ind vs nz cricinfo
கிரிக்கெட்

20 வருட மோசமான சாதனையை உடைத்தது இந்தியா! 2003-க்கு பின் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது இந்தியா.

Rishan Vengai

2023 உலகக்கோப்பை தொடரில் விளையாடியுள்ள 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் முதல் தோல்வியை நோக்கி இன்று களமிறங்கின. தரம்சாலாவில் உள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கிய போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீசியது.

48 வருடங்கள் கழித்து சதமடித்த டேரில் மிட்செல்!

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களான டெவான் கான்வேவை 0 ரன்னில் சிராஜ் வெளியேற்ற, வில் யங்கை 17 ரன்னில் போல்டாக்கி வெளியேற்றினார் முகமது ஷமி. இந்த உலகக்கோப்பையில் முதல் போட்டியில் விளையாடும் முகமது ஷமி, வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அதற்கு பிறகு கைக்கோர்த்த ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய இந்திய பவுலர்கள் நியூசிலாந்து பேட்டர்கள் மீது அழுத்தம் போட்டாலும், கைக்கு வந்த 3 கேட்ச்களை கோட்டைவிட்ட ஃபீல்டர்கள் கிடைத்த வாய்ப்பை எல்லாம் தவறவிட்டனர். வாய்ப்பை பயன்படுத்திகொண்ட ரச்சின் மற்றும் மிட்செல் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை எடுத்துவந்தனர்.

Mitchell

அடுத்தடுத்து அரைசதம் அடித்த இந்த வீரர்கள் 3வது விக்கெட்டுக்கு 159 ரன்கள் சேர்த்தனர். இந்தியா விக்கெட்டை தேடும்போது மீண்டும் பந்துவீச வந்த முகமது ஷமி, 6 பவுண்டரிகள், 1 சிக்சர் என விளாசி 75 ரன்களில் இருந்த ரச்சினை வெளியேற்றி அசத்தினார். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேரில் மிட்செல் இந்திய அணிக்கு எதிராக சதமடித்து அசத்தினார். 1975 உலகக்கோப்பையில் சதமடித்த க்ளென் டர்னருக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரராக மாறினார் டேரில் மிட்செல்.

5 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி!

சதத்தை கடந்து அபாரமாக விளையாடிய மிட்செல்லை 130 ரன்களில் வெளியேற்றி ஷமி, நியூசிலாந்தை 300 ரன்கள் கடக்காமல் பார்த்துக்கொண்டார். தொடர்ந்து களத்திற்கு வந்த ஷான்ட்னர் மற்றும் ஹென்றி இருவரையும் போல்டாக்கி வெளியேற்றிய ஷமி, 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் உலகக்கோப்பையில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய பவுலராகவும் மாறினார்.

Shami

குல்தீப் யாதவ் தன் பங்கிற்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்த, 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 273 ரன்கள் சேர்த்தது.

நல்ல தொடக்கத்தை கொடுத்த கில் மற்றும் ரோகித்!

274 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கில் இருவரும் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட 5 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய ரோகித் சர்மா, அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து 46 ரன்னில் வெளியேறினார். உடன் சுப்மன் கில்லும் 26 ரன்னில் வெளியேற அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த இந்தியா தடுமாறியது. பின்னர் கைக்கோர்த்த கோலி மற்றும் ஸ்ரேயாஸ் இருவரும் நிதானமான ஆட்டத்தை விளையாடினர்.

Rohit

விராட் கோலி ஒருபுறம் நிலைத்து நிற்க மறுமுனையில் நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும் ஸ்ரேயாஸ் ஐயர் 33 ரன்னில் வெளியேறினார். அடுத்துவந்த கேஎல் ராகுல் மற்றும் கோலி இருவரும் விக்கெட்டை இழக்காமல் பவுண்டரிகளாக விரட்ட ஆரம்பித்தனர். இந்த ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட இலக்கை நெருங்கியது இந்திய அணி. ஆனால் சரியான நேரத்தில் ராகுலை வெளியேற்றிய மிட்செல் ஷான்ட்னர் நியூசிலாந்தை ஆட்டத்திற்குள் எடுத்துவந்தார்.

தொடர்ந்து களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவை யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ரன் அவுட்டில் சிக்கவைத்தார் கோலி. ஸ்டிரைக்கில் இருந்த சூர்யகுமார் யாதவ் சிங்கிளுக்கு அழைக்க, நான் ஸ்டிரைக்கில் இருந்த விராட் கோலி பந்தையே பார்த்துக்கொண்டு பாதிதூரம் சென்றுவிட்டு திரும்பிவிட்டார். ஆனால் முழு ரன்னையும் முடித்திருந்த சூர்யகுமார் யாதவ் தன்னுடைய முதல் உலகக்கோப்பை போட்டியிலேயே மோசமான முறையில் வெளியேறினார்.

சதமடிக்கும் வாய்ப்பை இழந்து வெளியேறிய கோலி!

நல்ல நிலைமையில் இருந்த இந்திய அணி திடீரென 191 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழக்க, இந்திய ரசிகர்களுக்கு வயிற்றில் புளியை கரைத்தது. இதற்குமேல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச்செலும் பொறுப்பு விராட் கோலிக்கு அதிகமாகவே இருந்தது. அதற்குபிறகு பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்ட கிங் கோலி அரைசதம் அடித்து அசத்த, மறுமுனையில் சிறப்பான பேட்டிங்கை ஆடிய ரவீந்திர ஜடேஜா நிலைத்து நின்றார்.

kohli

8 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என விரட்டி சதத்தை நோக்கி சென்ற விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற உலக சாதனையை சமன்செய்யும் முயற்சியில், பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து 95 ரன்னில் வெளியேறினார். என்னதான் கோலி வெளியேறினாலும் 3 பவுண்டரிகள், 1 சிக்சர் என பறக்கவிட்டு 39 ரன்களில் களத்தில் இருந்த ஜடேஜா, இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

20 வருடமாக நீடித்துவந்த மோசமான ரெக்கார்டை உடைத்த இந்தியா!

ஒருநாள் உலகக்கோப்பையை பொறுத்தவரையில் இவ்விரு அணிகளும் 8 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 5 முறை வெற்றிபெற்றுள்ள நியூசிலாந்து அணி 5-3 என முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளும் மோதிய 2003 உலகக்கோப்பை போட்டியில் மட்டும் தான் கடைசியாக இந்திய அணி வெற்றிபெற்றிருந்தது.

Ind vs Nz

அதற்கு பிறகான 2007, 2011, 2015, 2019 என 4 உலகக்கோப்பைகளிலும் நியூசிலாந்து அணியே இந்தியாவை வீழ்த்தியுள்ளது. 20 வருடமாக நீடித்துவரும் இந்த ரெக்கார்டை இன்று உடைக்கும் முனைப்பில் இந்தியா களம்கண்டது. முகமது ஷமியின் அசத்தலான பந்துவீச்சு, விராட் கோலி மற்றும் ஜடேஜாவின் அற்புதமான பேட்டிங்கின் உதவியால் 20 வருட மோசமான சாதனையை முறியடித்து கெத்துக்காட்டியுள்ளது இந்தியா. இந்த போட்டியில் வெற்றிபெற்றதை அடுத்து தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது இந்தியா.