INDvENG Shahbaz Khan
கிரிக்கெட்

INDvENG | இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்தியாவின் டாப் 5 வீரர்கள்..!

இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன் இந்தியாவின் நம்பர் 3 இடத்தை சுப்மன் கில்லால் தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்று பல கேள்விகள் எழுந்தது.

Viyan

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து முடிந்திருக்கிறது. ஹைதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றிருந்த இந்திய அணி, அடுத்த 4 போட்டிகளிலும் அசத்தலாக வென்று தொடரை 4-1 என கைப்பற்றியது. வெற்றிகரமாக இந்திய அணி இத்தொடரை முடித்திருக்கும் நிலையில், கடந்த 2 மாதங்களாக பட்டையைக் கிளப்பிய டாப் 5 இந்திய வீரர்களைப் பற்றிய ஒரு சிறு அலசல்...

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

Yashasvi Jaiswal

இன்னிங்ஸ் - 9
ரன்கள் - 712
சராசரி - 89
100/50 - 2/3
அதிகபட்சம் - 214*
இந்த தொடரின் டாப் ரன் கெட்டர் தொடர் நாயகன் எல்லாமே ஜெய்ஸ்வால் தான். முதல் போட்டியிலிருந்து கடைசி டெஸ்ட் வரை தொடர்ந்து அசத்திக்கொண்டே இருந்தார் ஜெய்ஸ்வால். ஒவ்வொரு இன்னிங்ஸிலும் இந்தியாவுக்கு அசத்தலான தொடக்கங்கள் ஏற்படுத்திக்கொடுத்தார். 26 சிக்ஸர்கள் விளாசி, ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற சாதனை படைத்தார் அவர். ஒரே தொடரில் 2 இரட்டைச் சதங்கள் அடித்தவர் என்ற பெருமையும் பெற்றார். அதிலும் விசாகப்பட்டினத்தின் முதல் இன்னிங்ஸில் அனைவரும் தொடர்ந்து சொதப்ப, இவர் தனி ஆளாக அசத்தி இரட்டை சதம் அடித்தார். ஒருவேளை கடைசி டெஸ்ட்டில் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் ஆடியிருந்தால், ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற கவாஸ்கரின் சாதனையையும் முறியடித்திருப்பார் யஷஸ்வி!

ஜஸ்ப்ரித் பும்ரா

Bumrah

இன்னிங்ஸ் - 8
ஓவர்கள் - 103.5
விக்கெட்டுகள் - 19
சராசரி - 16.89
பெஸ்ட் - 6/45
மொத்த உலகமும் இந்தியாவில் ஸ்பின்னர்களின் ஆதிக்கமாக இருக்கும் என்றே பேசிக்கொண்டிருக்க, ஸ்பின்னர்களை விடவுமே மிகவும் ஆபத்தாக உருவெடுத்தார் ஜஸ்ப்ரித் பும்ரா. இந்தத் தொடரில் இந்திய பௌலர்களில் மிகச் சிறந்த ஸ்டிரைக் ரேட் வைத்திருப்பது பும்ரா தான். ஒவ்வொரு 32 பந்துக்கும் ஒரு விக்கெட் வீழ்த்தி அசத்தியிருக்கிறார் பூம் பூம். அதிலும் ஒவ்வொரு 17 ரன்னுக்கும் ஒரு விக்கெட்! விசாகப்பட்டின டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் அவர் வீசிய முரட்டு ஸ்பெல் இங்கிலாந்தை உருகுலைத்தது. வெறும் 45 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் பும்ரா. அதிலும் ஆலி போப்புக்கு அவர் வீசிய யார்க்கர், அந்தத் தொடரின் மிகச் சிறந்த பந்தாக கொண்டாடப்பட்டது. நான்காவது போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படாமல் இருந்திருந்தால் இத்தொடரின் டாப் விக்கெட் டேக்கராகவே திகழ்ந்திருப்பார் பும்ரா.

ரவிச்சந்திரன் அஷ்வின்

ashwin

இன்னிங்ஸ் - 10
ஓவர்கள் - 156.3
விக்கெட்டுகள் - 26
சராசரி - 24.8
பெஸ்ட் - 5/51
மெதுவாக தொடரைத் தொடங்கிய அஷ்வின், கடைசி கட்டத்தில் விஸ்வரூபம் எடுத்து தன் சுயரூபத்தைக் காட்டினார். மொத்தம் 26 விக்கெட்டுகள் வீழ்த்திய அஷ்வின், இத்தொடரின் டாப் விக்கெட் டேக்கராக அமைந்தார். அதுமட்டுமல்லாமல் பல்வேறு மைல்கற்களையும் கடந்தார் அவர். 500வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை படைத்தவர், 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய 14வது இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்றார். அதற்கு நடுவே, இங்கிலாந்துக்கு எதிராக 100 விக்கெட்டுகள், 100 விக்கெட்டுகள் + 1000 ரன்கள், இந்தியாவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர், அதிக 5 விக்கெட் ஹால் வீழ்த்திய இந்திய வீரர் என பல்வேறு சாதனைகள் படைத்தார் அஷ்வின்.

ரவீந்திர ஜடேஜா

Ravindra Jadeja

பேட்டிங்:
இன்னிங்ஸ் - 6
ரன்கள் - 232
சராசரி - 38.66
50/100 - 1/1
பௌலிங்:
ஓவர்கள் - 146.3
விக்கெட்டுகள் - 19
சராசரி - 25.05
உலகின் நம்பர் 1 ஆல் ரவுண்டர், இந்தத் தொடரில் தன் திறமையை பேட்டிங் பௌலிங் இரண்டிலுமே நிரூபித்திருக்கிறார். மொத்தம் 19 வீழ்த்தி அசத்திய அவர், பேட்டிங்கிலும் தன் பங்களிப்பை கொடுத்தார். அதிலும் குறிப்பாக ராஜ்கோட் டெஸ்ட்டில் இந்திய அணி 33/3 என தடுமாறிக்கொண்டிருந்தபோது கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை கரைசேர்த்தார் அவர். வழக்கம்போல் அனைத்து ஏரியாவிலும் பங்களித்திருக்கிறார் ராக்ஸ்டார்!

சுப்மன் கில்

Shubman Gill

இன்னிங்ஸ் - 9
ரன்கள் - 452
சராசரி - 56.5
100/50 - 2/2
அதிகபட்சம் - 110
இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன் இந்தியாவின் நம்பர் 3 இடத்தை சுப்மன் கில்லால் தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்று பல கேள்விகள் எழுந்தது. ஆனால் இந்தத் தொடரில் அதற்கெல்லாம் பதில் சொல்லியிருக்கிறார் கில். விசாகப்பட்டினத்தில் சதம் அடித்து அசத்திய அவர், ராஜ்கோட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்கள் விளாசினார். ராஞ்சி டெஸ்ட்டில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து இந்திய அணி சேஸ் செய்ய உதவினார். கடைசியில் தரம்சாலாவிலும் ஒரு சதம். இப்படி கடைசி 4 போட்டிகளிலுமே மிகச் சிறப்பாக ஆடி தன் இடத்தை ஆணித்தரமாக உறுதி செய்திருக்கிறார் கில்.