2023 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்பு வரை கிட்டத்தட்ட ஒருவருடமாக எந்தவிதமான கிரிக்கெட்டிலும் விளையாடாத ஜஸ்பிரித் பும்ரா மீது அதிக கேள்விகள் வைக்கப்பட்டன. காயத்தால் வெளியேறிய ஒருவீரர், கடந்த ஒருவருடமாக எந்த போட்டியிலும் விளையாடாத போது எப்படி அவரை நேராக உலகக்கோப்பை தொடருக்கு எடுத்துசெல்வீர்கள் என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
ஆனால் ஓய்வில் இருந்த போதும் தன்னுடைய பவுலிங்கில் தரமான வேலை பார்த்து வந்திருக்கும் பும்ரா, புதிய பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் செய்யும் புதிய யுக்தியை கையில் கொண்டுவந்துள்ளார். இதற்கு முன்பு வரை புதிய பந்தில் அப்படி பந்துவீசி பும்ராவை நாம் பார்த்ததில்லை. 2023 ஆசிய கோப்பை தொடங்கி, நடப்பு உலகக்கோப்பை வரை சிறப்பான பவுலிங் எகானமியோடு கலக்கிவரும் பும்ரா, புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
நடப்பு உலகக்கோப்பையில் முதல் ஓவரிலேயே உள்ளேயும், வெளியேயுமாக பந்தை திருப்பும் ஜஸ்பிரித் பும்ரா அனைத்து உலக வீரர்களுக்கும் சிம்மசொப்பனமாக பந்துவீசி வருகிறார். எப்போதும் இல்லாத வகையில் புதிய பந்தில் அதிக டாட் பந்துகளை வீசிவரும் ஜஸ்பிரித் பும்ரா, பவர்பிளேவில் 2.7 எகானமியுடன் பந்துவீசிவருகிறார். பும்ரா அணியில் வந்ததற்கு பிறகு இந்திய அணியின் பவுலிங் யூனிட் அபாயகரமானதாக மாறியுள்ளது.
இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பையில் இந்திய பவுலர்களை முன்நின்று வழிநடத்தும் பும்ரா, அதிக டாட் பந்துகளை வீசி அசத்தியுள்ளார். 8 லீக் போட்டிகளில் 383 டெலிவரிகளை வீசியிருக்கும் ஜஸ்பிரித் பும்ரா, அதில் 268 பந்துகளை டாட் பந்துகளாக வீசி மிரட்சியை ஏற்படுத்தியுள்ளார். அடுத்தடுத்த இடத்தில் நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட், மிட்செல் சாண்ட்னர் மற்றும் நெதர்லாந்தின் ஆர்யன் தத் முதலிய வீரர்கள் இருக்கின்றனர்.