ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஆடவர் உலகக்கோப்பையின் முடிவு இன்று தெரிய இருக்கிறது. கடந்த அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாகத் தொடங்கிய 2023 உலகக்கோப்பை தொடரில் 10 அணிகள் பங்கேற்றன. இதில் இரண்டுமுறை சாம்பியனான இந்தியாவும் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. இவ்விரு அணிகளும், இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடி வருகின்றன.
உலகக்கோப்பை இறுதிப்போட்டியைக் காண்பதற்கு விஐபிக்கள் பலர், அகமதாபாத் மைதானத்தில் குழுமியுள்ளனர். இந்த நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முதல் உலகக்கோப்பையை வென்று தந்தவருமான கபில் தேவ், “இறுதிப்போட்டியைக் காண பிசிசிஐ தமக்கு அழைப்பு விடுக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேட்டியளித்துள்ள அவர், “உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பிசிசிஐ என்னை அழைக்கவில்லை. அதனால் நான் அங்கே செல்லவில்லை. இருப்பினும், நான் 1983 உலகக்கோப்பை அணி அங்கே இருப்பதை விரும்பினேன். ஆனால் அங்கு நிறைய வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் நிறைய பொறுப்புகள் இருந்திருக்கலாம். அது போன்ற சூழ்நிலையில் சிலர் மறந்திருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
1983 உலகக்கோப்பையில் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற கபில் தேவ் தலைமையிலான அணி இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.