இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து முடிந்திருக்கிறது. நான்காவது நாளே முடிந்துவிட்ட இந்தப் போட்டியை 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது இந்தியா. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து 319 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 126 ரன்கள் முன்னிலையோடு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 430 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இரண்டாவது இன்னிங்ஸில் வெறூம் 122 ரன்களுக்கு ஆட்டமிழந்து படுதோல்வி அடைந்தது இங்கிலாந்து. இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட டாப் 5 வீரர்கள் யார்?
பேட்டிங்: 112 ரன்கள்
பௌலிங்: 2 + 5 = 7 விக்கெட்டுகள்
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 33/3 என தடுமாறிக்கொண்டிருந்தபோது களம் புகுந்தார் ரவீந்திர ஜடேஜா. ஐந்தாவது வீரராக இந்திய அணி எதற்கு அவரை புரமோட் செய்ததோ அந்த வேலையை மிகச் சிறப்பாகச் செய்தார். கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்த அவர், 112 ரன்கள் குவித்து அசத்தினார். அவர் மட்டும் தன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் போயிருந்தால் இந்திய அணி மூழ்கியிருக்கும். சதம் அடித்ததோடு மட்டுமல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சிலும் கலக்கி 5 விக்கெட் ஹாலை பூர்த்தி செய்தார் ஜடேஜா. இது அவர் சொந்த மண்ணான சௌராஷ்டிராவில் முதல் முறையாக டெஸ்ட் அரங்கில் 5 விக்கெட் ஹாலை பதிவு செய்தார். முதல் இன்னிங்ஸிலும் 2 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர், ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.
பேட்டிங்: 10 + 214* = 224 ரன்கள்
முதல் இன்னிங்ஸில் பெரிதாக சோபிக்காத ஜெய்ஸ்வால், இரண்டாவது இன்னிங்ஸில் பட்டையைக் கிளப்பினார். ஆரம்பத்தில் நிதானமாக தொடங்கியவர், அரைசதம் கடந்தவுடன் விஸ்வரூபம் எடுத்தார். மூன்றாவது நாள் முடிவில் வேகவேகமாக விளையாடி சதம் அடித்தார். முதுகு பிடிப்பினால் வெளியேறியவர், நான்காவது நாளில் மீண்டும் களமிறங்கி தன் சம்ஹாரத்தைத் தொடர்ந்தார். 14 ஃபோர்கள், 12 சிக்ஸர்கள் என அடித்து நொறுக்கிய அவர், 236 பந்துகளில் 214 ரன்கள் அடித்தார். இதன்மூலம் பல்வேறு சாதனைகள் படைத்தார் ஜெய்ஸ்வால். இந்தியாவுக்காக ஒரே தொடரில் 2 இரட்டைச் சதங்கள் அடித்த மூவரில் ஜெய்ஸ்வால் ஒருவர். அதேபோல், ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் வாசிம் அக்ரமுடன் இணைந்து அவரும் முதலிடம் பிடித்தார். ஒரு தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் (22) என்ற சாதனையும் படைத்தார்.
பேட்டிங்: 62 + 68* = 130 ரன்கள்
மொத்த தேசமும் எதிர்பார்த்த சர்ஃபராஸ் கானின் அறிமுகம் ஒருவழியாக இந்தப் போட்டியில் நடக்க, தனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் சர்ஃபராஸ் கான். முதல் இன்னிங்ஸில் தன் முதல் ரன்னை அடிக்க சில நேரம் எடுத்துக்கொண்டார். ஆனால் அதன் பின் அவரைத் தடுக்க முடியவில்லை. ஸ்வீப்பாக அடித்து 62 ரன்கள் விளாசிய அவர், ஜடேஜாவின் தவறான முடிவால் ரன் அவுட் ஆனார். இரண்டாவது இன்னிங்ஸிலும் அதே உத்வேகத்தோடு ஆடிய அவர், ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் அடித்தார் சர்ஃபராஸ். தன் தந்தையின் முன் தன் கனவை நனவாக்கிக்கொண்டிருக்கிறார் இந்த இளம் வீரர்.
ரன்கள்: 153 + 4 = 157 ரன்கள்
முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை ஆட்டம் காண வைத்தார் டக்கெட். ஸ்வீப்களும், ரிவர்ஸ் ஸ்ட்வீப்களுமாக ஆடித் தள்ளியவர், டி20 போட்டி போல அணுகினார். எந்த பௌலரையும் விட்டுவைக்கவில்லை. இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தபோது எங்கே அவர் இந்திய அணியை பின்னுக்குத் தள்ளிவிடுவாரோ என்று தோன்றியது. 23 ஃபோர்களும், 2 சிக்ஸர்களும் விளாசிய அவர், 151 பந்துகளில் 153 ரன்கள் குவித்தார். இந்தத் தொடரில் பும்ராவை சிறப்பாக சமாளித்து விளையாடும் ஒரே இங்கிலாந்து பேட்ஸ்மேன் இவர் தான்.
ரன்கள்: 131 + 19 = 150 ரன்கள்
இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் ரோஹித் ஷர்மா ஆடிய ஆட்டம் அசாதாரணமானது. ஒரு முணையில் விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டே இருக்க, தனி ஆளாக நின்று போராடினார். அதன்பின் ஜடேஜாவுடன் இணைந்து ஒரு வெற்றிகரமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார் அவர். தொடர்ந்து ஷார்ட் பால்களாக வீசி இங்கிலாந்து பௌலர்கள் அவரை அட்டாக் செய்தபோதும், இவர் சிறப்பாக செயல்பட்டு அதையெல்லாம் சமாளித்தார். 131 ரன்கள் எடுத்த அவர், கடைசியில் ஷார்ட் பாலுக்கே வீழ்ந்தார். இருந்தாலும், இந்திய அணியை மிகச் சிறந்த நிலையில் விட்டுச் சென்றார் கேப்டன்.