டேவிட் வார்னர் ICC
கிரிக்கெட்

முதல் ஆஸி.வீரராக டேவிட் வார்னர் படைத்த பிரத்யேக சாதனை! கோலி, ராஸ் டெய்லருக்கு பின் 3-வது வீரர்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கிய டேவிட் வார்னர், 36 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அசத்தினார்.

Rishan Vengai

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.

முதலில் தொடங்கப்பட்ட 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா முதல் போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் ஒரு அசாத்தியமான பந்துவீச்சு மூலம் அசத்திய ஷமர் ஜோசப் 1-1 என டெஸ்ட் தொடரை சமனில் முடித்துவைத்தார். 27 வருடங்களுக்கு பிறகு முதன்முதலாக ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் போட்டியை வென்றது மட்டுமல்லாமல், பல வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை சமன்செய்து புது வரலாறு படைத்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

ஆனால் என்னதான் டெஸ்ட் தொடரை சமன்செய்திருந்தாலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 போட்டிகளிலும் வென்ற ஆஸ்திரேலியா அணி, 3-0 என ஒயிட்வாஸ் செய்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பதிலடி கொடுத்தது.

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது டி20 போட்டி ஹோபர்ட்டில் இன்று தொடங்கியது.

12 பவுண்டரிகள், 1 சிக்சர்! வானவேடிக்கை காட்டிய வார்னர்!

முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த டேவிட் வார்னர் தன்னுடைய 100-வது டி20 போட்டியில் களமிறங்கினார்.

தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை ஆடிய டேவிட் வார்னர் வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சை சிதறடித்தார். வெறும் 36 பந்துகளை சந்தித்த அவர் 12 பவுண்டரிகள், 1 சிக்சர் என துவம்சம் செய்து 70 ரன்கள் குவித்து அசத்தினார்.

david warner

வார்னருடன் களத்தில் தீயாக விளையாடிய ஜோஸ் இங்கிலிஸ் 39 ரன்களும், அடுத்தடுத்து களமிறங்கிய டிம் டேவிட் மற்றும் வேட் இருவரும் 37 மற்றும் 21 ரன்கள் என அடிக்க 20 ஓவர் முடிவில் 213 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா அணி. 214 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிவருகிறது.

அனைத்து ஃபார்மேட்டிலும் 100 போட்டிகளில் விளையாடிய முதல் ஆஸி வீரர்!

100வது டி20 போட்டியில் களமிறங்கிய டேவிட் வார்னர், ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் மற்றும் டி20 என மூன்றுவடிவ கிரிக்கெட் ஃபார்மேட்டிலும் 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

david warner

இந்த சாதனையை இதுவரை நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் மற்றும் விராட் கோலி இரண்டு வீரர்கள் மட்டுமே செய்திருந்த நிலையில், மூன்றாவது வீரராக டேவிட் வார்னர் இணைந்துள்ளார். 112 டெஸ்ட் போட்டிகளிலும், 161 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியிருக்கும் டேவிட் வார்னர், தற்போது 100வது டி20 போட்டியில் களம் கண்டுள்ளார்.

100வது போட்டிகளில் பிரத்யேக சாதனை!

தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக விளையாடிய டேவிட் வார்னர் இரட்டை சதமடித்து அசத்தினார். அதேபோல இந்திய அணிக்கு எதிராக தன்னுடைய 100-வது ஒருநாள் போட்டியில் விளையாடிய அவர், அந்த போட்டியிலும் சதமடித்து அசத்தியிருந்தார்.

அதேபோல 100-வது டி20 போட்டியில் விளையாடியிருக்கும் டேவிட் வார்னர் 70 ரன்களை பதிவு செய்துள்ளார். இதன்மூலம் அனைத்து வடிவ 100-வது போட்டியிலும் குறைந்தபட்சம் அரைசதமடித்த முதல் வீரர் என்ற பெருமையை வார்னர் பெற்றுள்ளார்.