Jonny Bairstow Atul Yadav
கிரிக்கெட்

ENGvAFG | இங்கிலாந்தின் அதிரடியை சமாளிக்குமா ஆப்கானிஸ்தான்..!

இந்த பேட்டிங் சொர்க்க பூமியில் பேர்ஸ்டோ பெரிய இன்னிங்ஸ் ஆடலாம். தடுமாறும் ஆப்கானிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களை இவரது அதிரடி பேட்டிங் பதம் பார்த்தால், ஒரு ரெக்கார்ட் பவர்பிளே உறுதி.

Viyan
போட்டி 13: ஆப்கானிஸ்தான் vs இங்கிலாந்து
மைதானம்: ஃபெரோஷ் ஷா கோட்லா, டெல்லி Arun Jaitley Stadium Delhi
போட்டி தொடங்கும் நேரம்: அக்டோபர் 15, மதியம் 2 மணி

2023 உலகக் கோப்பையில் இதுவரை

ஆப்கானிஸ்தான்
முதல் போட்டி vs வங்கதேசம்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி
இரண்டாவது போட்டி vs இந்தியா: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி
புள்ளிப் பட்டியலில் இடம்: பத்தாவது

இங்கிலாந்து
முதல் போட்டி vs நியூசிலாந்து: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி
இரண்டாவது போட்டி vs வங்கதேசம்: 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
புள்ளிப் பட்டியலில் இடம்: ஐந்தாவது

மைதானம் எப்படி:

Arun Jaitley Stadium Delhi

பெரோஷ் ஷா கோட்லா மைதானம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கிறது. தென்னாப்பிரிக்க அணி உலகக் கோப்பையின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது இந்த மைதானத்தில் தான். இந்திய அணி ஆப்கானிஸ்தானைப் பந்தாடியதும் இங்கு தான். நிச்சயம் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தால் 400 ரன்களை தான் இலக்காக வைத்து விளையாடும்.

தோல்விப் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் அணி இன்னும் 50 ஓவர் ஃபார்மட்டில் பெரிய அணிகளுக்கு ஈடு கொடுத்து விளையாட முடியாமல் தடுமாறுகிறது. கடந்த உலகக் கோப்பையில் 9 போட்டிகளிலுமே தோற்றிருந்த அந்த அணி, இந்த முறையும் தடுமாறிக்கொண்டிருக்கிறது. பேட்டிங், பௌலிங் என இரண்டு ஏரியாவிலுமே அந்த அணி இன்னும் கிளிக் ஆகவில்லை. இந்தியாவுக்கு எதிராக 272 ரன்கள் எடுத்திருந்தாலும், அது அதைவிட சிறப்பாக செயல்பட்டிருக்கவேண்டிய மைதானம் அது. அதிக நம்பிக்கை வைக்கப்பட்டிருக்கும் ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரான் இருவருமே இன்னும் நல்ல இன்னிங்ஸ் ஆடவில்லை. ஆனால், அதுமட்டுமே பிரச்சனையும் இல்லை. அவர்களின் பெரும் பலமாகக் கருதப்படும் ஸ்பின் யூனிட்டும் எந்த தாக்கமும் ஏற்படுத்தவில்லை. முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான், ரஷீத் கான் மூவருமே தங்கள் சிறப்பை வெளிப்படுத்தவில்லை. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ரஷீத் கான் மிகவும் தாமதமாக பந்துவீச வந்ததுமே விமர்சனம் ஏற்படுத்தியது. இன்னும் அவர் பொறுப்பெடுத்துக்கொள்ளவேண்டும் என்று விமர்சகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் இங்கிலாந்து முன்னாள் வீரர் என்பதால், இந்தப் போட்டி அவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

ஸ்டோக்ஸ் ஆடுவது சந்தேகம் தான்!

Ben Stokes

இங்கிலாந்து அணி முதல் போட்டியில் தோற்றிருந்தாலும், நல்ல கம்பேக் கொடுத்து இரண்டாவது போட்டியில் வென்றுவிட்டது. இருந்தாலும் அவர்கள் இன்னும் முழுமையான சாம்பியன் அணியாகத் தெரியவில்லை. அந்த அணியின் மிடில் ஆர்டர் முன்பைப் போல் சிறப்பாக செயல்படவில்லை. ஸ்டோக்ஸ் போன்ற ஒரு ஜாம்பவான் வீரரை அந்த அணி மிஸ் செய்கிறது. தொடர்ந்து ஸ்டோக்ஸ் பயிற்சியில் ஈடுபட்டாலும், மிகவும் கவனமாகவே இருக்கிறார். இந்தப் போட்டிக்கு முன் அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாலும், அவர் பிளேயிங் லெவனில் ஆடுவது சந்தேகம் தான் என்று தெரிகிறது. அதேபோல், வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் வயிற்றுப் பிரச்சனை காரணமாக வலைப்பயிற்சியில் ஈடுபடுவில்லை என்று கூறப்படுகிறது. ஒருவேளை அவர் விளையாடாமல் போனால் டேவிட் வில்லி அல்லது கஸ் அட்கின்சன் இந்த உலகக் கோப்பையில் முதல் வாய்ப்பு பெறுவார்கள்.

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்:

ஆப்கானிஸ்தான் - ரஷீத் கான்: ஆப்கானிஸ்தான் அணி இந்தப் போட்டியில் ஒரு பெரும் அப்செட் நிகழ்த்தவேண்டுமெனில் அந்த அணியின் மிகச் சிறந்த வீரர் தன்னுடைய மிகச் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியாகவேண்டும். ஆப்கானிஸ்தானின் வாய்ப்பு ரஷீத் கானின் கையில் தான். சொல்லப்போனால் பந்தை மாயமாக சுழற்றும் அவரது மணிக்கட்டில்தான்.

இங்கிலாந்து - ஜானி பேர்ஸ்டோ: முந்தைய போட்டியில் ஒரு மகத்தான சதம் அடித்து அசத்தியதைப் போல், இந்த பேட்டிங் சொர்க்க பூமியில் பேர்ஸ்டோ அதைவிடப் பெரிய இன்னிங்ஸே ஆடலாம். தடுமாறும் ஆப்கானிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களை இவரது அதிரடி பேட்டிங் பதம் பார்த்தால், ஒரு ரெக்கார்ட் பவர்பிளே உறுதி.