Zimbabwe Afro T10 Twitter
கிரிக்கெட்

ஜிம்பாப்வே டி10 தொடரை வென்றது டர்பன் குவாலாண்டர்ஸ்!

ஜிம்பாப்வேவில் தொடங்கப்பட்ட புதிய டி10 தொடரான ஜிம் ஆஃப்ரோ டி10 லீக்கை வென்று அசத்தியிருக்கிறது டர்பன் குவாலாண்டர்ஸ் அணி.

Viyan

ஜிம்பாப்வேவில் தொடங்கப்பட்ட புதிய டி10 தொடரான ஜிம் ஆஃப்ரோ டி10 லீக்கை வென்று அசத்தியிருக்கிறது டர்பன் குவாலாண்டர்ஸ் அணி. சனிக்கிழமை இரவு நடந்த இறுதிப் போட்டியில் ஜோஹன்னெஸ்பெர்க் பஃபலோஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது டர்பன் குவாலாண்டர்ஸ் அணி.

உலகின் ஒவ்வொரு மூலையிலும் கிரிக்கெட் லீக்குகள் நடந்துவருகின்றன. ஒவ்வொரு மாதமும் புதிதாக எங்காவது தொடர்கள் தொடங்கப்பட்டுவருகின்றன. அந்த வரிசையில் தற்போது ஜிம்பாப்வேவிலும் தொடங்கப்பட்டுள்ளது. ஜிம் ஆஃப்ரோ டி10 என்ற லீக் ஜிம்பாப்வேயில் தொடங்கப்பட்டது.

அபு தாபி டி10 லீகை தோற்றுவித்த ஷாஜி உல் முல்க் தான் இந்த தொடரையும் நிறுவியவர்.

ஜிம்பாப்வேவை மையமாகக் கொண்டு 2 அணிகள், தென்னாப்பிரிக்காவை மையமாகக் கொண்டு 3 அணிகள் என மொத்தம் 5 அணிகள் கொண்ட தொடராக இது தொடங்கப்பட்டது. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியோடு 2 முறை ரவுண்ட் ராபின் முறையில் மோதும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களில் முடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இதுதான் இந்த தொடரின் அமைப்பு.

ஜிம் ஆஃப்ரோ டி10 அணிகளின் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள்:

1. புலவாயோ பிரேவ்ஸ் - சிகந்தர் ராஸா - டகீ பிரவுன்

2. ஹராரே ஹரிகேன்ஸ் - ஐயன் மார்கன் - ஜே.பி.டுமினி

3. கேப் டவுன் சேம்ப் ஆர்மி - பார்த்திவ் படேல் - லான்ஸ் குளூஸ்னர்

4. டர்பன் குவாலேண்டர்ஸ் - கிரெய்க் எர்வைன் - ஆகிப் ஜாவேத்

5. ஜோஹன்னெஸ்பெர்க் பஃபலோஸ் - முகமது ஹஃபீஸ் - ஹெர்ஷல் கிப்ஸ்

இணைந்த ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள்!

இந்த தொடரின் முதல் சீசன் ஜூலை 21ம் தேதி தொடங்கியது. முதல் சீசனில் மொத்தம் 7 இந்திய வீரர்கள் பங்கேற்றனர். சுரேஷ் ரெய்னா (புலவாயோ பிரேவ்ஸ்), பார்த்திவ் படேல், ஸ்டுவர்ட் பின்னி (கேப் டவுன் சேம்ப் ஆர்மி), ராபின் உத்தப்பா, எஸ்.ஶ்ரீசாந்த், இர்ஃபான் பதான் (ஹராரே ஹரிகேன்ஸ்), யுசுப் பதான் (ஜோஹன்னெஸ்பெர்க் பஃபலோஸ்) ஆகிய 7 முன்னாள் இந்திய வீரர்கள் அவர்கள். இதில் பார்த்திவ் படேல் கேப் டவுன் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார்.

21ம் தேதி தொடங்கிய லீக் சுற்று, 27ம் தேதி முடிவுக்கு வந்தது. 20 போட்டிகளின் முடிவில் டர்பன் குவாலேண்டர்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. விளையாடிய 8 போட்டிகளில் ஐந்தில் வென்றது அந்த அணி. ஜோஹன்னெஸ்பெர்க் பஃபலோஸ், கேப் டவுன் சேம்ப் ஆர்மி, ஹராரே ஹரிகேன்ஸ் ஆகிய 3 அணிகளும் 4 வெற்றிகளோடு 8 புள்ளிகள் பெற்று முறையே 2 முதல் நான்காவது இடம் வரை பிடித்தன. புலவாயோ பிரேவ்ஸ் அணி 3 வெற்றிகள் மட்டும் பெற்று கடைசி இடம் பிடித்து வெளியேறியது.

முதல் கோப்பை வென்ற டர்பன் அணி!

குவாலிஃபயர் 1 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் குவாலேண்டர்ஸ் 140 ரன்கள் குவித்தது. அதை சேஸ் செய்த பஃபலோஸ் பெருமளவு தடுமாறியது. ஆனால் முன்னாள் இந்திய ஆல் ரவுண்டர் யுசுப் பதான் தனி ஆளாக நின்று ஆட்டத்தை முடித்து வைத்தார். 26 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் விளாசி போட்டியை வென்று கொடுத்தார் அவர். குவாலேண்டர்ஸ் அடித்த 140 ரன்கள் தான் அப்போது இந்தத் தொடரின் டாப் ஸ்கோராக இருந்தது. ஆனால் அதை சேஸ் செய்து சாதனை படைத்தது பஃபலோஸ். ஆனால் அந்த சாதனை சுமார் 2 மணி நேரம் தான் நீடித்தது.

Zimbabwe Afro T10

எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட் செய்த கேப் டவுன் சேம்ப் ஆர்மி 145 ரன்கள் குவித்தது. ஆனால் இந்த ஸ்கோரும் சேஸ் செய்யப்பட்டது. 9.2 ஓவர்களில் ஒரேயொரு விக்கெட்டை மட்டும் இழந்து 146 ரன்கள் குவித்தது ஹராரே ஹரிகேன்ஸ். இந்த முறை சேஸுக்கு உதவியவரும் ஒரு இந்திய வீரர் தான். முன்னாள் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வீரர் தான்! 36 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் விளாசி போட்டியை வென்றுகொடுத்தார் ராபீ.

இப்படியாக இந்தப் போட்டியை வென்றிருந்தாலும், குவாலிஃபயர் 2 போட்டியில் 82 ரன்கள் மட்டுமே எடுத்திருந்ததால் டர்பன் குவாலேண்டர்ஸிடம் தோல்வியைத் தழுவியது ஹரிகேன்ஸ்.

Durban Qalandars

இதைத்தொடர்ந்து சனிக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் ஜோஹன்னெஸ்பெர்க் பஃபலோஸ் (Joburg Buffaloes), டர்பன் குவாலேண்டர்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய பஃபலோஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்தது. அதை 9.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து சேஸ் செய்தது டர்பன். ஹஸ்ரத்துல்லா சசாய் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதும் வென்றார். இந்த சீசனில் 6 போட்டிகளில் 218 ரன்கள் குவித்த டர்பன் வீரர் டிம் செய்ஃபர்ட் தொடர் நாயகன் விருது வென்றார்.