ODI, டெஸ்ட், டி20 என மூன்று விதமான கிரிக்கெட் வடிவங்களில் எது விருப்பமான வடிவம் என்று கேட்டால் பெரும்பாலான ரசிகர்கள் மட்டுமில்லாமல், அதிகப்படியான கிரிக்கெட் வீரர்களின் தேர்வாகவும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியே இருக்கும். தொடக்க காலங்களில் ஒரு இன்னிங்ஸிற்கு ஒரே பந்து, பாதி ஆட்டத்தில் பவுலர்களின் ரிவர்ஸ் ஸ்விங், ஸ்பின்னர்களுக்கு வலு சேர்க்கும் டர்னிங் டிராக்ஸ் என சுவாரசியத்திற்கு பஞ்சம் இல்லாத வகையில் ODI-ஆனது வீரர்களின் திறனை முழுதும் சோதிக்கும் விதமாக இருந்தது. நாளடைவில் இரண்டு புதிய பந்துகள், இருமுறை பவர் ப்ளே என அடுத்தடுத்த மாற்றங்கள் வந்தாலும் முன்னர் இருந்த அதே சுவாரசியத்தை ஏற்படுத்துவது தான் ஒருநாள் கிரிக்கெட்டின் பெரிய பலமாக இருந்துவருகிறது.
குறைவான ரன்கள், அதிகப்படியான ரன்கள், நடுநிலையான ரன்கள் என எதை வெற்றிக்கான இலக்காக எடுத்துக்கொண்டாலும், அனைத்திலும் சுவாரசியம் கூட்டும் ஒரே வடிவம் ODI மட்டும் தான். அப்படியான ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சுழற்பந்துவீச்சில் பலம் வாய்ந்த அணிகளாக இருக்கும் துணை கண்டங்களுக்கு இடையேயான மோதல் என்பது ஒரு மகுடம் போன்றது தான். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என ஸ்பின்னர்களின் கூடாரமாக ஜொலிக்கும் அனைத்து ஆசிய கண்டத்தின் அணிகளும் ஆசியக்கோப்பை தொடரை விலைமிகுந்த ஒன்றாக மாற்றியுள்ளன. அதில் இலங்கை-இந்தியா மோதல் என்பது பல ரைவல்ரிகளை கடந்து வந்துள்ளது.
ஆசியக்கோப்பை வரலாற்றில் 7 முறை இந்திய அணியும், 6 முறை இலங்கை அணியும், 2 முறை பாகிஸ்தான் அணியும் கோப்பையை வென்றிருக்கும் நிலையில் இலங்கை-இந்தியா அணிகள் மட்டும் 8 முறை இறுதிப்போட்டியில் மோதியுள்ளன.
அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய ரவி சாஸ்திரி (1984 இந்தியா-இலங்கை பைனல்): 1984ஆம் ஆண்டு முதன்முதலாக தொடங்கப்பட்ட ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை என மூன்று அணிகள் மட்டுமே மோதின. ஒரு அணி மற்ற இரண்டு அணிகளோடு மோதி எந்த அணி 2 போட்டிகளிலும் வெற்றிபெறுகிறதோ அந்த அணி சாம்பியனாக அறிவிக்கப்பட்டது. ஆசியக்கோப்பையின் முதல் போட்டியில் இந்திய அணி இலங்கையை தான் எதிர்த்து விளையாடியது. அந்த போட்டியில் 96 ரன்களுக்கு இலங்கையை ஆல் அவுட் செய்த இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது. சேத்தன் சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். 1 போட்டியில் வெற்றிபெற்றிருந்த இலங்கை அணி ரன்னர் அப்பாக அறிவிக்கப்பட்டது. 2 போட்டியிலும் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. தொடரில் ரவி சாஸ்திரி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.
1986ஆம் ஆண்டு இலங்கையில் போட்டி நடைப்பெற்றதால் இந்திய அணி அப்போதைய அசாதரண சூழ்நிலையில் தொடரில் பங்கேற்காமல் போனது. அதற்கு பிறகான 3 ஆசியக்கோப்பை தொடர்களிலும் இந்தியா-இலங்கை அணிகள் இறுதிப்போட்டியில் களம் கண்டன.
பவுலராக கலக்கிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் : 1988ஆம் ஆண்டு நடந்த ஆசியக்கோப்பை பைனலில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் சிறப்பான பந்துவீச்சால் (3 விக்கெட்டுகள்) இலங்கை அணி 176 ரன்கள் சேர்த்தது. இரண்டாவதாக விளையாடிய இந்திய அணியில் நோவ்ஜோத் சிதுவின் அபாரமான அரைசதத்தால் (76 ரன்கள்) இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கோப்பையை தட்டிச்சென்றது.
4 விக்கெட்டுகளை கைப்பற்றிய கபில்தேவ் : 1991-ம் ஆண்டு நடந்த ஆசியக்கோப்பை பைனலில் இலங்கை அணி கபில்தேவின் அற்புதமான பந்துவீச்சால் (4 விக்கெட்டுகள்) 204 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்திய அணியில் சஞ்சய் மஞ்ரேக்கர் (75* ரன்கள்), சச்சின் டெண்டுல்கர் (53 ரன்கள்) மற்றும் கேப்டன் முகமது அசாருதின் (54* ரன்கள்) மூன்று பேரின் அதிரடியான பேட்டிங்கால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா கோப்பையை தட்டிச்சென்றது.
90 ரன்கள் குவித்த அசாருதின் : 1995-ம் ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி வெங்கடேஷ் பிரசாத் மற்றும் அனில் கும்ப்ளே இருவரின் அற்புதமான பந்துவீச்சால் 230 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கோப்பையை நோக்கி 231 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் (41 ரன்கள்), நோவ்ஜோத் சிது (84* ரன்கள்) மற்றும் கேப்டன் அசாருதின் (90* ரன்கள்) என மூன்று பேரும் சேர்ந்து 4வது ஆசியக்கோப்பை டைட்டிலுக்கு எடுத்துச்சென்றனர். ஆசியக்கோப்பை வரலாற்றில் இதுவரை தொடர்ச்சியாக 3முறை பைனலில் தோற்ற ஒரே அணி இலங்கை மட்டும் தான்.
4 முறை இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்த இலங்கை அணி, வாங்கிய அடியை திருப்பி கொடுப்பதற்காக காத்திருந்தது. இலங்கை அணியின் அந்த ஆதங்கம் 1997-ம் ஆண்டு கேப்டன் அர்ஜுன ரனதுங்காவால் முடிவுக்கு வந்தது.
இலங்கையின் கொழும்புவில் நடைபெற்ற அந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி 239 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அரைசதம் அடித்து முகமது அசாருதினுடன் நல்ல பார்ட்னர்ஷிப் போட்டிருந்த சச்சினை முத்தையா முரளிதரன் வெளியேற்றி அசத்தினார். அதிகபட்சமாக சச்சின் 53 ரன்கள் மற்றும் அசாருதின் 81 ரன்கள் அடித்தனர். 240 என்ற வெற்றி இலக்கை துரத்திய இலங்கை அணியில் ஓபனர்களாக களமிறங்கிய சனத் ஜெயசூர்யா (63 ரன்கள்) மற்றும் அட்டப்பட்டு (84* ரன்கள்) இருவரும் போட்டியை கிட்டத்தட்ட முடித்துவைத்தனர். இறுதியாக களத்திற்கு வந்த கேப்டன் ரனதுங்கா 62 ரன்கள் சேர்த்து இலங்கையை இரண்டாவது ஆசியக்கோப்பை டைட்டிலுக்கு அழைத்துச்சென்றார்.
கொழும்புவில் நடைபெற்ற இந்த பைனலில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் அட்டப்பட்டு (65 ரன்கள்) மற்றும் சங்ககரா (53 ரன்கள்) இருவரும் இலங்கையை 228 ரன்களுக்கு எடுத்துச்சென்றனர். இந்தியா இந்த இலக்கை எளிதாக வென்றுவிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. சச்சினை (75 ரன்கள்) தவிர வேறு எந்த இந்திய வீரரும் சோபிக்கவில்லை.
பாகிஸ்தானில் நடைபெற்ற இந்த போட்டியில் எம் எஸ் தோனி தலைமையில் இந்தியா களமிறங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சனத் ஜெயசூர்யாவின் அபாரமான சதத்தால் இலங்கை அணி வலுவான 273 ரன்களை எட்டியது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியை இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் 173 ரன்களில் சுருட்டினர்.
இலங்கையின் மிஸ்டிரி ஸ்பின்னரான அஜந்தா மெண்டீஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதிகபட்சமாக சேவாக் (60 ரன்கள்), எம் எஸ் தோனி (49 ரன்கள்) மட்டுமே அடித்தனர். இந்த தோல்வியை தொடர்ந்து இந்தியா தொடர்ச்சியாக 3 முறை இலங்கையிடம் பைனலில் தோல்வியை சந்தித்தது.
2010ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி, குமார் சங்ககரா தலைமையிலான இலங்கை அணியுடன் பைனலில் மோதியது. முதலில் விளையாடிய இந்திய அணி தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான அரைசதத்தால் (66 ரன்கள்) 268 ரன்கள் சேர்த்தது. இரண்டாவது பாதியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆசிஸ் நெக்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கையை 187 ரன்கள் சுருட்டினார். இந்திய இலங்கையுடன் ஏற்பட்ட தொடர் தோல்விக்கு பழித்தீர்த்துக்கொண்டது.
8 முறை மோதியிருக்கும் இலங்கை-இந்தியா பைனலில் இந்தியா 5 முறையும், இலங்கை 3 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்தியாவின் இந்த ஸ்டிரீக்கை முறியடிக்கும் முயற்சியில் இலங்கை இந்தமுறை களமிறங்கும் என தெரிகிறது. சொந்த மண்ணில் நடைபெறுவதால் இலங்கை அணியால் எதையும் சாதிக்க முடியும். இந்தியா வெற்றியை 6ஆக மாற்ற போகிறதா?, இல்லை இலங்கை 4ஆக மாற்ற போகிறதா? என்ற டிவிஸ்ட் செப்டம்பர் 17ஆம் தேதி முடிவுக்கு வரும்.