13வது ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி, தாம் சந்தித்த 4 போட்டிகளிலும் வெற்றிபெற்று வீறுநடை போட்டு வருவதுடன், புள்ளிப் பட்டியலிலும் 2வது இடத்தில் உள்ளது. முன்னதாக, கடந்த அக்.19ஆம் தேதி புனேயில் வங்கதேச அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இந்தப் போட்டியில், வங்கதேசம் இந்தியாவை தோற்கடித்தால் அவ்வணி வீரர்கள் என்னுடன் அமர்ந்து சாப்பிடலாம்’ என பாகிஸ்தான் நடிகை சேகர் ஷின்வாரி தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தது இணையத்தில் வைரலானது. அதற்கு ரசிகர்களும் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், இந்தப் போட்டியில் ‘டைகர் ஷோயப்’ என்று செல்லமாக அழைக்கப்படும் வங்கதேச அணியின் ரசிகரான ஷோயப் அலியை, இந்திய ரசிகர்கள் கிண்டலடித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அவரது புலி சின்னம் ரசிகர்களால் பந்தாடப்படுவதுடன், கிழிக்கவும்படுகிறது.
இதைப் பார்த்த பலரும், ‘இந்தச் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது’ என தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர், ’கிரிக்கெட்டை உண்மையாக நேசிக்கும் ரசிகர்கள் இதுபோன்ற செயலைச் செய்ய மாட்டார்கள். இந்த விஷயங்கள் ரசிகர்களிடையே பிளவை உருவாக்கும் முயற்சியாகும்’ எனத் தெரிவித்து வருகின்றனர்.
இதே கருத்தை, 2016 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியின் போது ஷோயப் அலியும் தெரிவித்திருந்தார். தோனியின் துண்டிக்கப்பட்ட தலையை வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது சுமந்தபடி போட்டோஷாப் செய்யப்பட்ட படம் இணையத்தில் வைரலானது. அப்போது இதுகுறித்து கருத்து தெரிவித்த ஷோயப், ’இவற்றைச் செய்பவர்கள் உண்மையான ரசிகர்கள் அல்ல’ எனத் தெரிவித்திருந்தார். இப்படியான மனநிலை உடைய ஒரு ரசிகரைத்தான் இந்திய ரசிகர்கள் வங்கதேச போட்டியின்போது கேலி கிண்டலுக்கு ஆளாக்கியுள்ளனர்.
அதே ரசிகரை, அந்தப் போட்டியின் பயிற்சிக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அழைத்துப் பேசியுள்ளார் என்பது ஆச்சர்யமான விஷயம். இதுகுறித்து ஷோயப், ”நான் புனே மைதானத்தின் பிரதான வாயில் அருகே நின்றுகொண்டிருந்தேன். திடீரென்று, ரோஹித் பாய் ஒரு நீலநிற காரில், கேட் அருகே வருவதைப் பார்த்தேன். நான் அவரை கைகாட்டி, ’ரோஹித் பாய்’ என்று கத்தினேன். வண்டியை நிறுத்தி என்னை அழைத்துப் பேசினார். இதை, என்னால் நம்ப முடியவில்லை. இந்திய கேப்டன் என்னுடன் பேசினார். நான் ஒரு சாதாரண ரசிகன்.
ஆனால் அவருக்கு மிகப்பெரிய மதிக்கும் திறமை இருக்கிறது. அவர் என்னிடம் நன்றாகப் பேசினார். நான் அவரது கிரிக்கெட்டை நீண்டகாலமாகப் பின்பற்றி வருகிறேன், தற்போது அவரது தீவிர ரசிகனாகவும் மாறிவிட்டேன். அவர் விளையாடுவதைவிட மேலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். ரோகித் இன்றைய போட்டியில் சதம் காணவேண்டும். அதேநேரத்தில், வங்கதேச அணி இன்று வெற்றிபெற வேண்டும். இந்திய அணி ஒரு வலுவான அணி. அவ்வணியில் ரோகித் மற்றும் கோலியைக் கண்டு பயப்படுகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார்.
கார் மெக்கானிக்காக இருந்த ஷோயப், வங்கதேச அணியின் சூப்பர் ரசிகராக பத்தாண்டுகளுக்கும் மேலாக பின்தொடர்ந்து வருகிறார். இதற்காக பல உலக நாடுகளுக்கும் அவர் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
ஓர் அணி வெற்றி பெறுவதும், தோல்வியடைவும் இயல்பாக நடக்கக்கூடிய ஒன்று. அதற்காக, ரசிகர்களை அவமானப்படுத்துவது ஏற்கக்கூடியது அல்ல.