்துகிறது. இந்தத் தொடரில் அதேபோல் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் நிச்சயம் அவருக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைக்கும்.
கடைசி 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள் விளாசி ஐபிஎல் அரங்கில் பெரும் அதிசயத்தை நிகழ்த்தி காட்டிய ரிங்கு சிங்குக்கு இப்போது இந்திய அணிக்காக விளையாடும் பெரிய வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. அந்த ஒரு இன்னிங்ஸில் மட்டுமல்லாமல் ஃபினிஷராக தொடர்ந்து தன் திறமையை நிரூபித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸின் நம்பிக்கை நாயகனாகவே மாறினார்.
இந்தியாவின் மிடில் ஆர்டரை பலப்படுத்துவார் என்பதைத் தாண்டி இடது கை பேட்ஸ்மேனாக இருப்பது நிச்சயம் அவருக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். இன்னும் ஓராண்டுக்குள் டி20 உலகக் கோப்பை வரப்போகிறது என்பதால், இந்த தொடரை அவர் பயன்படுத்திக்கொண்டால் நிச்சயம் அதற்கான வாய்ப்பில் நீடித்திருப்பார்.
பும்ராவைப் போல் பிரசித் கிருஷ்ணாவும் காயத்தால் பெரும் இடைவேளைகுப் பிறகு அணிக்குத் திரும்பியிருக்கிறார். இந்திய ஒருநாள் அணியில் முக்கிய வீரராக உருவெடுத்துக்கொண்டு வந்தவர், திடீர் காயத்தால் இப்போது உலகக் கோப்பையை தவறவிடப்போகிறார். இருந்தாலும் தன் திறமையை, அதைவிடத் தன் ஃபிட்னஸை அவர் நிரூபிக்கும்பட்சத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலகக் கோப்பைக்கான வாய்ப்பில் அவரால் நீடிக்க முடியும். இவரது வேகமும் பவுன்ஸும் நிச்சயம் இந்திய ஃபாஸ்ட் பௌலிங் யூனிட்டுக்குப் பெரும் பலம் சேர்க்கும். பும்ராவைப் போல் பிரசித்தின் ஃபிட்னஸ் இந்தத் தொடரில் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.