rahul Dravid | Ashwin Shahbaz Khan
கிரிக்கெட்

"அஷ்வின் மீண்டும் அணிக்குத் திரும்பியது தான் இத்தொடரின் சிறந்த தருணம்" - ராகுல் டிராவிட்

அஷ்வின் அப்போது சந்தித்த கடினமான தருணங்களைக் கடந்து அவர் மீண்டும் வந்து அணியில் இணைந்தது சாதாரண விஷயமல்ல.

Viyan

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என அபாரமாக வென்று அசத்தியிருக்கிறது இந்தியா. முதல் போட்டியில் தோற்றிருந்த இந்திய அணி, அதன்பிறகு கம்பேக் கொடுத்து அசத்தலாக தொடரை வென்றது. பல முன்னணி வீரர்கள் இல்லாத நிலையிலும், இளம் வீரர்கள் சிறப்பாக தங்கள் பங்களிப்பைக் கொடுக்க, இந்தியா இங்கிலாந்தை புரட்டி எடுத்தது. இத்தொடர் வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மிகவும் திருப்திகரமாகப் பேசினார்.

இந்த வெற்றிக்குப் பிறகான தன் மனநிலையைப் பற்றிப் பேசிய டிராவிட், "உண்மையை சொல்லவேண்டுமானால் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. முதல் டெஸ்ட்டில் தோற்று தொடரில் பின்தங்கியது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. அதிலிருந்து இந்திய அணி மீண்டு வந்ததகு வீரர்களையும், ஒட்டுமொத்த அணியையும் பாராட்டியாகவேண்டும். முதல் போட்டியை தோற்றிருந்தாலும் அணிக்குள் ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்கிவைத்திருந்தோம் என்று நினைக்கிறேன். நாங்கள் கம்பேக் கொடுத்து தொடரை வெல்வதற்கான திறமை இருக்கிறது என்று நம்பினேன். இத்தொடரில் பல்வேறு இக்கட்டான நிலைகளிலும் நாங்கள் இதை எதிர்கொண்ட விதம் மகிழ்ச்சியளிக்கிறது. சரியான தருணங்களில் யாரேனும் ஒருவர் முன்வந்து சிறப்பான செயல்பாட்டைக் கொடுத்தனர். ஒரு பயிற்சியாளராக இதைவிட என்னால் பெருமை கொள்ள முடியாது" என்று கூறினார்.

கோலி, ராகுல், ஷமி போன்ற பல சீனியர்கள் முழுமையாக ஆட முடியாத நிலையிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. படிக்கல், படிதார், ஆகாஷ் தீப், சர்ஃபராஸ், துருவ் ஜுரெல் என 5 வீரர்கள் இந்தியாவுக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார்கள். அனைவருமே தங்கள் பங்களிப்பை அணிக்குக் கொடுத்தார்கள். அது தனக்கு மிகவும் நிறைவாக இருப்பதாகக் கூறினார் டிராவிட். "அனுபவமும், தரமும் நிறைந்த முக்கியமான வீரர்கள் இல்லாதபோது இந்த செயல்பாட்டைக் கொடுத்தது இன்னும் சந்தோஷமாக இருக்கிறது. பொழுதுபோக்கு பக்கமிருந்து பார்த்தால், இது ரசிகர்களுக்கு இழப்பு தான். நீங்கள் உலகத்தர வீரர்களை பார்க்கவே அதிகம் விரும்புவீர்கள். இருந்தாலும், நான் எப்போதும் நம்புவதுபோலவே பல திறமையான வீரர்கள் இத்தொடரில் தங்கள் முத்திரியை பதித்திருக்கிறார்கள். அவர்கள் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி ஜொலித்ததை இந்தத் தொடர் முழுவதுமே பார்த்திருக்கிறோம். இந்தத் தொடரில் ஒட்டுமொத்த அணியுமே முக்கியமான பங்களிப்புகளைக் கொடுத்திருக்கிறது. அதுதான் எங்களுக்கு இன்னும் அதிக சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது" என்றார் டிராவிட்.

rahul Dravid | Ashwin

மேலும், "இப்படியொரு அணியோடு விளையாடுவது எனக்கு பெருமையாக இருக்கிறது. அதேபோல் இது என்னைப் பற்றியது மட்டும் அல்ல. பல்வேறு சிறப்பான மனிதர்கள் இதற்குப் பங்களித்திருக்கிறார்கள். அவர்களோடு பணியாற்றியதும் பெருமையளிக்கிறது. ரோஹித் ஷர்மாவுடன் வேலை செய்வது சிறப்பான ஒன்று. அவர் ஒரு சிறந்த லீடர். மற்ற வீரர்கள் அவரோடு நன்கு இணங்கிப் போகிறார்கள். அதைப் பார்க்கவே நன்றாக இருக்கிறது. அதேபோல் தலைமை தேர்வுக்குழு தலைவர் அகர்கரையும் அவரது அணியையும் கூட பாராட்டியாகவேண்டும். இங்கு வரும் இளைஞர்களை நானோ ரோஹித்தோ அதிகம் பார்ப்பதில்லை. அகர்கரின் அணி தான் அவர்களை அதிகம் பார்க்கிறது. அவர்கள் சரியான வீரர்களை தேர்வு செய்திருக்கிறார்கள். அவர்கள் இங்கு வந்து நன்கு செயல்படவும் செய்திருக்கிறார்கள். தேர்வுக்குழு தலைவராக இருப்பது எளிதல்ல. இது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தும் வேலை. ஆனால், சிறப்பாக செயல்பட்ட அகர்கரின் அணிக்கு பாராட்டுகளை தெரிவித்தே ஆகவேண்டும்" என்றும் கூறினார் இந்தியாவின் பயிற்சியாளர்.

இந்தத் தொடரில் மிகவும் முக்கியமான தருணம் என்று தான் கருதுவது எது என்று டிராவிட்டிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய அவர், "என்னால் சரியாக சொல்ல முடியவில்லை. பல சிறப்பான செயல்பாடுகளை நம் வீரர்கள் கொடுத்திருக்கிறார்கள். அதிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்வது எளிதல்ல. ஒரு விஷயத்தை சொல்லவேண்டுமெனில், அஷ்வின் அணிக்கு மீண்டும் வந்து இணைந்ததைச் சொல்லலாம். அவர் அப்போது சந்தித்த கடினமான தருணங்களைக் கடந்து அவர் மீண்டும் வந்து அணியில் இணைந்தது சாதாரண விஷயமல்ல. பெர்ஃபாமன்ஸ்கள் வரும், போகும். ஆனால் அஷ்வின் அந்தத் தருணத்தில் அணிக்குப் பங்களிக்கவேண்டும் என்று நினைத்து வந்தது சாதாரண விஷயமல்ல. அதுதான் இந்த அணி எப்படிப்பட்டது என்பதைத் தெளிவாக சொல்கிறது. என்னைப் பொறுத்தவரை அதுதான் இத்தொடரின் தனித்துவமான தருணம் என்று சொல்வேன். இப்படியொரு நல்ல இனிமையான சூழ்நிலை உருவாகியிருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறினார்.