KL Rahul R Senthil Kumar
கிரிக்கெட்

INDvAUS | ராகுலின் மிக முக்கியமான இன்னிங்ஸ் இது..!

இந்திய அணிக்கு அப்போது ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் தான் முக்கியம் என்பதை உணர்ந்து, முன்பை விட பெருமளவு நிதானம் காட்டினார் அவர். அவரது அடுத்த பௌண்டரி வருவதற்கு 33 பந்துகள் ஆனது! அந்த அளவுக்கு நிதானம் காட்டினார் அவர்.

Viyan
போட்டி 5: இந்தியா vs ஆஸ்திரேலியா
போட்டி முடிவு: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
KL Rahul
ஆட்ட நாயகன்: கே எல் ராகுல் (இந்தியா)
பேட்டிங்: 115 பந்துகளில் 97 ரன்கள் (8 ஃபோர்கள், 2 சிக்ஸர்கள்)

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக மாறிவிட்ட பிறகு, இரண்டாவது ஓவரின் முடிவிலேயே களமிறங்கவேண்டிய சூழ்நிலை தனக்கு வரும் என்று கே எல் ராகுல் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ராகுல் அப்படி இறங்கவேண்டியிருந்தது. அந்த முதலிரு ஓவர்கள் இந்திய அணிக்கு இடி மேல் இடியை இறக்கியது. இஷன் கிஷன், ரோஹித் ஷர்மா, ஷ்ரேயாஸ் ஐயர் என இந்திய அணியின் 3 நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ஒரு ரன் கூட அடிக்காமல் பெவிலியனுக்குத் திரும்பினார்கள். 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது இந்தியா. அப்போது தான் நம்பிக்கை நாயகன் விராட் கோலியோடு ஜோடி சேர்ந்தார் ராகுல். எந்தவொரு இந்திய ரசிகராலும் மறக்க முடியாத ஒரு இன்னிங்ஸை விளையாடினார் அவர்.

KL Rahul | Virat Kohli

ஆஸ்திரேலிய பௌலர்கள் பெரும் ஆதிக்கம் செலுத்திய காரணத்தால் கோலி, ராகுல் இருவரும் மிகவும் நிதானமாகவே ஆட்டத்தைத் தொடங்கினார்கள். தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே ஃபோர் அடித்திருந்தாலும் அடக்கியே வாசித்தார் ராகுல். ஃபுல்லாக வந்த எளிதான பந்துகளை மட்டும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார் ராகுல். அவரது முதலிரு ஃபோர்களும் அப்படிப்பட்ட பந்துகளில் தான் வந்தது. தன் முதல் 38 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ராகுல், ஜாம்பா வீசிய 18வது ஓவரை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார். இரண்டு லேட் கட்கள் மற்றும் ஒரு டிரைவ் வாயிலாக அந்த ஓவரில் 3 ஃபோர்கள் அடித்தார் அவர். இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சனையாக கருதப்பட்ட ஜாம்பாவை அவர் முதல் ஓவரிலேயே ராகுல் அட்டாக் செய்தது இந்திய ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது. ஆனால் ராகுலின் சிறப்பே அதன்பிறகு அவர் ஆடிய ஆட்டம் தான்.

அந்த ஓவரில் 3 பௌண்டரிகள் அடித்திருந்தாலும், அவர் பௌண்டரி அடிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ஜாம்பாவின் பந்துகளை அனுகவில்லை. மோசமான பந்துகளை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். அதேசமயம் அதே வேகத்தில் அடுத்த ஓவர்களையும் அவர் எதிர்கொள்ளவில்லை. இந்திய அணிக்கு அப்போது ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் தான் முக்கியம் என்பதை உணர்ந்து, முன்பை விட பெருமளவு நிதானம் காட்டினார் அவர். அவரது அடுத்த பௌண்டரி வருவதற்கு 33 பந்துகள் ஆனது! அந்த அளவுக்கு நிதானம் காட்டினார் அவர்.

72 பந்துகளில் அரைசதம் கடந்த ராகுல், கோலி கொஞ்சம் வேகமெடுக்கவும் அவருக்கு கம்பெனி கொடுத்து இன்னும் தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டார். 40 ஓவர்கள் கடந்துவிட்ட பிறகு, கோலிக்குப் பிறகு வந்த ஹர்திக் பாண்டியாவும் ஓரளவு செட்டில் ஆகிவிட்ட பிறகு தான் பந்தை தூக்கியே அடித்தார் அவர். இறுதியில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்த அவர், 97 ரன்களுடன் தன் ஒருநாள் கரியரின் மிக முக்கிய இன்னிங்ஸ் ஒன்றை நிறைவு செய்தார்.

ஆட்ட நாயகன் என்ன சொன்னார்?

மிகவும் விரைவாக ராகுல் களமிறங்க நேர்ந்ததால், அதைப் பற்றி அணி நிர்வாகத்துடன் ஏதேனும் உரையாடல் நடந்ததா என்று ராகுலிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "சொல்லப்போனால் எந்தவொரு உரையாடலும் நடைபெறவில்லை. முதல் இன்னிங்ஸ் முடிந்தவுடன் ஒரு நல்ல ஷவர் எடுக்கவேண்டும் என்று நினைத்தேன். கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகவேண்டும் என்று நினைத்திருந்தேன்" என்று கூறினார்.

இந்த ஆடுகளத்தைப் பற்றிப் பேசிய அவர், "ஆடுகளம் கொஞ்சம் கடினமாக இருக்கிறது என்றும், சில நேரத்துக்கு டெஸ்ட் கிரிக்கெட் போலத்தான் விளையாடவேண்டும் என்று விராட் கோலி என்னிடம் தெரிவித்தார். ஆரம்பத்தில் ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. அதன்பின் ஸ்பின்னர்களுக்கும் ஒத்துழைத்தது. கடைசி 15-20 ஓவர்களில் பனி இருந்ததால் அது கொஞ்சம் நமக்கு சாதகமாக அமைந்தது. பந்து நன்றாக பேட்டுக்கு வந்தது. இருந்தாலும் பேட்டிங் செய்வதற்கு ரொம்பவும் எளிதாக இருந்திடவில்லை. கொஞ்சம் பேட்ஸ்மேன்களுக்கு, கொஞ்சம் பௌலருக்கு என இரு தரப்புக்கும் சாதகமான நல்லதொரு விக்கெட்டதாக அது இருந்தது. தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக சென்னையில் இதுபோன்ற ஆடுகளங்கள் தான் கிடைக்கும்" என்றார்.

தான் சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடித்ததால் அவரால் சதமடிக்க முடியாமல் போனது. அதைப் பற்றியும் கூட ராகுல் பேசினார். "அந்த ஷாட்டை நான் மிகவும் நன்றாக அடித்துவிட்டேன். கடைசி கட்டத்தில் எப்படி 100 அடிக்க முடியும் என்று கணக்கிட்டேன். ஒரு ஃபோரும், அதன்பிறகு ஒரு சிக்ஸரும் அடிப்பதுதான் ஒரே வழி என்று நினைத்தேன். ஆனால் அது நன்றாகப் பட்டு சிக்ஸ் ஆகிவிட்டது. சதமடிக்காதது பற்றி பெரும் வருத்தம் இல்லை. இன்னொரு போட்டியில் அதை அடிக்கமுடியும்" என்று கூறினார் ராகுல்.