ஹர்ஷா போக்ளே Twitter
கிரிக்கெட்

உலகக்கோப்பை 2023: டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இந்தியா-பாகிஸ்தான் மோதலை தவறவிடும் ஹர்ஷா போக்ளே!

இந்திய வீரர் சுப்மன் கில்லை தொடர்ந்து இந்திய வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Rishan Vengai

இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் சமீபத்தில் டெங்கு காய்ச்சல் பாசிட்டிவால், உலகக்கோப்பையின் முதலிரண்டு போட்டிகளை தவறவிட்டார். ஒருவார கால சிகிச்சைக்கு பிறகு 14ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் கில்லை தொடர்ந்து தற்போது இந்திய வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளேவுக்கும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

shubman gill

90ஸ் கிட்ஸ்களின் விருப்பமான வர்ணனையாளராக இருக்கும் ஹர்ஷா போக்ளே, நடப்பு 2023 உலகக்கோப்பையின் கமெண்டேட்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் 14-ஆம் தேதி நடக்கவிருக்கும் மிகப்பெரிய மோதலான இந்தியா-பாகிஸ்தான் போட்டியை தவறவிடவிருப்பதாக ஹர்ஷா போக்ளே எக்ஸ் வலைதளத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நோய் எதிர்ப்பு குறைவால் பலவீனமாக இருக்கிறேன்!

தன்னுடைய உடல்நிலை குறித்து பதிவிட்டிருக்கும் போக்ளே, ”14-ம் தேதி நடக்கவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை தவறவிடுவதில் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். டெங்கு பாதிப்பு ஏற்பட்டதால், அதன் விளைவாக உடல் பலவீனம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்றவற்றால் என்னால் பங்குபெற முடியவில்லை. 19ம் தேதி நடக்கும் இந்தியா-வங்கதேச ஆட்டத்திற்கு மீண்டும் திரும்பிவிடுவேன் என்று நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

மேலும், ”கடந்த இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியிலேயே என்னால் பங்குபெற முடியாமல் போய்விட்டது. அப்போது எனது சகாக்களும், ஒளிபரப்புக் குழுவினரும் மிகவும் உதவிகரமாக இருந்தனர். போட்டியின் இரண்டாம் பாதியில் என்னுடைய கூடுதல் பணிச்சுமையையும் அவர்கள் பெற்றனர். விரைவில் அவர்களுக்கு நேரில் வந்து நன்றி தெரிவிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.