2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. 13வது உலகக் கோப்பைத் தொடரான இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுவரை நடந்த உலகக் கோப்பைகளின் சிறந்த தருணங்களை சற்று அசைபோடுவோம். இந்த எபிசோடில் பார்க்கப்போவது 1996 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டி.
1996 அரையிறுதியில் இந்த இரு இரண்டு முறை நேருக்கு நேர் மோதின. அந்த முதல் போட்டி நடந்த காலகட்டம், அது முடிந்த விதம் ஆகியவற்றையும் பார்த்தால்தான், இரண்டாவது போட்டியின் தாக்கம் முழுமையாகப் புரியும்.
இந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற 12 அணிகள் ஆறு ஆறாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு அணியும் 5 போட்டிகளில் விளையாடும். அதில் 2 போட்டிகளை வென்றாலே காலிறுதி வாய்ப்பு ஓரளவு உறுதியாகிவிடும். ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்தது. இலங்கையுடன் கொழும்புவில் நடக்கவேண்டிய மூன்றாவது போட்டியில், பாதுகாப்பு காரணங்களுக்காகப் புறக்கணித்தது வெஸ்ட் இண்டீஸ். எப்படியும் கென்யாவுக்கு எதிராக அந்த அணி வெற்றி பெற்றுவிடும் என்பதால் அது பெரிய தாக்கம் ஏற்படுத்தும் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி கொடுத்தது கென்யா.
வெறும் 166 ரன்களே எடுத்திருந்தாலும், பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை வெறும் 93 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது கென்யா. ஒட்டுமொத்த உலகமும் அதிர்ந்து போனது. வெஸ்ட் இண்டீஸ் அணி காலிறுதி வாய்ப்பை இழந்துவிடுமோ என்று கருதப்பட்டது. ஏனெனில், அந்த அணியின் கடைசி போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக! அந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெல்லவேண்டும். இந்திய அணி ஜிம்பாப்வேயை வீழ்த்தவேண்டும். கென்யா இலங்கைக்கு எதிராகத் தோற்கவேண்டும். அவை மூன்றுமே நடந்தால் தான் வெஸ்ட் இண்டீஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலை ஏற்பட்டது. அவை அனைத்துமே நடக்க, வெஸ்ட் இண்டீஸ் காலிறுதிக்கு முன்னேறியது.
தட்டுத்தடுமாறி குரூப் சுற்றைக் கடந்திருந்தாலும், காலிறுதியில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது வெஸ்ட் இண்டீஸ். குரூப் சுற்றில் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று மிரட்டலான ஃபார்மில் காலிறுதிக்குள் நுழைந்த தென்னாப்பிரிக்காவை 19 ரன்களில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ். அங்கு மீண்டும் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது அந்த அணி.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணிக்கு கர்ட்லி அம்ப்ரோஸ், இயன் பிஷப் இருவரும் மாபெரும் அதிர்ச்சியைக் கொடுத்தனர். அவர்களின் புயல் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 15 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணி. ஆனால் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டுவர்ட் லா, மைக்கேல் பெவன் இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். லா 72 ரன்னிலும் பெவன் 69 ரன்னிலும் வெளியேறினர். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் மட்டுமே எடுத்தது ஆஸ்திரேலியா.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அந்த நாளில் நான்காவது விக்கெட்டுக்குப் பிறகு எதுவுமே சரியாக அமையவில்லை. புயல் வேகத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டு ஆட்டத்தில் தங்கள் பிடியை இழந்த அந்த அணி, பேட்டிங்கிலும் அதையே செய்தது. 44வது ஓவரின் மூன்றாவது பந்தில் நான்காவது விக்கெட்டாக ரோஜர் ஹார்பர் வெளியேறியபோது அந்த அணி 173 ரன்கள் எடுத்திருந்தது. 39 பந்துகளில் 35 ரன்கள் தேவை. கையில் இருந்ததோ 6 விக்கெட்டுகள். களத்தில் கேப்டன் ரிச்சீ ரிச்சர்ட்சன் இருந்தார்.
இங்கு ரிச்சீ ரிச்சர்ட்சன் பற்றி ஒரு விஷயம் குறிப்பிட்டாகவேண்டும். லீக் சுற்றில் அந்த அதிமுக்கிய போட்டியில் ஆஸ்திரேலியாவை வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தியபோது ஆட்ட நாயகன் விருது பெற்றது ரிச்சர்ட்சன் தான். 229 ரன்களை சேஸ் செய்த அந்த அணிக்காக ஆட்டமிழக்காமல் 93 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார் அவர். அதனால் அந்த அணி நான்காவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுவிடும் என்று நம்பப்பட்டது. ஆநால் 45வது ஓவரில் விஸ்வரூபம் எடுத்தது ஆஸ்திரேலியா. வார்னே வீசிய அந்த ஓவரில் 1 ரன் மட்டுமே எடுத்தது வெஸ்ட் இண்டீஸ். ஒரு விக்கெட்டும் விழுந்தது. மெக்ராத் வீசிய அடுத்த ஓவரில் மூன்றே ரன்கள். மீண்டும் வார்னே, மீண்டும் ஒரு ரன் ஒரு விக்கெட் ஓவர். கடைசி 3 ஓவர்களில் 25 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. டேமியன் ஃபிளமிங்கின் 48வது ஓவரில் ரிச்சீ ரிச்சர்ட்சன் பௌண்டரி அடித்தார். அந்த ஓவரில் 8 ரன்கள் கிடைத்தது. மீண்டும் வார்னே, மீண்டும் விக்கெட். ஆனால் இம்முறை 4 ரன்கள்.
கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. ஃபிளெமிங் வீசிய அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஃபோர் அடித்தார் ரிச்சர்ட்சன். அடுத்த பந்தில் ரிச்சர்ட்சன் சிங்கிள் எடுக்கவேண்டும் என்ற தவறான முடிவை எடுத்தார். விக்கெட் கீப்பருக்கு அருகே சென்ற பந்துக்கு அவர் ஓட முற்பட, அம்ப்ரோஸ் ரன் அவுட் ஆனார். 4 பந்துகளில் 6 ரன்கள் தேவை. ரிச்சர்ட்சனோ இப்போது நான் ஸ்டிரைக்கர் எண்டில். புதிதாக களம் புகுந்த வால்ஷுக்கு கொஞ்சமும் இடம் கொடுக்காமல் முதல் பந்திலேயே வெளியேற்றினார் ஃபிளெமிங். 202 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது வெஸ்ட் இண்டீஸ். 49 பந்து இடைவெளியில் 8 விக்கெட்டுகளை இழந்து ஃபைனல் வாய்ப்பை இழந்தது அந்த அணி! உலகக் கோப்பையின் மகத்தான கம்பேக்குகளில் ஒன்றாக ஆஸ்திரேலியாவின் இந்த கம்பேக் இன்றும் பேசப்படுகிறது.