இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் நியூசிலாந்து அணி 4 டி20 போட்டிகள் மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இரு அணிகளும் 2-2 என சமன் செய்த நிலையில், தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்த 2 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றிபெற்று 2-1 என முன்னிலையில் இருக்கிறது.
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி லண்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. கேப்டன் டாம் லாதமின் முடிவுக்கு வலுசேர்க்கும் வகையில் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களை சொற்ப ரன்களில் வெளியேற்றி அசத்தினார் போல்ட். பேர்ஸ்டோவை 0 ரன்னில் வெளியேற்றிய அவர், ஜோ ரூட்டை 4 ரன்களில் போல்டாக்கி அசத்தினார். 13 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து அணியை 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் மாலன் இருவரும் மீட்டெடுத்தெனர். அடுத்தடுத்து அரைசதம் அடித்த இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 199 ரன்கள் சேர்த்தது.
இந்த ஜோடியை பிரிக்க என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்க, மீண்டும் பந்துவீசவந்த டிரெண்ட் போல்ட் 31வது ஓவரில் 96 ரன்கள் அடித்து சதத்தை நோக்கி சென்ற மாலனை அவுட்டாக்கி வெளியேற்றினார். அதற்கு பிறகு வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் 38 ரன்களில் வெளியேற அடுத்தடுத்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். என்னதான் ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் அட்டாக்கிங் கிரிக்கெட் விளையாடிய ஸ்டோக்ஸ், நாலாபுறமும் சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்டு கெத்து காட்டினார்.
124 பந்துகளில் 15 பவுண்டரிகள், 9 சிக்சர்கள் என பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டிய ஸ்டோக்ஸ் 182 ரன்கள் குவித்து வெளியேறினார்.
இங்கிலாந்து அணியை ஸ்டோக்ஸ் எந்தளவு காப்பாற்றினார் என்றால், அவர் வெளியேறும் போது 348-ல் 5 விக்கெட்டுகளோடு இருந்த இங்கிலாந்து ஸ்டோக்ஸ் அவுட்டான பிறகு 20 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து ஆல்அவுட்டானது.
15 பவுண்டரிகள், 9 சிக்சர்களுடன் 182 ரன்கள் குவித்த பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஜேசன் ராய் அடித்திருந்த 180 ரன்களே ஒரு இங்கிலாந்து வீரர் அடித்த அதிகபட்ச ODI ரன்களாக இருந்தது.
தற்போது ஜேசன் ராயின் சாதனையை பென் ஸ்டோக்ஸ் உடைத்துள்ளார். அந்த வரிசையில் பென் ஸ்டோக்ஸ் 182 ரன்கள், ஜேசன் ராய் 180 ரன்கள், அலெக்ஸ் ஹேல்ஸ் 171 ரன்கள், ராபின் ஸ்மித் 167* ரன்கள் என அடுத்தடுத்த இடங்களில் நீடிக்கின்றனர்.
டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று விதமான கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த வீரராக வலம் வரும் பென் ஸ்டோக்ஸ், கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு இங்கிலாந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும் தொடர்ச்சியாக இருந்த முழங்கால் காயமும், அதிகப்படியான பணிச்சுமையும் அவரை ஓய்வு என்ற முடிவுக்கு தள்ளியது.
கடந்த ஒருவருடமாக ஒருநாள் போட்டிகளில் ஓய்விலிருந்த பென்ஸ்டோக்ஸை மீண்டும் அழைத்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம். எதிர்வரும் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு வலுசேர்க்கும் வகையில் பென் ஸ்டோக்ஸ் இணைக்கப்பட்டுள்ளார். அவருடைய இணைப்பு எந்தளவுக்கு இங்கிலாந்துக்கு பலம் சேர்க்கும் என்பதை தற்போது நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஸ்டோக்ஸ் நிரூபித்து காட்டியுள்ளார்.
போட்டிகு பிறகு பேசிய ஸ்டோக்ஸ், “18 மாதங்களாக என்னால் பந்துவீச முடியுமா, முடியாதா என்ற கேள்வி பெரியதாக இருந்தது. ஆனால் தற்போது என்னால் அணிக்காக என்ன செய்ய முடியும் என்பதில் தெளிவாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி தங்களுடைய கோப்பையை தக்கவைப்பதற்காக 2023 ஒருநாள் உலகக்கோப்பையை எதிர்நோக்கியுள்ளது. பென் ஸ்டோக்ஸும் அதற்கு தயாராக இருக்கிறார்.