ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஆல்ரவுண்டரும் முன்னாள் கேப்டனுமான ஹீத் ஸ்ட்ரீக் இன்று அதிகாலை காலமானார் என செய்திகள் வெளியாகின. சர்வதேச கிரிக்கெட்டர்கள் பலர் அவருக்கு சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்திய சூழலில், முன்னாள் வீரரான ஹென்ரி ஒலங்கா அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். ஹீத் ஸ்ட்ரீக் நலமுடன் இருக்கிறார் என்றும், வதந்திகளை நம்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவருடன் டெக்ஸ் மெசேஜில் உரையாடியதை ஆதாரமாக வெளியிட்டிருக்கிறார் ஹென்ரி ஒலங்கா.
ஹீத் ஸ்ட்ரீக் - ஜிம்பாப்வே கிரிக்கெட் உலகின் மிக முக்கியப் பெயர். ஆல்ரவுண்டரான அவர் தன் வேகப்பந்துவீச்சால் அந்த அணியின் முக்கிய ஆயுதமாக விளங்கினார். 65 டெஸ்ட் போட்டிகளில் 216 விக்கெட்டுகளும், 189 ஒருநாள் போட்டிகளில் 239 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார். சர்வதேச அரங்கில் ஜிம்பாப்வே அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியது அவர்தான். டெஸ்ட் அரங்கில் வேறு எந்த ஜிம்பாப்வே வீரரும் 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியது இல்லை. அதேபோல் ஒருநாள் போட்டிகளில் யாரும் 150 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்ததில்லை. பந்துவீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அசத்தியிருக்கிறார் அவர். டெஸ்ட் போட்டியில் ஒரு சதமும் அடித்திருக்கிறார். ஒருநாள் & டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 24 அரைசதங்கள் அடித்திருக்கிறார். அதுதான் ஸ்ட்ரீக்கின் மகிமை!
1974ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி பிறந்த அவரது தந்தையும் முதல் தர கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். 1993ம் ஆண்டு தன் 19 வயதில் முதல் முறையாக முதல் தரப் போட்டிகளில் அறிமுகம் ஆனார் ஸ்ட்ரீக். அதே ஆண்டு நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்க அணிக்கான ஒருநாள் தொடரில் முதல் முறையாக தன் தேசிய அணிக்கு விளையாடும் வாய்ப்பு பெற்றார் அவர். ஒரு மாதம் கழித்து பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றார். கராச்சியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் பெற்ற ஸ்ட்ரீக், அந்தப் போட்டியில் ரொம்பவே சிரமப்பட்டார்.
முதல் இன்னிங்ஸில் 29 ஓவர்கள் பந்துவீசியும் அவரால் விக்கெட் எதுவும் வீழ்த்த முடியவில்லை. பேட்டிங்கில் கைகொடுப்பார் என்று நினைத்திருந்த நிலையில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். இரண்டாவது இன்னிங்ஸில் 10 ஓவர்கள் வீசினார். இந்த முறையும் அவரால் தன் விக்கெட் கணக்கைத் தொடங்க முடியவில்லை.
அறிமுகம் மிகவும் கடினமாக இருந்திருந்தாலும், இரண்டாவது போட்டியில் தன் திறமையை கிரிக்கெட் உலகத்துக்கு நிரூபித்தார் அவர். பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் ஆமிர் சொஹைல் ஸ்ட்ரீக்கின் முதல் டெஸ்ட் விக்கெட்டாக அமைந்தார். முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ஓராண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்தபோது 3 போட்டிகளில் 22 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர் நாயகன் விருதும் பெற்றார். அசுர வேகத்தில் கிரிக்கெட் அரங்கில் வளர்ச்சியடைந்தார் ஸ்ட்ரீக்.
1995/96 சீசனில் நடந்த லோகன் கோப்பை போட்டியில் மடபெலாலேண்ட் அணிக்காக தன் தந்தையோடு இணைந்து விளையாடினார். கிட்டத்தட்ட சுமார் 30 ஆண்டுகள் கழித்து தந்தை மகன் இருவரும் ஒரே போட்டியில் விளையாடிய நிகழ்வு நடந்தேறியது.
தொடர்ந்து சர்வதேச அரங்கில் வளர்ச்சியடைந்த ஸ்ட்ரீக், 2000ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் இந்திய அணியை டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி சரித்திரம் படைத்தது ஜிம்பாப்வே. கிரிக்கெட் போர்டுனான பிரச்சனைகளால் கேப்டன் பதவியிலிருந்து 2001ல் அவர் நீக்கப்பட்டார். ஆனால் மீண்டும் 2002ம் ஆண்டு அவர் கேப்டனாக்கப்பட்டார். அவர் தலைமையில் 2000 ஐசிசி நாக் அவுட் டிராபி, 2002 சாம்பியன்ஸ் டிராபி, 2003 உலகக் கோப்பை என மூன்று பெரிய தொடர்களில் பங்கேற்ற ஜிம்பாப்வே, 2003 உலகக் கோப்பையில் சூப்பர் 6 சுற்று வரை முன்னேறியது. இருந்தாலும், போர்டுடன் மீண்டும் பிரச்சனை எழுந்ததால் 2004ல் அவர் பதவி பறிக்கப்பட்டது. ஜிம்பாப்வே அணியின் அதிமுக்கிய வீரராக விளங்கிய அவர் 2005ல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
தன் ஓய்வுக்குப் பிறகு இந்தியன் கிரிக்கெட் லீக் உள்பட பல டி20 போட்டிகளில் விளையாடிய அவர், 2007ல் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார். ஜிம்பாப்வே, வங்கதேசம், ஸ்காட்லாந்து போன்ற தேசிய அணிகளுடன் பயிற்சியாளர், பௌலிங் பயிற்சியாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்றிய அவர், ஐபிஎல் அரங்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகளுடனும் வேலை செய்திருக்கிறார்.
ஸ்ட்ரீக்கின் கிரிக்கெட் வாழ்க்கை பல சர்ச்சைகளை உள்ளடக்கியது. கேப்டனாக இருந்தபோது கிரிக்கெட் சங்கத்துடன் அடிக்கடி பிரச்சனைகள் இருந்துவந்தன. சமீபத்தில் 2021ம் ஆண்டு கூட சூதாட்டத்துக்குத் துணை போனதற்காக அவரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 8 ஆண்டுகளுக்கு தடை செய்தது.