Steve Smith Twitter
கிரிக்கெட்

ஸ்டீவ் ஸ்மித்தின் தாயை திட்டி வெளியேற்றிய ENG ரசிகர்கள்!-கூடுதல் பாதுகாப்பு வழங்க AUS கோரிக்கை!

ஆஸ்திரேலியாவின் துணை கேப்டனான ஸ்டீவ் ஸ்மித்தின் தாயாரை ஆபாசமாக பேசி லார்ட்ஸ் மைதானத்தை விட்டே வெளியேற்றிய ரசிகர்களின் அணுகுமுறையால் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு கூடுதல் பாதுகாப்பை கோரியுள்ளது ஆஸ்திரேலிய அணி.

Rishan Vengai

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவின் விக்கெட்டை சர்ச்சைக்குரிய வகையில் பெற்றது பெரிய விவாதத்திற்குரிய பொருளாக மாறியது. இந்த வெளியேற்றுதலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கருத்துகள் வந்தாலும், சில தரப்பு இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவையும் “மந்தமான கிரிக்கெட்டர்” என்று விமர்சனமும் செய்தது.

சர்ச்சைக்குரிய வகையில் பெறப்பட்ட பேர்ஸ்டோ விக்கெட்!

சம்பவத்தின்படி, அன்றைய தினம் க்ரீன் வீசிய 51 ஆவது ஓவரில் இறுதிப் பந்தை அடிக்காமல் பேர்ஸ்டோ குனிந்து கொண்ட நிலையில், பந்து ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் சென்றது. அப்போது ஓவர் முடிந்தவிட்டதே என்று பேர்ஸ்டோ உடனடியாக கிரீஸை விட்டு வெளியேறி பென்ஸ்டோக்ஸை நோக்கி சென்றார். எந்த ஒரு பேட்டரும் தன் அருகில் இருக்கும் ஸ்லிப் வீரரையோ, விக்கெட் கீப்பரையோ அல்லது அம்பயரையோ பார்த்து விட்டே செல்வர். ஆனால் பேர்ஸ்டோ எதையும் செய்யாமல் சாதாரணமாக நடந்து சென்றார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அலெக்ஸ் கேரி உடனடியாக பந்தை ஸ்டெம்ப் நோக்கி வீசினார். பந்து ஸ்டெம்பில் பட்டதும் ஆஸ்திரேலிய வீரர்கள் நடுவரிடம் அவுட்டிற்காக முறையிட்டனர். ஆஸ்திரேலிய அணியின் இந்த அணுகுமுறையை எதிர்ப்பார்க்காத பேர்ஸ்டோ அதிர்ச்சிக்குள்ளானார். முடிவு மூன்றாம் நடுவருக்கு செல்ல, அவர் பேர்ஸ்டோ அவுட் என அறிவித்தார்.

நடுவரின் இந்த அறிவிப்பு இங்கிலாந்து வீரர்களிடையேயும் ரசிகர்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் ட்விட்டரில் பேர்ஸ்டோ அவுட் ஆன காணொளியை பதிவிட்டு தனது அதிருப்தியை தெரிவித்தது. இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸும், “ஓவர் முடிந்துவிட்டது என அம்பயர் அறிவிக்காத போது, அது அவுட் என்பதை மறுக்க முடியாது தான். ஆனால் இப்படி ஒரு விக்கெட்டை பெற வேண்டாம் என்பது தான் என்னுடைய கருத்து” என்று கூறியிருந்தார்.

லார்ட்ஸ் மைதானத்தின் லாங் ரூமில் முற்றிய மோதல்!

இதைத்தொடர்ந்து ஐந்தாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய வீரர்கள் ‘டிரெஸ்ஸிங் ரூம்’ செல்லும் போது, லார்ட்ஸ் மைதானத்தின் லாங் ரூமில் இருந்த மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி) உறுப்பினர்களுக்கும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பேர்ஸ்டோவின் விக்கெட்டிற்காக இருதரப்பும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியதால், மோதல் உண்டாகும் சூழல் உருவானது.

MCC apologises

உடனடியாக மைதான பாதுகாவலர்கள் தலையிட்டு இருவரையும் பிரித்து விட்டனர். இச்சம்பவம் குறித்து ஆஸ்திரேலியா சார்பில் எம்.சி.சி.,யிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரை தொடர்ந்து நடந்த அசம்பாவிதத்திற்கு மன்னிப்பு கேட்ட மெல்போர்ன் கிரிக்கெட் கிளப், அவர்களின் 3 உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

3-வது டெஸ்ட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு கேட்ட ஆஸ்திரேலியா! ஏன்?

பேர்ஸ்டோவின் சர்ச்சைக்குரிய நீக்கம் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. இதனால் இருநாட்டு ரசிகர்களிடையே இருந்த நல்லுறவிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சரி இப்பிரச்னை 2வது டெஸ்ட்டோடு ஓய்ந்துவிட்டது என்று நினைத்தால், அடுத்த டெஸ்ட்டிலும் தொடரும் என்பதுபோல, பல சம்பவங்கள் நடந்தன.

இதனால் 3-வது டெஸ்ட் நடைபெறும் ஹெடிங்லி மைதானம், பேர்ஸ்டோவின் சொந்த மண்ணிலுள்ள மைதானம் என்பதால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் கூடுதல் பாதுகாப்பை கோரியுள்ளது ஆஸ்திரேலியா அணி. இதுதொடர்பாக ‘நாங்கள் எங்கள் குடும்பத்தினர் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை விரும்பவில்லை’ என்று ஆஸ்திரேலிய பத்திரிகையொன்றில் அவர்களேவும் தெரிவித்துள்ளனர்.

Smith

தி ஆஸ்திரேலியன் பத்திரிகையின் தகவலின் படி ‘அன்றைய தினம் (2-வது டெஸ்ட்டின் போது) லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனான ஸ்டீவ் ஸ்மித்தின் தாயாரை இங்கிலாந்து ரசிகர்கள் தகாத வார்த்தைகளை கூறி, லார்ட்ஸ் மைதானத்தை விட்டே வெளியேற்றியுள்ளனர். அவர் யார் (ஸ்மித்தின் தாய்) என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஒரு ஆஸ்திரேலியன் என்பதாலே அவர்மீது தாக்குதல் நடந்துள்ளது. அதை பொருட்படுத்த முடியாமல் போட்டி முடிவடைதற்கு முன்பாகவே மைதானத்தை விட்டு வெளியேறியுள்ளார் அவர். ஸ்மித்தின் தாய் வெளியேறிய நிலையில், ஆஸ்திரேலிய அணியின் ஸ்டாஃப் ஒருவரின் 11 வயது மகன் வெளியேற முடியாமல் தனித்து மாட்டிக்கொண்டுள்ளார். அவரை கிண்டல் பேச்சுகளின் மூலம் கண்ணீர் விட்டு அழவைத்துள்ளனர்’ என தெரியவருகிறது.

bairstow

ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி ஹெடிங்லியில் இன்று தொடங்க உள்ள நிலையில், 2-0 என முன்னிலை பெற்றிருக்கும் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்க உள்ளது. மீதமிருக்கும் 3 போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் வெற்றிபெற்றால் கூட ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றிவிடும். அப்படி கைப்பற்றும்பட்சத்தில், 2001-க்கு பிறகு 20 வருடங்களில் இங்கிலாந்தை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்திய கேப்டன் என்ற பெருமையை பெறுவார் பேட் கம்மின்ஸ்.