Ponting - Sachin - Gill Twitter
கிரிக்கெட்

வாவ்வ்வ்வ்.. கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி படைத்த மிகப்பெரிய சாதனை!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 399 ரன்களை குவித்த இந்திய அணி, ஒரே போட்டியில் பல புதிய சாதனைகளை படைத்து அசத்தியுள்ளது.

Rishan Vengai

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. உலகக்கோப்பைக்கு முன்னதாக இரண்டு சமபலம் கொண்ட அணிகளுக்கு இடையேயான மோதல் என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பு எழுந்தது. முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதையடுத்து, இன்று இந்தூர் ஸ்டேடியத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்துவருகிறது.

ஸ்ரேயாஸ் ஐயர்

ஸ்ரேயாஸ் ஐயர்(105), சுப்மன் கில்(104) இருவரின் அபாரமான சதத்தாலும், கேஎல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரின் அதிரடியான அரைசதத்தாலும் 399 ரன்களை இந்தியா குவித்துள்ளது. இந்நிலையில், இந்த இன்னிங்ஸின் முடிவில் இந்திய அணி பல புதிய சாதனைகளை படைத்து அசத்தியுள்ளது. இதுவே ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா அடித்திருக்கும் அதிகபட்ச ஒடிஐ ரன்களாகும். இதற்கு முன் 2013-ல் 383 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்து வந்தது.

அதிவேகமாக 6 சதங்களை கடந்த இந்திய வீரரானார் கில்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இன்றைய போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில், 97 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என விளாசி 104 ரன்கள் விளாசினார். ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 6-வது சதத்தை பதிவு செய்த கில், ODI-ல் குறைந்த போட்டிகளில் 6 சதங்கள் அடித்த முதல் வீரராக மாறினார்.

Gill

46 ஒருநாள் போட்டிகளில் இச்சாதனையை படைத்திருந்த ஷிகர் தவானை பின்னுக்கு தள்ளியிருக்கும் கில், 35 போட்டிகளில் 6 சதங்களை பதிவு செய்துள்ளார். இந்த பட்டியலில் 53 போட்டிகளுடன் கேஎல் ராகுல், 61 போட்டிகளுடன் விராட் கோலி மற்றும் 68 போட்டிகளுடன் கவுதம் கம்பீர் முதலிய வீரர்கள் நீடிக்கின்றனர்.

குறைந்த வயதில் 5 சதங்களை அடித்து சச்சின், கோலியுடன் இணைந்த கில்!

2023 வருடத்தில் மட்டும் தன்னுடைய 5-வது சதத்தை விளாசியிருக்கும் கில், 24 வயதில் இதை செய்து முடித்துள்ளார். இதன் மூலம் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஒருநாள் சதங்களை 25 வயதிற்குள் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் மற்றும் விராட் கோலியுடன் இணைந்துள்ளார்.

Sachin

இந்த சாதனையை 1996-ல் சச்சின் டெண்டுல்கர் படைத்ததற்கு பிறகு 9 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்காவின் க்ரீம் ஸ்மித் (2005) மற்றும் இலங்கையின் உபுல் தரங்கா (2006) ஆகியோர் படைத்திருந்தனர். அதற்கு பிறகு 6 வருடங்கள் கழித்து 2012-ல் விராட் கோலி இச்சாதனையை செய்திருந்தார். அவரை தொடர்ந்து 2023-ல் சுப்மன் கில் இணைந்துள்ளார்.

ரிக்கி பாண்டிங்கின் உலக சாதனையை சமன் செய்த கில்!

இந்திய மண்ணில் தன்னுடைய 4வது சதத்தை பதிவு செய்திருக்கும் சுப்மன் கில், அரிதான சாதனையில் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்துள்ளார். சொந்த மண்ணில் ஒருவருடத்தில் 4 சதங்களை பதிவு செய்த ரிக்கி பாண்டிங்கின் சாதனையை கில் சமன் செய்துள்ளார்.

Ricky Ponting

இந்தப்பட்டியலில் ஒருவருடத்தில் அதிக ஹோம் சைட் சதங்களை அடித்திருந்த சச்சின் (3 சதங்கள்), விராட் கோலி (3 சதங்கள்), ரோகித் சர்மா (3 சதங்கள்) முதலிய ஜாம்பவான் வீரர்களின் சாதனையை முறியடித்துள்ளார் இளம் வீரரான கில். உலகக்கோப்பை தொடர் முழுமையாக இந்திய மண்ணில் நடைபெறவிருப்பதால் சொந்த மண்ணில் அதிக சதங்கள் அடித்த ரிக்கி பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி விரைவில் புதிய ரெக்கார்டை கில் படைக்கவுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 3000 சிக்சர்களை பதிவுசெய்த இந்திய அணி!

கிரிக்பஸ் வெளியிட்டிருக்கும் தகவலின் படி, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி 3000 சிக்சர்களை பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா முதலிய அணிகள் நீடிக்கின்றன. இன்றையப் போட்டியில் இந்திய அணி 18 சிக்ஸர்களை பதிவு செய்துள்ளது. ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் இந்திய அணி அதிகபட்சமாக 19 சிக்ஸர்களை நியூசிலாந்து (2023), ஆஸ்திரேலியா (20130 அணிகளுக்கு எதிராக பதிவு செய்திருக்கிறது.