bumrah Manvender Vashist Lav
கிரிக்கெட்

கோலி, ரோஹித்தை விட பும்ரா ஏன் முக்கியம். நிரூபித்த 20 ஓவர்கள்..!

டெத் ஓவர்களில் எதிரணியை மொத்தமாக கட்டிப்போடுகிறார், விக்கெட்டுகளும் வீழ்த்தி எதிரணிகளை நிலைகுலையவைக்கிறார். இவை அனைத்தும் வேகப்பந்துவீச்சுக்கு பெரிய அளவு உதவாத ஆடுகளங்களில். இப்படியொரு வீரர் தானே மிகப் பெரிய மேட்ச் வின்னராக இருக்க முடியும்!

Viyan

இந்த உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் இந்திய அணி சாம்பியன் ஆவதற்கு எந்த வீரர் துருப்புச் சீட்டாக இருப்பார் என்ற விவாதம் வழக்கம்போல் எழுந்தது. சிலர் விராட் கோலி, ரோஹித் ஷர்மா போன்ற ஸ்டார் பேட்ஸ்மேன்களின் பக்கம் நின்றாலும், ஒருசிலர் ஜஸ்ப்ரித் பும்ராவை பெரிதும் நம்பினார்கள். இரு மாதங்களுக்கு முன்பு பும்ரா காயத்தால் அவதிப்பட்டபோது, அவர் மீண்டும் ஃபிட்டாக அணிக்குத் திரும்பினால் மட்டுமே இந்தியா கோப்பை வெல்ல முடியும் என்று பலரும் கருதினார்கள். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு பௌலரும் சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன்களை விட அதிகம் நம்பப்பட்டதில்லை. அதுவும் ஒரு உலகக் கோப்பை தொடரில்! ஆனால், பும்ரா மீதான கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கை நினைத்துப் பார்க்க முடியாதது. அந்த நம்பிக்கையின் காரணத்தை இந்த உலகக் கோப்பையில் அவர் வீசிய 20 ஓவர்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் பும்ரா.

Jasprit Bumrah

இந்த உலகக் கோப்பையில் பும்ரா:

முதல் போட்டி vs ஆஸ்திரேலியா: 10-0-35-2
இரண்டாவது போட்டி vs ஆப்கானிஸ்தான்: 10-0-39-4

இந்தத் தொடரில் 20 ஓவர்கள் பந்துவீசியிருக்கும் பும்ரா வெறும் 74 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார். இந்த செயல்பாடுகள் இந்தியா வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்தவை என்பது ஒருபக்கம் இருந்தாலும், அவை எப்படிப்பட்ட மைதானத்தில், எப்படிப்பட்ட தருணத்தில் வந்திருக்கிறது என்பதுதான் அவரது மகத்துவத்தை உணர்த்தும்.

ஜஸ்ப்ரித் பும்ரா

இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய டெல்லி மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானது. எந்த அளவுக்கு சாதகமானது எனில், முதல் போட்டியில் உலகக் கோப்பையின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா. மூன்று பேட்ஸ்மேன்கள் சதமடித்து இன்னொரு சாதனை படைத்தார். இரண்டாவது போட்டியிலுமே ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாகவே இருந்தது. ரோகித் ஷர்மா அடித்த வேகத்திலேயே ஆடுகளத்தின் தன்மையை நாம் புரிந்துகொள்ள முடியும். அப்படியொரு ஆடுகளத்தில் வெறும் 39 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுப்பது சாதாரண விஷயமில்லை. இன்றைய காலகட்டத்தில் அப்படியொரு ஸ்பெல்லை அவரால் மட்டுமே வீச முடியும்.

அதேபோலத்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியும். ஸ்பின்னர்களுக்குச் சாதகமான ஆடுகளத்தில் 3.5 என்ற எகானமியில் பந்துவீசி அசத்தினார் அவர். சிக்கனமாகப் பந்துவீசியது ஒருபக்கமெனில் அதிமுக்கியமான தருணத்தில் மிட்செல் மார்ஷின் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு இந்த உலகக் கோப்பையில் ஒரு அபாரமான தொடக்கம் ஏற்படுத்திக்கொடுத்தார். தன் அதிரடி ஆட்டத்தால் போட்டியை மாற்றிவிடக் கூடிய மிட்செல் மார்ஷ் ரன் அடிப்பதற்கு முன்பே அவரை காலி செய்தார் பும்ரா. இத்தனைக்கும் முந்தைய போட்டியில் பும்ராவின் பந்துவீச்சை புரட்டியெடுத்திருந்தார் மார்ஷ். உலகக் கோப்பைக்கு முன் ராஜ்கோட்டில் நடந்த ஒருநாள் போட்டியில் பும்ராவை டார்கெட் செய்து ஆஸ்திரேலியாவுக்கு அதிரடி தொடக்கம் ஏற்படுத்திக்கொடுத்தார் அவர். ஃபோரும், சிக்ஸருமாக விளையாடிய அவர் 20 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார். அவரது விக்கெட்டை சென்னையில் வீழ்த்திவிட்டு பும்ரா கொண்டாடிய விதம் மெர்சலாக இருந்தது.

ஜஸ்ப்ரித் பும்ரா

இரண்டு போட்டிகளின் பவர்பிளேயிலும் மிட்செல் மார்ஷ், இப்ராஹிம் ஜத்ரான் என ஆட்டத்தை மாற்றக்கூடிய அதிரடி ஓப்பனர்களை எளிதிலேயே வெளியேற்றினார் பும்ரா. மிடில் ஓவர்களில் வந்து ரன்ரேட் கூடாமல் பார்த்துக்கொள்கிறார். டெத் ஓவர்களில் எதிரணியை மொத்தமாக கட்டிப்போடுகிறார், விக்கெட்டுகளும் வீழ்த்தி எதிரணிகளை நிலைகுலையவைக்கிறார். இவை அனைத்தும் வேகப்பந்துவீச்சுக்கு பெரிய அளவு உதவாத ஆடுகளங்களில். இப்படியொரு வீரர் தானே மிகப் பெரிய மேட்ச் வின்னராக இருக்க முடியும்! பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி கூட பேட்டிங்குக்கு பெரிய அளவு சாதகமாக இருக்கும் அஹமதாபாத்தில் நடக்கப்போகிறது. அங்கும் தன்னுடைய மிகச் சிறந்த செயல்பாட்டால் தாக்கம் ஏற்படுத்துவார் பும்ரா.