நடப்பு 2023 உலகக்கோப்பையின் இந்திய அணியில் இருக்கும் வீரர்களில் மூத்த வீரர்கள் 3 பேர்தான். அஸ்வின், கோலியை தொடர்ந்து ரோகித் சர்மா என்ற மூன்று நபர்களில் அஸ்வின் மற்றும் கோலி இருவரும் 2011 உலகக்கோப்பையில் பங்கேற்று, உலகக்கோப்பையை கையில் ஏந்திவிட்டார்கள். இதனால் உலகக்கோப்பையை வெல்லாத ஒரே மூத்த வீரராக ரோகித் சர்மா மட்டுமே நீடித்துவருகிறார்.
2011 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்ப்படாதபோது கூட செய்தியாளர் சந்திப்பிலேயே அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார் ரோகித் சர்மா. கோப்பை வென்ற அணியில் விராட் கோலியின் இடத்தில் நிச்சயம் ரோகித் சர்மா இருந்திருக்க வேண்டும். இந்நிலையில்தான் இந்திய அணிக்காக மீண்டும் ஒரு உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற போராட்டத்தில் முழுவீச்சாக இறங்கியுள்ளார் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா.
ரோகித் சர்மா குறித்து பேசியிருக்கும் அவருடைய சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட், “இதுவே அவரது கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம். இந்த உலகக்கோப்பையை வெல்லவேண்டும் என அவர் முன்னேறும் விதம் அப்படித்தான் இருக்கிறது. மேலும் அவருக்கு இப்போது 36 வயதாகிறது, அடுத்த உலகக் கோப்பை ஆடவேண்டுமானால் இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. பொதுவாக 40 வயதில் எந்த வீரரும் கிரிக்கெட் விளையாட விரும்பமாட்டார்கள். அதனால் இது அவரது கடைசி உலகக் கோப்பையாக இருக்கும் என்று நான் உணர்கிறேன்” என்று ANI இடம் பேசியுள்ளார்.
மேலும் உலகக்கோப்பை வெல்லவேண்டும் என்று ரோகித் துடிப்பதற்கான காரணத்தை பகிர்ந்த தினேஷ், “அவரும் நாட்டுக்காக கோப்பையை வெல்ல விரும்புகிறார். ஏனெனில் அவர் 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் ஒரு அங்கமாக இல்லை. உலகக் கோப்பை அவருடைய கையில் இருப்பதை பார்ப்பது எனக்கு மிகவும் பெருமையான தருணமாக இருக்கும். அவர் அதை நோக்கி நேர்மறையாக செல்கிறார். ஆரம்பத்திலிருந்தே அவர் ஒரு நேர்மறையான கிரிக்கெட் வீரராக இருந்தார், அது அவருடைய பிளஸ் பாயிண்ட்” என்று கூறியுள்ளார்.
மேலும், "அவர் பேட்டிங் செய்யும் விதத்தை பார்த்தால், ஒவ்வொரு போட்டியிலும் சதம் அடிப்பார் என்பது போல் தெரிகிறது. இருப்பினும் பிரதானமாக அவர் தொடர்ந்து அணிக்காக மட்டுமே விளையாட நினைக்கிறார். ரோகித் திடமான துவக்கத்தை கொடுத்தால், அடுத்து வரும் பேட்டர்களுக்கு எளிதாக இருக்கும் என்பது தெரிந்து செயல்படுகிறார். அவரின் இந்த செயல்பாடு எனக்கு பெருமைதான் என்றாலும், எனக்கு ரோஹித்தின் சதம் வேண்டும். வான்கடே மைதானத்தில் அவர் சதம் அடிக்க வேண்டும்" என்று அவருடைய விரும்பத்தையும் லாட் தெரிவித்துள்ளார்.