Bumrah - Ruturaj Twitter
கிரிக்கெட்

கேப்டனாக கம்பேக் கொடுத்த பும்ரா; ருதுராஜ் துணை கேப்டன்! அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

காயம் காரணமாக கடந்த ஒரு வருடங்களாக எந்தவிதமான கிரிக்கெட்டிலும் விளையாடாமல் இருந்து வந்த ஜஸ்பிரிட் பும்ரா இந்திய அணிக்கு தற்போது திரும்பியுள்ளார்.

Rishan Vengai

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா நீண்ட காயத்திற்குப் பிறகு மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். கடந்த ஆண்டு முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பும்ரா, 2022 செப்டம்பர் மாதத்திலிருந்து நீண்ட ஓய்வில் இருந்தார். அவருடைய கம்பேக் எப்போது இருக்கும்? டி20 உலகக்கோப்பையை மிஸ் செய்த பும்ரா ஒருநாள் உலகக்கோப்பையிலாவது விளையாடுவாரா? என்ற எதிர்ப்பார்ப்பு அனைத்து இந்திய ரசிகர்களுக்கும் அதிகமாகவே இருந்தது.

இந்நிலையில், தற்போது பும்ரா குறித்து அதிகாரப்பூர்வமாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கும் பிசிசிஐ, ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கவிருக்கும் அயர்லாந்துக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்துவார் என்று தெரிவித்துள்ளது. கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலிய பல வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

2022 ஆசியகோப்பைக்கு சென்று 2023 ஆசியக்கோப்பைக்கு வருகை தரும் பும்ரா!

கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஜஸ்பிரிட் பும்ராவின் ஆசையானது நிராசையாகவே முடிந்தது. டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் அவரது காயம் மோசமாக மாறியதால், அவர் ஆசிய கோப்பையை மட்டுமின்றி டி20 உலகக்கோப்பையும் தவறவிட்டார்.

பும்ரா

முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தில் அவதியுற்ற அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 2023 ஐபிஎல் தொடருக்கே பும்ரா திரும்பிவிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகியே இருந்தார். ஐபிஎல்லை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் அவர் பங்கேற்க முடியாத நிலையே இருந்துவந்தது. இதனால் எப்போது தான் பும்ரா அணிக்குள் திரும்புவார் என்ற எதிர்ப்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே அதிகமாகவே இருந்துவந்தது.

Jasprit Bumrah

இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டு வந்த பும்ரா ஆசியக்கோப்பையில் பங்கேற்கும் வகையில் தயாராக இருக்கிறார் என சொல்லப்பட்டது. பிறகு அயர்லாந்து தொடருக்கு திரும்பிவிடுவார் என நம்பப்பட்டது. முன்னதாக பும்ராவின் கம்பேக் குறித்து பேசியிருந்த பிசிசிஐ அதிகாரி ஒருவர், “நிதின் படேல் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் பும்ராவுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றி வருகின்றனர். NCA மறுவாழ்வுக் காலத்தில் அவரைத் தொடர்ந்து கண்காணித்து காயத்திலிருந்து மீட்டு எடுத்துவந்துள்ளனர். மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கும் அவர்கள், இனிவரும் எந்த தொடரிலிருந்தும் பும்ரா வெளியேறுவதை விரும்பவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

கேப்டனாக பும்ரா, துணை கேப்டனாக ருதுராஜ்! பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!

சமீபமாக ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்னா இருவரும் தீவிரமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஜஸ்பிரிட் பும்ரா முழு உடற் தகுதியுடன் இந்திய அணிக்கு திரும்பியிருக்கிறார். அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கும் பிசிசிஐ, அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு பும்ரா தலைமையிலான இந்திய அணியை அறிவித்துள்ளது.

அந்த அணியில் ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்ட பல இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். காயத்திலிருந்து மீண்டு வந்த பிரசித் கிருஷ்ணா, ரிங்கு சிங், ஷிவம் துபே, திலக் வர்மா, ஜிதேஷ் ஷர்மா, ஆவேஷ் கான் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார்.

அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி :

ஜஸ்பிரிட் பும்ரா (கேப்டன்),

ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்),

யஷஸ்வி ஜெய்ஸ்வால்,

திலக் வர்மா,

ரின்கு சிங்,

சஞ்சு சாம்சன் (WK),

ஜிதேஷ் சர்மா (WK),

ஷிவம் துபே,

வாஷிங்டன் சுந்தர்,

ஷபாஸ் அகமது ,

ரவி பிஸ்னோய்,

பிரசித் கிருஷ்ணா,

அர்ஷ்தீப் சிங்,

முகேஷ் குமார்,

அவேஷ் கான்.

அயர்லாந்து டி20 தொடர் ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதிவரை நடக்கவிருக்கும் நிலையில், ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெறும் ஆசியகோப்பையில் பங்கேற்கும் வகையில் ODI இந்திய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.